தங்கலான் - தங்கக் கல்லானது ஏன்?

 


வலி நிறைந்த ஒரு மக்களின் வரலாறும், எழுச்சியும் படமாகும் போது தன்னியல்பாக அதன் பலமாக மாற வேண்டிய அம்சங்களே தங்கலான் படத்தில் நிகழாமல் போனது எதிர்பாராத அதிர்ச்சி தான்.


கர்நாடக மாநிலம் கோலாரில் தங்கச் சுரங்கம் தோண்டுவதற்காக 1800களில் தமிழகத்தின் வட ஆற்காடு பகுதிகளில் இருந்து கூலி அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட பறையர் சமூக மக்கள் குறித்த வரலாற்றை புனைவாக்கியிருக்கிறார்கள். 


நிலவுடைமையாளர்களின் சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் தங்கலான் மற்றும் அவரது ஊரார்களுக்கு கோலாரில் தங்கச் சுரங்கம் தோண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. உள்ளூர் பண்ணையாரின் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட அதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இழந்த தங்களது நிலங்களை மீட்க நினைக்கிறார் தங்கலான். தங்கம் தோண்ட வந்த இடத்தை ஒரு மாயப்பெண் காவல் காக்கிறது. அந்தப்பெண் தங்கலானின் மூதாதையர் எனவும், அவர்களிடமிருந்து பிரிந்து வந்து இவர்கள் நிலமிழந்ததாகவும், பின் அந்நிலத்தை மீட்க, மன்னர்களுக்கு இதே இடத்தில் தங்கம் எடுத்துக் கொடுத்ததாகவும் தங்கலானை ஒரு கனவு துரத்துகிறது. அதன்படி தங்களுடைய உழைப்பால் எடுக்கப்பட்ட தங்கம் தங்களுக்கே சொந்தம் என தங்கலான் மக்கள் உரிமை கோருகின்றனர்.  


புத்தருடைய "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்ற தத்துவ நோக்கின்படி வழிமாறிய இச்சமூகத்தினர், சோழர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களுக்காக தங்கள் நிலங்களை பறி கொடுத்து, நிலவுடைமை காலத்தில் அதே நிலங்களில் அடிமைகளாக்கப்பட்டு, ஆங்கிலேயர் காலத்தில் வதைகளுக்கு உள்ளாகி, பின்னர் எல்லாவற்றிலிருந்தும் மீள்வதற்கான வழியை அவர்களே கண்டடைவது தான் கதையின் நோக்கம்.


கதையாக தன்னளவில் முழுமை பெறும் முன்னரே கருத்துக்களை செருகிக்கொண்டே வந்ததில் திரைக்கதை சீர்மையிழந்து விட்டது. கருத்து எனும் எலும்பின் மேல் கதையை சதையாக ஒட்ட வைத்தது போல. ஒரு உண்மை சம்பவம் புனைவாக பரிணமிக்கையில் ஏற்படும் மையமின்மை பிழை இப்படத்தில் நிகழ்ந்துள்ளது.


யதார்த்தவாத தன்மையில் தங்கலானின் வாழ்க்கைக்குள் விரிந்து கொண்டே செல்லும் திரைக்கதை, தங்கத்தை பாதுகாக்கும் மாயப்பெண் காட்சிகளால் கற்பனாவாதத் தன்மைக்கு தாவுகிறது. முற்பகுதியில் இருந்த திரைக்கதையின் பிடி, பிற்பகுதியில் விலகி நிலையற்று நிற்கிறது. இறுதிக்காட்சிகளில் இன்னும் உச்சம் பெற்று மொத்தப் படத்தையும் வலுவிழக்க செய்கிறது. மன்னராட்சி காலத்தில் பார்ப்பனியத்தால் வெட்டப்பட்ட புத்தரின் தலையை, தங்கலானின் வாரிசுகள் கைப்பற்றி மீண்டும் உருகொடுப்பது போன்ற குறியீடுகள் ஆழமானவையாக இருந்தாலும் கூட திரைக்கதையின் வலுவின்மையால் குறி தப்பிவிட்டது. 


ஒரு நேர்த்தியான திரைக்கதை என்பது பார்வையாளன் தானும் சிந்தித்து மேலே செல்வதற்கான பல இடைவெளிகளை படத்தில் விட்டிருக்கும். ஆனால், இப்படம் கதைக்கான இடைவெளிகளையே விட்டு வைத்திருக்கிறது. அடிப்படையில், கதையில் முழுமை கூடியிருந்தது எனில், துறுத்தலில்லாத உரையாடல்கள் வழியாகவோ, அல்லது கதையின் உள்ளுணர்வாகவோ அதன் கருத்து நம்மை வந்து சேரும். அசுரன், கர்ணன் படங்கள் இதற்கு உதாரணம். ஏன், ரஞ்சித்தின் மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை படங்கள் கூட சிறந்த உதாரணங்களே. 


ரஞ்சித்தின் முந்தைய படமான "நட்சத்திரங்கள் நகர்கிறது" போன்ற சிறிய பொருட்செலவு கொண்ட படங்களில் இருந்த இதுபோன்ற கூர்மையின்மையை கூட ஒரு வகையில் பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், பெரும் பொருட்செலவில், அசாதாரண உழைப்பில் உருவான தங்கலான் போன்ற படத்தில் ஏற்பட்ட தவறுகளை கவனக்குறைவு என கடந்து செல்ல முடியவில்லை.


உழைக்கும் மக்கள் தங்களுக்காக எடுக்கும்போது தங்கம் நிஜமாகவும், பிறருக்காக எடுக்கப்படும் போது முலாம் பூசப்பட்ட கல்லாகவும் அந்த காவல்காக்கும் பெண் மாயம் செய்துவிடுவதை போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். உண்மையில் படமும் அப்படித்தான் இருக்கிறது.


கதை நிகழும் காலமும், சூழலும் அவ்வளவு அசலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. பூர்வகுடி மக்களுக்கான உடல், மொழி, பாவனைகளில் விக்ரம், பார்வதி உள்ளிட்ட அனைவரும் அசாத்திய அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் அவசியமானவற்றை அளித்திருக்கின்றன. இவற்றிற்கு ஈடாக திரைக்கதையும் இருந்திருந்தால் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்க கூடிய படங்களில் ஒன்றாக தங்கலான் மாறியிருக்கும். 


நடிகராக விக்ரம் ஒரு போதும் தோற்றதில்லை. ஆனால், ரசிகராக சறுக்கியிருக்கிறார்; இயக்குனராக ரஞ்சித் வென்றிருக்கிறார். ஆனால், கதையாசிரியராக வழுக்கியிருக்கிறார். இவையெல்லாம் தங்கலான் படத்திலும் நிகழ்ந்தது தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. 



Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...