சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. குடியையும், போதையையும், சாலைகளில் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுவதையும், சமூக வலையுலகில் அதிக லைக் வாங்குவதையும், கண்டபடி திண்பதையும், தியேட்டர் வாசலில் ஆடுவதையும், பயணம் போவதாக நினைத்து சுற்றுலா சென்று திரும்புவதையுமே மகிழ்ச்சி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அற்பங்கள், கீழான துள்ளல்கள், வெறும் அலட்டல்கள் என்று உணரவே முடியாத கவனச்சிதறல்கள் நிறைந்த தொலைவில் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக நம் குடும்பங்கள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சி என்பவை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை கால சிறிய அளவிலான கொண்டாட்டங்களே. அவற்றையும் கூட நேர விரயமாக நினைத்துக் கொண்டு படத்திற்கு போகின்றவர்களும், நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்து போட்டோ எடுத்து கழிப்பவர்களும் இருக்கிறார்கள். மேலான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அடிப்படையான மனப்பயிற்சியை நம் குடும்பங்கள் அளிப்பதில்லை. அரிதாகவே இலக்கியம், இசை உள்ளிட்ட கலைகள் வழியாக உயர்ந்த ரசனை வாய்க்கிறது. இதுபோன்ற உயர் இன்பங்களை அளிக்க நம் சராசரிக் குடும்பங்களுக்கு மரப...