காதல் : ஒரு தசாப்த தவம்

தாலி கட்டும்போது நான் உளம்குழைந்து அழுதபடி வர்ஷினிக்கு நெற்றிமுத்தமிட்ட காட்சியை அவளுக்கு ஒப்பனையிட வந்த தோழி இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது பல லட்சம் பார்வையாளர்களை எட்டியது. யாரென்றே தெரியாத பல்லாயிரம் பேர் "நாங்களும் அழுதிட்டோம்... நீங்க நல்லாயிருக்கணும்..." என வியந்து கருத்திட்டிருந்தனர். உள்ளபடியே எனக்கு இது திகைப்பளித்தது. எளிய, ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்கள் உட்பட யாவருக்கும் தாலி கட்டும் தருணம் என்பது எப்படியும் சில நொடியேனும் உணர்ச்சிவயத்திற்குரிய ஒன்று தான். நானே நேரில் என் நண்பர்கள் சிலர் அப்படி கண் கலங்கியதை பார்த்திருக்கிறேன். எனில், எங்கள் வீடியோ ஏன் இவ்வளவு பரவி பாதித்தது? எங்களுடைய திருமண புகைப்படக்கலை நண்பர் சொன்னார், "கண்ணீரல்ல காரணம். '10 ஆண்டு காதல்' என்ற தலைப்பு தான். இன்றுள்ள காதலர்கள் பெரும்பாலோனோருக்கு இவ்வளவு காலம் காதலில் தொடர முடிவதில்லை” என. காதலில் தொடர்ச்சி என்பது உண்மையில் இவ்வளவு மதிப்புமிக்க ஒரு செயலா? நம் சமூகத்தின் பொதுப்பண்புகளால் அளவிடுகையில் காதல் இன்று அகமும் புறமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. ஆழ்மனதில் தொன்மம் போல நீட...