காதல் The core - உடனிருத்தல் எனும் பெருவழிப்பாதை!



"இதயத்தில் அல்ல, மேல் உதட்டில் இருந்து வரும் காய்ந்த முத்தங்களை வைத்து தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுடன் 50 வருடம் தாம்பத்யம் நடத்தி விட முடியும்" என ஜி.நாகராஜன் சொன்னது ஆண் பெண் திருமண உறவு குறித்து சராசரி சமூகத்தின் நினைவுகளாக மாறிவிட்ட புறவியல் எச்சத்தின் வெளிப்பாடு.

"20 வருடம் வாழ்ந்து விட்ட பிறகு எதற்கு விவாகரத்து?" என மேத்யூவின் மனைவி ஓமனாவின் முன்பு வைக்கப்பட்ட கேள்வியும் அதற்கான விடைகளும், விடை வழியாக குடும்பத்திலும், சமூகத்திலும் நிகழும் ஏற்பின் நுண்மையான ஆக்கமே "காதல் - The core" திரைப்படம். The Great Indian kitchen படத்தை இயக்கிய ஜியோ பேபியின் மற்றுமொரு ஆழமான படைப்பு இது.

மேத்யூவாக மம்மூட்டி, ஓமனாவாக ஜோதிகா. இருவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குரிய இயல்பான இடைவெளிகள் போல சாதாரணமானது அல்ல இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி. சமையலறை முதல் படுக்கையறை வரை படம் முழுக்க இருவருக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச்சுவர் ஒன்று இருக்கிறது. அது இருவரும் உடைக்க இயலாத, உடைக்க விரும்பாத ஒன்றாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதே போன்றதொரு சுவரே மேத்யூவின் தந்தைக்கும், மகளுக்கும் இடையேயும் நீடிக்கிறது.

தனி வாழ்வில் சுவர்களுக்குள்ளாக நெக்குறுகும் மேத்யூவை, உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒரு வார்டுக்கான வேட்பாளராக எதிர்கட்சி இடதுசாரிய இயக்கம் அறிவிக்கிறது. இடைத்தேர்தல் ஒன்றில் வென்றே ஆக வேண்டிய கட்டாய சூழலில் ஆளும் கட்சிக்கு எதிராக சொந்த கட்சியினரின் முழு ஆதரவோடு மேத்யூவை தீர்மானிப்பதன் வழியாக அவரின் சமூக மதிப்பு என்னவென சுட்டப்படுகிறது.

மேத்யூவின் இத்தகைய சமூக மதிப்பை சிதைக்கும் வகையில் வெளியே கசிகிறது அவரது மனைவி ஓமனாவின் விவாகரத்து மனு. விவாகரத்து பெறுவதன் நோக்கமாக ஓமனா குறிப்பிட்ட காரணம் தான் ஊரெங்கும் பேசுபொருளாகிறது. குடும்பத்திற்குள் அந்த கண்ணுக்கு தெரியாத சுவரின் உயரத்தை வளர்க்கிறது.

நீதிமன்றத்தில் இருவரிடமும் நடத்தப்படும் குறுக்கு விசாரணையின் போது தான் மாத்யூ - ஓமனா இடையே விரவிக்கிடக்கும் இடைவெளியின் நியாயம் தெரிகிறது. மாத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். 20 ஆண்டுகளில் வெறும் 4 முறை தான் இருவரும் உறவு கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு பெண் குழந்தை கூட ஓமனாவின் வற்புறுத்தலால் தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

உறவுகளாலும், வழக்கறிஞராலும் ஓமனாவிடம் முன்வைக்கப்பட்ட ஒரே கேள்வி -" எல்லாம் சரி. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்ட பின்னர் விவாகரத்து எதற்கு?" என்பது தான். “எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? எனக்கு இப்போது இது வேண்டும் எனத்தோன்றுகிறது. கேட்கிறேன்” என்பதே ஓமனா முன்வைக்கும் தர்க்கம்.

விவாகரத்து நடைபெறுகையிலும், அதற்கு பின்பும் ஓமனாவுடனான மாத்யூவின் இருத்தலும், விவாகரத்திற்கு பின்னர் தேர்தல் வெற்றி வாயிலாக அச்சமூகம் உணர்த்திய ஏற்புமே படம் திறந்தளிக்கும் பெருவழிப்பாதை.

ஜோதிகாவும், மம்மூட்டியும், அவரது தந்தையும், நண்பன் தங்கமும் கண்கள் வழியாகவே நிகழ்த்தும் உணர்வுப் பகிர்வுகள் வார்த்தைகளால் சமன் செய்யவியலாதவை. சினிமா எனும் காட்சியூடகத்தின் சாத்திய உச்சங்களை அநாயசமாக தொட்டுச்செல்லும் திறன் மலையாள படைப்பாளிகளுக்கு உண்டு என்பதன் மற்றுமொரு ஆதாரம் இப்படம்.

மதுரையில் ஐநாக்ஸ் திரையரங்கில் மட்டும் இரவு 7, 10 மணிக்கு இரு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டன. எனக்கும் வர்ஷினிக்கும் திருமணமான பின்னர் நாங்கள் பார்த்த முதல் படமாக இது அமைந்ததில் ஒரு தனி நிறைவே. ஆம். எத்தருணத்திலும் உடனிருத்தல் தானே காதல்!



Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...