கனவின் நிலம் சோழம்!

என் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறியது. சோழர் கால ஆலயக்கலை மரபின் 170 ஆண்டுகால குறுக்குவெட்டு தோற்றத்தை ஒரே நாளில் கண்டேன். கி.பி. 1000ல் துவங்கி 1173 வரையில் பெரும் கலைக் கொடையென சோழப் பேரரசர்கள் நிர்மாணித்த தஞ்சைப் பெருவுடையார், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்களை தொடர்ச்சியாக பார்த்தறிந்தது என் முழு வாழ்வுக்குமான களிப்பின் பெருக்கு. 2017ல் பணியிடத்தில் எனக்கேற்பட்ட பெரும் அகச்சோர்விலிருந்து மீளும் பொருட்டு வெறிகொண்டு நான் வாசித்த நூல்களில் ஒன்று உடையார். 6 பாகங்களையும் கணினித்திரையிலேயே படித்து முடித்திருந்தேன். என் 22 வயதில் நான் வாசித்திருந்த முதல் பெரிய நூல் அது. பொன்னியின் செல்வனும், உடையாரும் சோழத்துடன் உணர வைக்கும் 'ஜென்மாந்திர பந்தம்' எனக்கு அன்று துவங்கியது. அதற்கு முன், 10 வயதில் பள்ளிச்சுற்றுலாவின் போது முதன்முறை சென்றிருந்த தஞ்சை வெறும் தலையாட்டி பொம்மையின் நினைவாக எஞ்சியிருந்தது. உடையாருக்கு பின் தான் அவ்விதை முளைத்தெழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது பெரும் பித்தென எனை ஆட்கொள்ளத் துவங்கியது. சோழம் ஒரு சுழலென சூழ்ந்திழுத்து, பெருவுடையார் குறித்த...