தங்கலான் - தங்கக் கல்லானது ஏன்?
.jpeg)
வலி நிறைந்த ஒரு மக்களின் வரலாறும், எழுச்சியும் படமாகும் போது தன்னியல்பாக அதன் பலமாக மாற வேண்டிய அம்சங்களே தங்கலான் படத்தில் நிகழாமல் போனது எதிர்பாராத அதிர்ச்சி தான். கர்நாடக மாநிலம் கோலாரில் தங்கச் சுரங்கம் தோண்டுவதற்காக 1800களில் தமிழகத்தின் வட ஆற்காடு பகுதிகளில் இருந்து கூலி அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட பறையர் சமூக மக்கள் குறித்த வரலாற்றை புனைவாக்கியிருக்கிறார்கள். நிலவுடைமையாளர்களின் சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் தங்கலான் மற்றும் அவரது ஊரார்களுக்கு கோலாரில் தங்கச் சுரங்கம் தோண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. உள்ளூர் பண்ணையாரின் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட அதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இழந்த தங்களது நிலங்களை மீட்க நினைக்கிறார் தங்கலான். தங்கம் தோண்ட வந்த இடத்தை ஒரு மாயப்பெண் காவல் காக்கிறது. அந்தப்பெண் தங்கலானின் மூதாதையர் எனவும், அவர்களிடமிருந்து பிரிந்து வந்து இவர்கள் நிலமிழந்ததாகவும், பின் அந்நிலத்தை மீட்க, மன்னர்களுக்கு இதே இடத்தில் தங்கம் எடுத்துக் கொடுத்ததாகவும் தங்கலானை ஒரு கனவு துரத்துகிறது. அதன்படி தங்களுடைய...