சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. குடியையும், போதையையும், சாலைகளில் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுவதையும், சமூக வலையுலகில் அதிக லைக் வாங்குவதையும், கண்டபடி திண்பதையும், தியேட்டர் வாசலில் ஆடுவதையும், பயணம் போவதாக நினைத்து சுற்றுலா சென்று திரும்புவதையுமே மகிழ்ச்சி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அற்பங்கள், கீழான துள்ளல்கள், வெறும் அலட்டல்கள் என்று உணரவே முடியாத கவனச்சிதறல்கள் நிறைந்த தொலைவில் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதிகபட்சமாக நம் குடும்பங்கள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சி என்பவை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை கால சிறிய அளவிலான கொண்டாட்டங்களே. அவற்றையும் கூட நேர விரயமாக நினைத்துக் கொண்டு படத்திற்கு போகின்றவர்களும், நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்து போட்டோ எடுத்து கழிப்பவர்களும் இருக்கிறார்கள். மேலான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அடிப்படையான மனப்பயிற்சியை நம் குடும்பங்கள் அளிப்பதில்லை.அரிதாகவே இலக்கியம், இசை உள்ளிட்ட கலைகள் வழியாக உயர்ந்த ரசனை வாய்க்கிறது. இதுபோன்ற உயர் இன்பங்களை அளிக்க நம் சராசரிக் குடும்பங்களுக்கு மரபார்ந்த வாய்ப்பிருப்பதில்லை. ஆனால், உழைத்து, உண்டு, சேர்த்து, இறக்கிற வாழ்வியல்பு கொண்டவர்களுக்கும் உயர்ந்த இன்பங்களை அளிக்கிற சாத்தியமுள்ள ஒன்று இருக்கிறதெனில் அது திருவிழா தான். அதையும் வெறுமே 'சாமி பார்த்து' முடிப்பவர்களே அதிகமிருக்கிறார்கள்.
எந்தத் திருவிழாவும் நேற்று உருவாகி அப்படியே இன்று நம்மிடம் வந்தவை அல்ல. பல நூறாண்டுகளாக நெடிய சமூக நெருக்கல்களுக்கும், அரசர்களின் அதிகார பிரயோகங்களுக்கும், அந்நிய படையெடுப்புகளுக்கும், இயற்கை பேரிடற்களுக்கும், பஞ்சங்களுக்கும் உள்ளாகி, உடைந்து, திரிந்து, கலைந்து பின்னர் ஒரு வடிவம் பெற்று வந்தவை. பல்லாயிரம் பண்பாட்டு அசைவுகளுக்கு இசைந்து இசைந்து திரண்டு மேலெழுந்து வந்து நிற்பவை. சிறு சிறு ஓடைகள், சிற்றாறுகள் இணைந்து இணைந்து பெருகி ஒரு ஆறு உருவாகி வருவது போல.
ஒரு பண்பாட்டுப் பேராறாக உருவெடுத்து நுரைத்து, சுழித்து, ஆர்ப்பரித்து நம் தமிழ் நிலத்தில் இன்றும் நிலைத்திருக்கிற ஒரு விழா எனில் அது மதுரை சித்திரைத் திருவிழா தான். உலகம் முழுவதும் இன்றுள்ள நீண்ட திருவிழாக்களில், நீடித்த பெருந்திரளை தக்க வைத்துக் கொண்டிருக்கிற சில விழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. அதனாலேயே இதை 'சித்திரைப் பெருவிழா' என்று குறிக்கிறது மீனாட்சி அம்மன் கோவில்.
மதுரையைப் பற்றி பொதுத்தளத்தில் நெடுங்காலமாக நடைபெற்று வரும் சுயபெருமை சார்ந்த கதையாடல்கள் ஒரு மதுரைக்காரனாக எனக்கே கொஞ்சம் அயற்சியை அளித்தவை தான். 'எல்லா ஊருலயும் தான் கொண்டாட்டம் நடக்குது... அப்பறம் மதுரைக்கு மட்டும் அப்படியென்ன விசேஷம்?!' என்று தான் தோன்றின. அதிலும், இளமைக் காலத்தில் மதுரையிலிருந்து இடம்பெயர்ந்து சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கையில் இந்தக்கேள்விகள் கடுமையாக அலைக்கழித்திருக்கிறது.
மதுரையின் ஏதோ ஒரு சாலையில் ஒருபுறமிருந்து மறுபுறத்திற்கு அழகர் கடந்து போவதை காட்டி, 'சாமிய கும்பிட்டுக்கடா' என்று சொல்லி, திண்பதற்கும், விளையாடுவதற்கும் எதையோ கொடுத்து அழைத்து வரப்பட்ட திருவிழா நினைவுகள் கொண்டவர்களில் ஒருவன் தான் நானும். என் போன்றோர்க்கு 'மதுரையின் பெருமை'க் கதைகள் எவ்வித ஆழுணர்வும் அளிக்காதது ஒரு வகையில் நியாயம் தான்.
இளமையிலேயே மதுரையில் மீள்வாழ்வு வாய்த்த பின்னர் எனக்கிருந்த முதல் கனவே, சித்திரைத் திருவிழாவை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே. மீனாட்சி கோவில் கொடியேற்றத்திலிருந்து, அழகர் மலைக்கு திரும்பும் வரை அந்த 20 நாட்களும் திருவிழாவின் முடுக்குகளிலெல்லாம் அலைந்து திரிய வேண்டுமென முடிவெடுத்தேன். ஒருவேளை அப்படி வெறுமென திரிந்திருந்தால் மேலோட்டமான கொண்டாட்டங்களின் தொகுப்பாக மட்டுமே சித்திரைத் திருவிழா நினைவில் நின்றிருக்கும். பின்னால் அதுவும் வலுவிழந்து மீண்டும் மதுரை சலித்திருக்கும். அப்படியானதொரு கெடுவாய்ப்பு நேராமல் காப்பாற்றியது தொ.பரமசிவனின் 'அழகர்கோயில்' நூல். அந்நூலை எனக்கு அன்று பரிந்துரைத்திருந்த எனக்கான வழிநடத்துனரில் ஒருவரும், ஆவணப்பட இயக்குனருமான தயாளன் சாரை இப்போது உளம்நிறைய நினைத்துக் கொள்கிறேன்.
அழகர்கோயில் நூலை ஒரு வரலாற்று புனைவு இலக்கியத்துக்கு இணையான தீவிரத்துடன் ஒரு நாள் முழுவதும் வாசித்த பின்னர் பேச்சற்று, நிலையற்று தவித்தேன். அவ்வளவு கொந்தளிப்பான மனநிலையில் நான் அதற்கு முன்னர் இருந்ததே இல்லை.
என் ஒட்டுமொத்த நினைவுக் குவியல்களுக்குள், பழைய அரண்மனை போல காரை பெயர்ந்து, தூசு படிந்து நின்று கொண்டிருந்த சித்திரைத் திருவிழா குறித்தான கட்டுமானம் ஒரு நொடியில் நொறுங்கி சரிந்தது. அந்த இடிபாடுகளுக்குள் யானை ஒன்று அசைவது போல அழகர்கோயில் நூல் பாய்ச்சிய ஒளி அசைந்து கொண்டேயிருந்தது.
மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் ஆழ்வார்புரத்தில் அத்தனை லட்சம் களிவெறிக் குரல்களுக்கு நடுவே இருந்தபோதிலும் கடழால அமைதியில் என் மனமிருந்தது. அழகர் வருவதற்காக மொத்த பாண்டிய நாடும் காத்திருக்கிறது. கீழ்வானம் அப்போது, செங்கடல் அலையலையாய் கரை நோக்கி வருவது போல மெல்ல மேலேறி வந்து கொண்டிருந்தது. அழகரின் குடைகளும், விசிறிகளும் வந்துவிட்டன. வெள்ளம் ஹோ...வென இரைந்து வருவது போல தூரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆரவாரம் முழங்கியெழ, அதே வேகத்தில் ஆழ்வார்புரம் வந்தார் அழகர். அவ்வளவு நேரம் இடிபாடுகளுக்குள் அசைந்து கொண்டிருந்த அந்த யானை உச்சவெறியில் எழுந்து நின்று துதிக்கை உயர்த்தி பிளிறியது. அந்த இடிபாடுகள் மொத்தமும் சேர்ந்தெழுந்து தஞ்சை பெரியகோயில் விமானம் போல நின்றன.
சித்திரைத் திருவிழா இப்போது நிஜமாகவே பெருவிழாவிற்கான அர்த்தத்தை ஏந்தியிருந்தது. அதுவரையில் எனக்கிருந்த சித்திரைத் திருவிழா குறித்தான மொத்த புரிதலும் சுயமிழந்து, பொன்னொளி போர்த்திய கணமொன்றில் கள்ளழகர் என்முன் மலை போல் நின்றிருந்தார். நெஞ்சுக்குள் காற்றடைத்த பந்தொன்று அழுத்தம் தாளாமல் வெடித்து விடும் போலிருந்தது. ஓ...வென்று கத்தி அழுது ஓடிச்சென்று அழகரை கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அழகர் அப்போது கடவுள் என்பதை கடந்து ஒரு புரட்சியாளர் போல தெரிந்தார். கோவிலுக்குள் மக்கள் வருவதற்கிருந்த தடையோடு ஒப்பிட்டால், மக்களைத் தேடி, மக்களின் கோலத்தில், மக்களுடன் இருந்து, மக்களின் உணவை உண்டு, ஆட்டுத்தோல்பை நீரில் குளித்து, மக்களுடன் களித்திருக்க வரும் அழகர் புரட்சியாளர் அல்லாமல் யாராக இருக்க முடியும்.
அழகர்கோயிலை ஒட்டியுள்ள அத்தனை சாதியினரையும் தன்னுள் அணைத்துக் கொண்டது, கள்ளர் திருக்கோலம் வழியாக மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது, அழகரின் அடியவர்கள் மூலம் மீனாட்சியின் தேரோட்டத்திற்கு உதவுவது, துலுக்க நாச்சியார் மூலம் இஸ்லாமிய மக்களுடன் அழகர் கொள்ளும் நல்லுறவு என தமிழ்நாட்டு வைணவம் பண்பாட்டளவில் ஒரு புரட்சியை செய்துள்ளதாக தொ.பரமசிவன் சொன்ன வார்த்தைகள் உயிர்பெற்று மீனாட்சியின் தேர் போல அசைந்து நகர்ந்து காலாதீதமாக முன்சென்று கொண்டிருக்கின்றன.
வைகை ஆற்றங்கரையிலும், தேரோடும் மாசி வீதிகளிலும் குவிந்திருந்த மக்களைப் பார்க்க பார்க்க சித்திரை வெயிலை விடவும் உக்கிரமேறிக் கொண்டிருந்தது பண்பாடு. எல்லா சாதியினரும் சூட்டிக்கொள்ளும் பெயருள்ள ஒரு பெண் - மீனாட்சி. எல்லா சாதியினருக்கும் குல தெய்வமாகும் ஒரு ஆண் - அழகர். எனில் இருவரும் மதுரையெனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் அல்லாமல் எப்படி மக்களுடன் இன்னமும் இப்படியெல்லாம் கூடிக் களித்திருக்க முடியும். அதனால் தானோ என்னவோ, பக்தியுணர்வை விடவும் கொண்டாட்ட உணர்வு மிக்கவர்களாக மாறிப் போனார்கள் மதுரைக்காரர்கள். அழகரையும், மீனாட்சியையும் கொண்டாடுவதன் வழியாக தங்களுடைய வாழ்வைத் தான் கொண்டாடிக் கொள்கிறார்கள்.
இப்படியொரு பேரின்பத்தை, பெருமகிழ்வை தோளில் வைத்து கைமாற்றி அளிப்பதை விடவும் ஒரு குழந்தைக்கு தகப்பன் அளிக்கிற வேறொரு சிறந்த சொத்து எது?
அழகர் வேடமிட்டு ஆடும் அழகர்களுடன் ஆடுவதற்கு கற்றுத் தராமல் வேறெதை மகிழ்வென கற்றுத் தந்துவிட முடியும்?
'கூட்டமே அலர்ஜி' என சிலுப்பிக் கொள்கிறவர்களின் மனநோய்க்கு மருந்து, ஒரு முறை சித்திரைத் திருவிழாவில் அவர்களை கலப்பது தான். திரளோடு சேர்ந்து, திரளில் கரைவது ஒருவகை ஆணவமழிதல். தன்னிலை இழத்தல். இயற்கை நமக்களித்த நாட்களை நிறைவளிக்கும்படி வாழ்வதற்கு இதைவிட எளிய வழி வேறில்லை.
Comments