Posts

Showing posts from March 18, 2018

The Shape of water - இரு ஜீவ இசை

Image
ஒரு ஊமை இளம்பெண் (எலிசா), மனித உருவம் கொண்ட நிலநீர் வாழும் (Humanoid Amphibion) உயிரினத்தை பார்த்து, 'You'll never know... just how much... i love you...' என்று சொன்னால் எப்படி இருக்கும்? நேரில் பார்த்தால் மிரண்டு ஓடும் ஒரு உயிரினத்தோடு நெருங்க நினைக்கிறாள் எலிசா. நெருங்குகிறாள். அதுவும், மறுக்கவில்லை. மறக்கவுமில்லை. இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல வார்த்தைகளற்ற ஒரு பெருவெளி படர்கிறது. அதற்கு உணவு கொடுக்கிறாள். உணர்வு கொடுக்கிறாள். உள்ளம் கொடுக்கிறாள். உடல் கொடுக்கிறாள். உயிரையும் கொடுக்கிறாள். அதை, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டு குளியல் தொட்டியில் வைத்து காதல் செய்கையிலும்... தயங்கித் தயங்கி முதல் முறையாக தன்னையே அளிக்கயிலும்... அறை முழுதும் தண்ணீர் நிரப்பி ஒரு காதல் கடல் செய்து, அதனோடு கலந்து கரைகையிலும்... உச்சக்கட்ட பைத்தியக்காரத் தனத்திற்கு புது அத்தியாயம் படைக்கிறாள் எலிசா. எப்படிப் பார்த்தாலும் இது பைத்தியக்காரத் தனம் தான். பைத்தியக்காரத் தனத்தை எப்படிச் சொன்னாலும் அது காதல் தான்.