அவளதிகாரம் - நமையாளும் நாம்!
மகள் பிறந்திருக்கிறாள். பிரபஞ்சத்தின் ஒரு உயிர்த்துகளாக இந்த வாழ்வு முழுமை பெற்றிருக்கிறது. மருத்துவமனையில் முதன்முதலில் அவளது அழுகுரல் கேட்ட அந்நொடி, பத்தாண்டுகளுக்கு முன் எனக்கும் வர்ஷினிக்குமான காதல் சூல் கொண்ட தருணம் தான் நினைவை நிறைத்தது.
எவ்வளவு இடர்களடர்ந்த நீண்ட பயணம் இது. மீள மீள இழுத்துச் சென்று கொண்டேயிருந்த வாழ்வின் எதிர்பாரா சுழல்கள் எங்கள் திருமணத்தில் தான் சற்று ஓய்ந்தன. அதன் பின் நாங்களிருவரும் மூவராக அவளை பொத்திப் பொத்திக் காத்து தனியாகவே பயணித்த இந்த பத்து மாதங்கள். காலமே ஒரு கர்ப்பச் சூடாக எங்களை சூழ்ந்திருந்தது. முதல் மாதத்திலிருந்தே மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் தொடர்ந்தன. எந்தக்காதல் பத்தாண்டுகள் நம்மை அழைத்து வந்ததோ, அந்தக்காதல் இதையும் பாதுகாத்து நம் கைகளில் ஒப்படைக்கும் என நம்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை எங்களுக்கு. எல்லாவற்றையும் இப்போது நினைத்துப்பார்க்கையில் பெருநியதி எத்தனை கருணை மிக்கது எனத் தோன்றுகிறது.
ஏழாம் மாதத்தில் ஒரு மருத்துவ சோதனையின் போது பேச்சின் போக்கில், "அவன் வேற குத்தவச்சு உக்காந்துட்டு இருக்கான்..." என மருத்துவர் பிரக்ஞையின்றி விட்ட அவ"ன்" எங்களுக்குள் ஒரு மின்னல் கணத்தில் பதிவானது. மருத்துவர் பேசிக்கொண்டேயிருக்க கவனம் விலகி இருவரும் பார்த்துக்கொண்டு "நீ அதை கவனிச்சியா?" என கண்களால் கேட்டுக்கொண்டோம். வயிறு சிறிதாக இருக்கிறது, முகத்தில் பொலிவில்லை என பார்ப்போர் சொன்ன அனுபவக் கணக்குகளும் சேர்ந்து கொண்டன. மகன் தான் என முடிவே செய்து பெயர் கூட வைத்து, மகனுலகை உருவாக்க தொடங்கி விட்டிருந்தோம்.
பிரசவத்திற்கு திட்டமிட்ட நான்கு நாட்களுக்கு முன்னர் வரை தலை திரும்பவில்லை, தானாக வரும் வரை காத்திருப்பது ஆபத்து என அறுவை சிகிச்சைக்கு தயாராக சொல்லிவிட்டார் மருத்துவர். தானாக வந்தாலும், அழைப்பில் வந்தாலும் அது அவர்களுடைய நாள் தான். அதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். "உங்கள் குழந்தை உங்களுடையது அல்ல, உங்கள் வழியாக உலகிற்கு வருகிறது" என்ற கலீல் ஜிப்ராரானின் வரி முன்நின்றது. பிறப்பு தேதி 17.08.2024 என இறுதியானது. கூட்டுத்தொகையாக 8.8.8 என வந்ததில் ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சி.
எவ்வகையிலேனும் தன் குழந்தை தன்னைப் போலவும், அதே சமயம் தன்னை விடவும் சிறந்ததாக இருந்தாக வேண்டும் என்பது ஆன்மாவின் சமரசமில்லா ரகசிய வேண்டுதல் போல. ஒரு ஆணுக்கு தன்னை விட இன்னொரு உயிரை துளி ஆணவமின்றி உயர்த்திப் பிடிக்கவும், உன்னதமானதாக நினைக்கவும் தந்தைமையில் மட்டுமே நிகழ்கிறது. "தான்" என்ற ஒன்று முழுமுற்றாக நிலையழிந்து நிற்கிற ஒரு பொன் தருணம் அது.
அறுவை சிகிச்சை அறையின் வெளியே, புறவுலக ஓசைகள் எல்லாவற்றையும் கடந்து உச்சஸ்தாயியில் என் அகத்துடிப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருக்க காத்திருந்தேன். என் காதுகளுக்கு முன்பாக அகம் தான் அதை முதலில் கேட்டது. உயிரூற்று மேலெழுந்து வந்து கண்களை நிறைத்தது. இதுவரை உணர்ந்திராத ஒரு நடுக்கம், ஒரு பரசவசம். அசைவற்று கண்மூடி நின்றேன்.
நான் இந்த பூமிக்கு வந்து விட்டேன், உன் இருள் யாவும் ஒளியாகும்படியாக உனைத்தேடி வந்து விட்டேன், என அந்த அழுகுரல் மட்டும் வந்து வந்து தீண்டிய அக்கணம், நான் ஆணல்ல, மனிதனல்ல, விலங்குகள், பறவைகள் போல இந்த உயிர்ப்பெருக்கின் ஒரு துளி மட்டுமே என ஆகியிருந்தேன். அந்த அழுகுரலை வாரி வாரி மூளை தன் நரம்புகளில் சேமித்துக் கொண்டிருந்திருக்கிறது. கண்மூடினால் மந்திரமாக எந்த நொடியும் உள்ளுக்குள் அது கேட்கிறது. பூகோளக்கனவின் அறிய முடியா ஆனந்த இழை இது.
செவிலியர் கதவு திறந்து எடையையும், நேரத்தையும் மட்டும் சொல்லிவிட்டு அமைதியானார். நான் மற்றது தான் எனக்குத் தெரியுமே என அவர்களை பார்த்து சரி சரியென தலையாட்டிக் கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த அம்மா "என்ன குழந்தைங்க?" எனக்கேட்டார். "அவரு கேக்க மாட்டேங்குறாரே?" என புன்னகையோடு பார்த்தார். அப்போதும் எனக்கு கேட்க தெரியவில்லை. நெகிழ்ந்து மட்டுமே நின்றிருந்தேன். "பெண் குழந்தை" என்று சொல்லிவிட்டு கதவு மூடிக்கொண்டார். பிரக்ஞை அப்போது தான் திடுக்கிட்டு, "என்ன? உண்மையாகவா? அல்லது உள்ளிருந்து வர்ஷினி சொல்லியனுப்பி ஏதும் விளையாட்டை நிகழ்த்துகிறார்களா?" என தவித்துக்கொண்டிருந்தது.
தவித்தலைந்து ஒரு இறகென அது பறந்து சென்று, சித்திரைத் தேரோட்ட விழாவில் லட்சம் களியொலிக்கு மேலே வந்து தேருக்குள் தலைப்பாகை கட்டி சிம்மமாய் நின்றிருந்த அவள் பாதம் சேர்ந்தது. அவள் தான். அவளே தான். அன்னை தான். மழைக்குத் துடிக்கும் ஆகாயம் போலிருந்தது மனம். "மீனாட்சி" என பிதற்றியது உதடு. எனக்கே கூட கேட்கவில்லை அது. நாக்கு குழற குழற மீண்டும் மீண்டும் சொன்னேன். "மீனாட்சி! மீனாட்சி! மீனாட்சி!"
மருத்துவர் கதவு திறந்து அவளை ஒரு சுடரென எடுத்து வந்தார். குழந்தையை நான் தான் முதலில் வாங்க வேண்டும் என்பது வர்ஷினியின் ஆணை. நான் கொஞ்சம் கோளாறு, அந்நேரம் பார்த்து வேறெதையாவது கவனித்துக் கொண்டிருப்பேன் என முன்பே அவள் பலமுறை சொல்லி வைத்திருந்தாள். "என் மகள்" என உளம் முழங்கிக் கொண்டிருக்க அவளை வாங்கினேன். முகம் வர்ஷினியாகவே இருந்தது. "அப்டியே அவள மாதியே இருக்காள்ள..." என்றேன். தாயாக உள்ளே போனவள் குழந்தையாக வெளியே வந்திருக்கிறாள் எனத்தோன்றியது.
அவ்வளவு மயக்கத்திலும் கண்களில் காதல் நிறைந்திருந்த வர்ஷினியிடம், "பாத்தியா" என அவளைக் காட்டி நெற்றி முத்தமிட்டேன். "கடைசியில நீ ஆசப்பட்டதே கெடச்சுருச்சுல்ல" என்றாள். "உன்ன மாதியே தான் இருக்கா" என சொன்னதற்கு, "இல்ல உன்ன மாதி தான் இருக்கா" என்றாள். 'ஆம். நம்மைப் போலிருக்கும் நாம். நாமாகிய நாம். நமையாளவிருக்கும் நாம் - இவள்' என சொல்லிக்கொண்டேன். இருவரையும் பார்க்கையில் மலையுச்சி கார்த்திகை தீபத்தை, பெளர்ணமிக் கடலை, மழைக்காட்டை தனியனாய் நின்று தரிசிப்பது போலிருக்கிறது.
Comments