Posts

Showing posts from August 17, 2024

அவளதிகாரம் - நமையாளும் நாம்!

Image
மகள் பிறந்திருக்கிறாள். பிரபஞ்சத்தின் ஒரு உயிர்த்துகளாக இந்த வாழ்வு முழுமை பெற்றிருக்கிறது. மருத்துவமனையில் முதன்முதலில் அவளது அழுகுரல் கேட்ட அந்நொடி, பத்தாண்டுகளுக்கு முன் எனக்கும் வர்ஷினிக்குமான காதல் சூல் கொண்ட தருணம் தான் நினைவை நிறைத்தது.  எவ்வளவு இடர்களடர்ந்த நீண்ட பயணம் இது. மீள மீள இழுத்துச் சென்று கொண்டேயிருந்த வாழ்வின் எதிர்பாரா சுழல்கள் எங்கள் திருமணத்தில் தான் சற்று ஓய்ந்தன. அதன் பின் நாங்களிருவரும் மூவராக அவளை பொத்திப் பொத்திக் காத்து தனியாகவே பயணித்த இந்த பத்து மாதங்கள். காலமே ஒரு கர்ப்பச் சூடாக எங்களை சூழ்ந்திருந்தது. முதல் மாதத்திலிருந்தே மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் தொடர்ந்தன. எந்தக்காதல் பத்தாண்டுகள் நம்மை அழைத்து வந்ததோ, அந்தக்காதல் இதையும் பாதுகாத்து நம் கைகளில் ஒப்படைக்கும் என நம்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை எங்களுக்கு. எல்லாவற்றையும் இப்போது நினைத்துப்பார்க்கையில் பெருநியதி எத்தனை கருணை மிக்கது எனத் தோன்றுகிறது.  ஏழாம் மாதத்தில் ஒரு மருத்துவ சோதனையின் போது பேச்சின் போக்கில், "அவன் வேற குத்தவச்சு உக்காந்துட்டு இருக்கான்..." என மருத்துவர் பிரக்ஞையின்ற...