கனவின் நிலம் சோழம்!


என் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறியது. சோழர் கால ஆலயக்கலை மரபின் 170 ஆண்டுகால குறுக்குவெட்டு தோற்றத்தை ஒரே நாளில் கண்டேன். கி.பி. 1000ல் துவங்கி 1173 வரையில் பெரும் கலைக் கொடையென சோழப் பேரரசர்கள் நிர்மாணித்த தஞ்சைப் பெருவுடையார், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்களை தொடர்ச்சியாக பார்த்தறிந்தது என் முழு வாழ்வுக்குமான களிப்பின் பெருக்கு.


2017ல் பணியிடத்தில் எனக்கேற்பட்ட பெரும் அகச்சோர்விலிருந்து மீளும் பொருட்டு வெறிகொண்டு நான் வாசித்த நூல்களில் ஒன்று உடையார். 6 பாகங்களையும் கணினித்திரையிலேயே படித்து முடித்திருந்தேன். என் 22 வயதில் நான் வாசித்திருந்த முதல் பெரிய நூல் அது. பொன்னியின் செல்வனும், உடையாரும் சோழத்துடன் உணர வைக்கும் 'ஜென்மாந்திர பந்தம்' எனக்கு அன்று துவங்கியது. அதற்கு முன், 10 வயதில் பள்ளிச்சுற்றுலாவின் போது முதன்முறை சென்றிருந்த தஞ்சை வெறும் தலையாட்டி பொம்மையின் நினைவாக எஞ்சியிருந்தது. உடையாருக்கு பின் தான் அவ்விதை முளைத்தெழுந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக அது பெரும் பித்தென எனை ஆட்கொள்ளத் துவங்கியது. சோழம் ஒரு சுழலென சூழ்ந்திழுத்து, பெருவுடையார் குறித்த தகவல்களை சேகரிப்பதென்பது ஆறாப்பசியாகி, தஞ்சை செல்ல வேண்டுமென்பதே ஒரு கனவாக மாறியது. இரண்டு ஆண்டுகள் தஞ்சை செல்ல நானெடுத்த முயற்சிகள் கூடி வரவில்லை. கனவுகள் எப்போதும் வேள்வித்தீயென அது கொண்டோரை தின்று தானே தன்னை வளர்த்துக்கொள்ளும் போல. சரி வளரட்டுமென காத்திருந்தேன்.


2019 டிசம்பரின் இறுதியிலொரு நாள். வர்ஷினியுடனான ஒரு சண்டையில் அவளை காயப்படுத்தியதால் ஏற்பட்ட குற்றவுணர்வின் தகிப்பிலிருந்து தப்பிப்பதற்காக ஊரைவிட்டே ஓடினேன். போட்டிருந்த துணியோடு  யாருக்கும் சொல்லாமல் கோடம்பாக்கத்தில் ரயிலேறினேன். எதன்பொருட்டும் ஆன் செய்யக்கூடாது என சொல்லிக்கொண்டு மொபைலை அணைத்தேன். செண்ட்ரலில் இறங்கி வடக்கோ, மேற்கோ எந்தத் திசை நோக்கி செல்லும் எந்த ரயிலாக இருந்தாலும் ஏறி விட வேண்டுமென்று பரபரத்தேன். நான் சென்ற நேரம் உடனடியாக ரயிலேதும் புறப்படாததால் வெளியே வந்து மாநகர பேருந்தில் ஏறி கோயம்பேட்டில் இறங்கினேன். இரவு 12 மணி. வெளியூர் பேருந்துகள் எதையும் காணவில்லை. நடந்தே ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்து பார்க்கையில் அங்கும் பேருந்துகள் இல்லாததால் மீண்டும் நடந்தே அரசுப்பேருந்து நிலையம் வந்தேன். கால்கள் சோர்ந்து சாலையோர நடைபாதையில் அமர்ந்திருக்கையில், உள்ளிருந்து வந்த ஒரு பேருந்தின் ஒலிகேட்டு ஓடி ஏறினேன். கடைசி இருக்கை காலியாக இருக்க வேண்டுமென என் ஆழ்மனம் எண்ணியது போலவே அது இருந்தது. எளியவர்களின் துயரங்களை ஆற்றுப்படுத்தும் வல்லமை எப்படியோ பேருந்தின் பின்னிருக்கைக்கு இருக்கிறது போல. ஓரிருவர் தவிர யாருமற்ற அந்த பேருந்தின் கடைசி இருக்கையில் வந்தமர்ந்ததும் அழுவதற்கு ஒரு தோள் கிடைத்தது போன்றிருந்தது. கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு கால்நீட்டிப் படுத்தேன்.


இரைச்சல் கேட்டு விழித்துப் பார்க்கையில் நெருக்கடி மிகுந்த ஒரு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. இறங்கி அருகிலிருந்த கடைகளின் பெயர்ப்பலைகைகளில் ஊரைத் தேடினேன். கும்பகோணம். இங்கே எதற்கு வந்தோம், என்ன செய்வது, யாரைத் தெரியும் என பதற்றமடைந்து ஒரு பாதுகாப்பற்ற உணர்வுக்கான சமிக்ஞையை மட்டும் மூளை அப்போதைக்கு கொடுத்தது. பசித்ததால் அருகிலொரு சிறிய அறை எடுத்து குளித்து உடைமாற்றி சாப்பிட்டுவிட்டு மீண்டும் பேருந்து நிலையத்திற்கே வந்தேன். நடைபாதை இருக்கையில் அமர்ந்து பழம் விற்பதற்கு தயாராகிக்கொண்டிருந்த கிழவியை பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒரு தன்னிரக்கம் வந்து தொண்டையை அடைத்தது. பாட்டியிடம் சென்று உங்களுடனே இருந்து கொள்ளவா என கேட்கலாம் என்றுகூட தோன்றியது. அமைதியாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் நடத்துனர்கள் பேருந்துக்கு பயணிகளை கூவியழைக்கும் ஒலிகள் வந்து விருப்பமில்லாமல் காதுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. சில நொடிகள் கழித்தே பின்னங்கழுத்தில் யாரோ ஊசியால் குத்தியது போலிருக்கவும் தலையை உலுக்கி அவ்வொலிகளை கவனித்தேன். மூளைக்குள் சட்டென்று ஒரு மின்னல் பாய்ந்தது. "தஞ்சாவூர் தான் போகுது ஏறுங்க" ஒலி வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். இதயத்திலிருந்து ஒரு நடுக்கம் உடல் முழுவதும் பரவுவதை தாமதமாகவே உணர்ந்தேன். பேருந்தின் பெயர்ப்பலகையை கவனித்தேன். தஞ்சாவூர். 


இமைக்கணத்தில் எல்லாம் துலக்கமானது. உயிருக்குள் எப்போதுமில்லாத கொந்தளிப்பு. எதற்காக இந்தக் கூத்தெல்லாம்? எனக்கு எதை உணர்த்த இதெல்லாம் நடக்கிறது? இந்த இடைவெளியும், தொலைவும் அந்தரங்கமாக என்னிடம் என்ன சொல்கின்றன? என தத்தளிக்கும் எண்ணங்களின் ஊடே மெல்ல எழுந்து நடந்து பேருந்தில் ஏறி விட்டிருந்தேன். பெருவுடையார் கோவிலின் விமானத்தை எதிர்நோக்கி நிலைத்த கண்களுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வந்தேன்.



கோவிலை நெருங்க நெருங்க கிட்டத்தட்ட ஒரு துறவியின் மனநிலையில் இருந்தேன். உன்னைப் பார்க்க வருகையில் எந்தப்பற்றும் இல்லாமல் ஒவ்வொருத் துளிக்கணமும் சதா உன்னை மட்டும் நினைத்து, உனக்கென உருகி, மெய் குவித்து, அகம் விரித்து வர வேண்டும் என்பது தான் இதன் அர்த்தமா. தஞ்சை செல்ல வேண்டுமென நான் சொன்ன நாளிலிருந்து உடன் வரவேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தவளை விட்டுவிட்டு அவளுக்கு தெரியாமல் தனியாக என்னை மட்டும் இப்படி ஓடி வர வைத்ததன் நோக்கம் இதுதானா. இந்தத் தனிமையின் நிலையழிவிலிருந்து நான் சிறிதும் சிதறி விடக்கூடாதென போனை கூட அணைக்க வைத்ததன் பொருள் இதுதானா. கோயில் முன் வந்து மண்டியிட்டு விழுந்து ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. 


கோயில் கட்டுகையில் இங்கு தானே ராஜராஜன் நின்றிருப்பார், இங்கு தானே பஞ்சவன் மாதேவியின் இறுதி நாட்களில் அவள் கால்பிடித்து கிடந்திருப்பார், எத்தனை சிற்பிகள், வீரர்கள், யானைகள் என எவ்வளவு பரபரப்பில் இந்த இடம் இருந்திருக்கும், படிப்படியாக இப்படித்தானே கோவில் வான்நோக்கி எழுந்திருக்கும் என மொத்த உடையாரும் கண்முன் நிகழ்ந்தன. மெய்க்காவல் படையின் பாதுகாப்பில் ராஜராஜனும் பஞ்சவன்மாதேவியும் முன்செல்ல அவர்களுடன் ஒரு சிறு குழந்தையென அவர்களின் கைபிடித்து அண்ணாந்து பார்த்தபடி நான் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தேன். வாழ்வின் எண்ணற்ற அற்பக்குவியல்களின் உள்ளேயிருந்து பிறந்து வந்த ஒரு ஒளிமிக்க தருணமல்லவா இது. பிறவிப் பயனல்லவா இது. எனக்கே எனக்காக என்னுள் உறையும் இறையல்லவா இது. 



ராஜராஜன் கோபுரம் கடந்ததுமே கைகூப்பி விழுந்து விட்டேன். என் இறையே, என் தமிழே, என் சிவமே என பிதற்றினேன். துடித்துத் திரண்டு நின்ற விழிநீரின் பின்னே தெரிந்த என் ராஜராஜனின் தட்சிண மேருவை பார்த்துக்கொண்டிருக்கையில் உதட்டிலிருந்து தானாக வந்தது "திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே உரிமை பூண்டமை" என்ற அவன் மெய்க்கீர்த்தி. சோழம் என்னை அதன் நெஞ்சுக்கூட்டுக்குள் அழுத்திக்கொண்டது இப்படித்தான். 


குடமுழுக்கிற்கு தயாராகிக்கொண்டிருந்ததால் பெருவுடையாரை தரிசிக்க முடியாத பரிதவிப்பு. அமைதியாக உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். ”நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி” என திருவாசகம் பாடிக்கொண்டே கோவில் முழுவதும் அலைந்து திரிந்தேன். விரிந்த இமைகளுக்குள் விண்ணிறைந்த விமானமும், சிலைகளும் படியப்படிய அகத்தில் எப்போதுமில்லாத எடையொன்று கூடிக்கொண்டே இருந்தது. ஓய்ந்து வந்து முன்னால் அமர்ந்து தலை தூக்கி கோயிலை முழுமையாக பார்க்கையில் மந்திரம் போல உள்ளிருந்து ஒலித்த ஒரு சொல் - "சோழம் வாழ்க"


ராஜராஜனின் சமாதிக்கும், பஞ்சவன் மாதேவிக்காக ராஜேந்திர சோழன் எழுப்பிய பள்ளிப்படைக்கும் செல்லலாம் என நடந்தேன். மொபைலில் விபரமெல்லாம் வைத்திருந்தும் திட்டமிட்டு அதை மறக்க வேண்டிய பிரயத்தனத்தால், பார்ப்போரிடமெல்லாம் விசாரித்தேன். யாருக்கும் அப்படியொரு இடமிருப்பது தெரியவில்லை. நடந்தே சரஸ்வதி மகாலுக்குச் சென்று கேட்டுப்பார்த்தேன். அவர்களுக்கும் கூட தெரியவில்லை. மீண்டும் கும்பகோணத்திற்கே பஸ் ஏறினேன். அருகிலமர்ந்து இருந்தவர்களிடம் கேட்டும் பலனில்லை. என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது அங்கும் அழைத்துப் போகிறதா பார்க்கலாம் என நினைத்துக்கொண்டேன். 


மழை நிறைத்துக்கொண்டிருந்த மாலை. ஒரு கிராமத்து நிறுத்தத்தில் இறங்கி காத்திருக்கையில், பேருந்தில் நான் முன்பு விசாரிக்கும் போது தெரியாது என சொன்ன நாகரீக நபரும் என்னருகில் காத்திருந்தார். அடுத்த பேருந்தில் நான் ஏறுகையில் என்னை பின்னாலிருந்து தொட்டு அழைத்தார். "பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலுக்கு போயி விசாரிங்க. நீங்க கேட்ட ரெண்டுமே பக்கத்துல தான் இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார். பதிலின்றி அவர் கண்களையே உற்றுப்பார்த்தபடி புன்னகைத்து, பேருந்தில் ஏறி வெளியே தலை நீட்டி அவரையே பார்த்திருந்தேன். நிலம் நோக்கி வான் அனுப்பும் மழை என்பது எத்தனை மகத்தான ஒரு தூது அல்லவா. 


பட்டீஸ்வரம் கோவிலில் இறங்கி மாலையும், விளக்கும் வாங்கிக்கொண்டேன். உடையாளூர் அருகே ராஜராஜன் சமாதி என நம்பப்படும் இடத்திற்கு வந்துவிட்டேன். தெற்கே ஒரு இமையத்தையே கட்டியெழுப்பியவனுக்கு இங்கே அவன் கால் நீட்டி உறங்கும் அளவுக்கு கூட இடமில்லை. சிறிய கூரை வேய்ந்த கூட்டினுள் தரையில் ஒரு லிங்கம். ராஜராஜா, என் மன்னா, நீ இங்கு தான் இருக்கிறாயா, நான் உன்னிடம் வந்து விட்டேனா, இதற்காகத்தான் இவ்வளவு அலைக்கழிப்பா. உனக்கும் எனக்கும் என்ன உறவு. ஓராயிரம் ஆண்டுக்கு முன்னால் நானுன் சேவகனா, தளபதியா, நீ அமர்ந்து பயணித்த யானையா, குதிரையா. யார் நான்? அடிவயிற்றிலிருந்து பொங்கிய திரவம் விழியோரம் வழிந்தது. 


பட்டீஸ்வரத்திற்கு மேற்கே வாழைத்தோப்பின் அருகே ராமநாதன் கோவில் என சொல்லப்படும் இடத்திலிருந்தது பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை. "மாலையை நீயே சாத்துப்பா" என பூசாரி சொல்ல, உச்சியிலிருந்து பாதம் வரைப் பரவியிருந்த நடுக்கத்துடன் மெல்ல நடந்து கருவறை சென்றேன். அகம் நிறைய அவளைத் தொட்டு எடுத்துக்கொண்டேன். ராஜராஜனின் பெருங்காதலுக்கு சொந்தக்காரியல்லவா நீ. சோழத்துக்காக சுயமளித்தவளுக்கு ராஜேந்திரன் கட்டிய கோயிலல்லவா நீ. நானேற்றிய விளக்கின் திரியில் சித்திரமென நிமிர்ந்து ஒளிரும் செந்தழல் அல்லவா நீ. இருவரிடமிருந்தும் கொஞ்சம் மண்ணெடுத்து வைத்துக்கொண்டேன். மண் என நானெடுத்துக் கொண்டது எனக்கான சோழத்தை தான். 


அன்றிலிருந்து எனக்கும், என் குடும்பத்தினரின் பிறந்தநாள்களுக்கும் தஞ்சை செல்வதற்கான உள ஊன்றுதல் அமைந்துவிட்டது.   

இரண்டாம் முறை சோழம் செல்கையிலேயே, பெரிய கோயிலை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய இராஜராஜேச்சரம் நூலை படித்து குறிப்புகள் எடுத்து வைத்துகொண்டேன். அதுவரை கோயிலின் உச்சியை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நான், இதற்குப் பின்னர் அதன் ஆழங்களை கண்டுகொள்ள துவங்கியிருந்தேன்.  



கோயிலை கட்டியவன் ராஜராஜன் தான் என 1886ல் முதன்முதலில் சொன்ன ஜெர்மன் கல்வெட்டு ஆய்வாளர் ஹூல்ஷை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்; தமிழகத்தின் முதல் உயரமான கேரளாந்தகன் கோபுரத்திற்கும் - ராஜராஜன் கோபுரத்திற்கும் இடையே ராஜராஜனால் வைக்கப்பட்டு, பின்னால் கோயிலினுள் வராகி அம்மன் சன்னதியருகே ஓரங்கட்டப்பட்ட நந்தியை ஒவ்வொருமுறையும் பார்க்கத் தவறுவதில்லை. குஞ்சரமல்லர் படைத்து, ராஜராஜன் தொட்டு வணங்கிய நந்தியை வருடுகையில்  அதனுள் உறையும் ஆயிரமாண்டு சூட்டை எக்கணமும் உள்ளுணர்ந்திருக்கிறேன்; ராஜராஜன் தினமும் கோயிலுக்கு வந்து சென்ற வடக்குப்பகுதியிலுள்ள அணுக்கன் திருவாயில் கதவுகளில் காது வைத்து ராஜராஜனின் காலடிச் சலனங்களை கேட்டிருக்கிறேன்; பொன் தகடுகள் வேய்ந்து தங்கமலையென மாற்றப்பட்டிருந்த விமானத்திலிருந்து தெறிக்கும் ஒளிக்கதிர்களை இமைகளுக்குள் நிரப்பியிருக்கிறேன்; விமானத்தின் மேற்கு வாயிலுக்கு எதிரே சாந்தார சுற்றிலுள்ள 10 அடி உயர பேரழகு கொண்ட சந்தியா நிருத்தமூர்த்தியின் சிலையைக் காண மருகியிருக்கிறேன். கோயிலின் தாங்கு திறனையும், கட்டுமான நுட்பங்களையும், சிலைகளின் தத்துவப்பிண்ணனியையும், உடைக்கப்பட்ட பல புனைவுகளையும் எண்ணி எண்ணி ராஜராஜன் எனும் அந்த மகா கனவுக்காரனை கட்டியணைத்துக் கழல் பற்றியிருந்திருக்கிறேன். 


ராஜராஜனின் நந்தி


அணுக்கன் திருவாயில்


சந்தியா நிருத்தமூர்த்தி


இராஜராஜேச்சரம்

நிலத்திற்குக் கீழே எப்போதும் நீர் நோக்கியே நீளும் வேர்களைப் போல, 1000ங்களில் கட்டப்பட்ட பெருவுடையார் கோயில் துவங்கி, 1012 - 1044ல் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயிலையும், 1146 - 1173ல் இரண்டாம் ராஜராஜன் கட்டிய தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலையும் ஒரே நாளில் தொடர்ச்சியாக கண்டறிய வேண்டும் என்றளவில் என் கனவு விரிவெய்தியது. கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆயிரமாண்டு (27.7.2025) விழாவுக்கான அலுவல் நிமித்தம் இப்போது இக்கனவு நிறைவேறியது. இரு கோயில்களைப் பற்றியும் குடவாயில் பாலசுப்பிரமணியத்தின் ஆய்வுகளிலிருந்து குறிப்பெடுத்துச் சென்றிருந்தேன்.  


கங்கைகொண்ட சோழீஸ்வரம்

ராஜராஜன் காலத்தில் பெரிய ராணுவ மையமாக மாறியிருந்த தஞ்சையிலிருந்து நிகழ்த்தும் படையெடுப்புகளால் வேளாண்மைக்கு ஏற்படும் நாசங்களின் பொருட்டே, ஒரு பரந்த நிர்வாக நோக்கில் தான் ராஜேந்திர சோழன் ஒரு மாநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்திருக்கிறான். இங்கு கங்கையின் பெயரால் தன்னையும், ஊரையும், கோயிலையும், ஏரியையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறான். 1311ல் மாலிக்காபூர் படையெடுப்பாலும், தங்குமிடமாக பயன்படுத்திய பிரெஞ்சுக்காரர்களாலும், ராணுவ கூடாரமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்களாலும் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து இப்போது வெறும் 50% தான் எஞ்சியிருக்கிறது. கோபுரம், திருச்சுற்று மாளிகை, அங்கிருந்த பரிவார ஆலயங்கள், சிலைகள் எல்லாம் காணவேயில்லை. அவற்றின் கற்களைக் கொண்டு கொள்ளிடத்தில் ஆங்கிலேயர்கள் அணை கட்டியுள்ளனர். இவ்வளவு சிதைவுக்குப் பின்னரும் இந்தக்கோயில் வழியாக காலாதீதமாக இவ்வுலகோடு உரையாடிக்கொண்டேயிருப்பது கங்கை கொண்டவனின் அழியாக் கனவன்றி வேறென்ன. 



தஞ்சைக் கோயிலை ஒப்பிட செய்நேர்த்தி இல்லாவிட்டாலும் இங்கும் 18 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட துவார பாலகர்கள் சிலையுள்ளன. மும்பையில் எலிபெண்டா குகையிலிருப்பவை உலகிலேயே பெரிய துவார பாலகர்கள் என்றால், அதற்கடுத்து தஞ்சையும், இக்கோயில் சிலைகளும் உள்ளன. அர்த்தமண்டபத்திற்கு செல்லும் தென்புற வாயில்படி அருகே உள்ள கலைமகள் சிற்பம் அபாரமான கலையும், கற்பனையும் கொண்டது. இது உலகம் முழுவதுமுள்ள தாய்த்தெய்வ வழிபாட்டின் தன்மை கொண்டது என்கிறார் குடவாயில். விமானத்தின் மாடங்களில் இடபத்தின் மீது சாய்ந்த நிலையிலுள்ள அர்த்தநாரி சிலை, சிவன் ஆனந்தக் கூத்தாடும் சிலை, ஊடல் கொண்ட உமாதேவியை கட்டியணைத்தபடி நிற்கும் கங்காதரமூர்த்தி சிலை, சிவன் தன் தலையிலுள்ள பூவை எடுத்து சண்டிகேசருக்கு சுற்றும் சிலை (இதை சிவன் ராஜேந்திரனுக்கு சுற்றுவதாக ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அரசனுக்கு ஈசன் முடிசூட்டும் மரபு நமக்கு கிடையாது என்கிறார் குடவாயில்), சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 18 கரங்கொண்ட துர்க்கையின் சிலை என எல்லாம் கொஞ்சம் நின்று அவதானிக்கையில் அவையளிக்கும் அக ஒருமைப்பாடு எல்லையில்லாதது. 


துவார பாலகர் 

கலைமகள்


அர்த்தநாரி


ஆனந்தக்கூத்தாடும் சிவன்


ஊடல் கொண்ட உமாதேவி


சண்டிகேசருக்கு பூ சுற்றுதல்


தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் மலையின் விசையென உயர்தலின் படிமங்கள் என்றால், தாராசுரம் அதனுள்ளுறையும் காடென நுணுகி விரிதலின் படிமம் எனலாம். இக்கோயிலின் கட்டுமானங்களும், சிற்பங்களும் சோழர்கால ஆலயக்கலையின் உச்ச சாத்தியங்கள். இக்கோயிலுக்கும் ஆரம்பத்தில் இராசராசேச்சரம் என்றே பெயரிடப்பட்டுள்ளது. இங்கும் ராஜகோபுரம் இடிந்து கல்ஹாரம் மட்டுமே உள்ளது. மேல்தளங்கள் செங்கல் கட்டுமானமாக இருந்ததால் அவை அழிந்திருக்கலாம் என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியம். அடைக்கப்படுள்ள இதன் வாயில் பகுதியிலிருந்து கோயிலைப் பார்க்கையில் ஒரு மிரட்சி ஏற்படுகிறது. அந்திப்பொழுதில் சிதைந்த கோபுர செதில்களுக்கு நடுவே கீழ்வானில் கோயிலை காண்பது பிறிதொன்றிலா அனுபவம். 



சிதைந்த ராஜகோபுரம்

கோயிலின் முகமண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் தென்புறம் உள்ள தேர் வடிவிலான மண்டபமும், அதனுள் உள்ள 83 தூண்களும், அந்த தூண்கள் முழுதும் நிறைந்திருக்கும் சிற்பங்களும் கோடி கண்கள் கொண்டு ஒரு உலகமே நம்மை பார்ப்பது போலிருக்கும். அத்தனை சிலையும் உயிர்கொண்டு அசைந்தாடினால் எப்படியிருக்கும் என நினைக்கையில் நான் ஒரு கணம் உருவழிந்து மீண்டேன். முகமண்டபத்திற்கு வெளியே கீழ்த்திசை வாயிலில் துவங்கி வடதிசையில் சண்டிகேசர் சன்னதியின் எதிர்ப்புறம் வரையிலும் நீளும் பெரியபுராண காட்சியின் சிற்பத்தொகைகளில் 63 நாயன்மார்களின் கதைகள் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்று மாளிகைச்சுவரில் உள்ள 108 ஓதுவார் சிலைகள், தமிழ்நாட்டு கட்டிடக் கலையின் வெளிப்பாடுள்ள மண்டபங்கள், மாளிகைகள், சிலைகள் என பார்க்கப் பார்க்க தாராசுரம் மொத்தமாய் நிலைகுலைய வைத்துவிட்டது. வாழ்நாளெல்லாம் பார்த்துத் தீராத பேரழகின் கனவு.


தாராசுரம்


இராஜகம்பீரன் திருமண்டபம்


சிற்பத்தூண்கள்


தூண் சிற்பம்

பெரியபுராண சிற்பத்தொகை

108 ஓதுவார் சிலை

வெறிகொண்ட போர்களால் வென்றதை வைத்து மொத்த அரசையும், நாட்டையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து இத்தனை பிரம்மாண்டாய் ராஜராஜனும் ராஜேந்திரனும் அவன் வாரிசுகளும் விட்டுச்சென்றுள்ள இந்த பேராலயங்கள் எல்லாம் எதன் வெளிப்பாடு?

நம்முடைய ஞானமும், சிற்பமும், ஒவியமும், ஆடலும், இன்னபிற கலைகளும் ஆலயமென காப்பாற்றி அறிவாகவும் வேராகவும் நமக்களிப்பதற்காக அவர்கள் கண்ட கனவு தானே. நீர் காத்து நிலம் வளர்க்க கரிகாலச்சோழன் கட்டிய கல்லணையும், சென்னையின் செம்பரம்பாக்கம் துவங்கி வீராணம், சோழகங்கம் என சோழர்கள் மாநிலமெங்கும் வழியமைத்த நீராதாரங்களும் எதன் குறியீடு? ஒரு குடையின் கீழ் ஆளப்பட்ட தமிழ்நாடும், ஒரே எழுத்து வடிவத்திற்கு வார்க்கப்பட்ட தமிழ்மொழியும், கடல் வணிகமும் என இன்னும் இன்னும் எல்லாம் ஆயிராமாண்டு கடந்தும் மௌனமாய் நமக்கு கடத்துவது என்ன... இன்று நாம் பசியும், பஞ்சமும் இல்லாமல் அடைந்துள்ள பொன்னுலகுக்கான எதிர்காலத்தை நோக்கி அந்தந்த காலத்தின் மன்னர்களுடன் சேர்ந்து மொத்த சமூகமும் கட்டியெழுப்பிய கனவு தானே. 



இன்றில் பத்திரமாக நின்று கொண்டு நேற்றின் பிழைகளை தேடுபவர்கள் முன்வைக்கும் எவ்வித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, எப்போதும் சோழம் பெருங்கனவின் நிலமே. அந்தக்கனவுகளின் அருவுருவமென என்றுமிருக்கும் ஆலயங்களை நன்றியுணர்வுடன் அறிவது என்பதே நாம் காண வேண்டிய கனவு.     

















Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!