யோகம்: நல்லூழ் விளைவு



'மலைத் தங்குமிடத்தில் யோக பயிற்சி முகாம்' என நீங்கள் அறிவித்தவுடன் வலசை பறவை போல, என் அலுவல் மற்றும் தனி வாழ்வு அளித்திருந்த அழுத்தங்களில் இருந்து ஒரு சிறு விடுதலையை எதிர்பார்த்தே அதில் பங்கேற்க ஆர்வம் கொண்டேன்.
ஆனால், ஈரோடு விஷ்ணுபுரம் அறையில் தங்கியதும், வெள்ளியன்று அதிகாலையில் எழுந்து அங்கிருந்த உங்கள் 'தன்னைக் கடத்தல்' நூலை வாசிக்க நேர்ந்ததும் எனக்கு அந்த துவக்கத்திற்கான பிறிதொன்றிலா ஆசீர்வாத உணர்வை அளித்தது.

என் சைனஸ் உபாதைக்காக ஏற்கனவே மூச்சு சார்ந்து ஓரிரு பயிற்சிகளை சித்த வைத்தியர் பரிந்துரையின் பேரில் வேதாத்ரி மகரிஷி அமைப்பினரிடம் கற்றிருந்ததும், ஜக்கி நடத்திய இரண்டு நாள் முகாமின் மூலம் சாம்பவி பயிற்சி பழகியதும் பாரம்பரியமற்றவை (Non traditional) என்ற புரிதலே குரு சௌந்தரின் மூலம் தான் அறிந்தேன்.
அந்த பயிற்சிகளை அவர் சற்றும் கீழிறக்காமல் முறையாக இப்படி வகைப்படுத்திய விதம், பழைய அரைகுறை பயிற்சியின் நினைவுகளை மொத்தமாக கழற்றி வைக்க உந்தியது. அதுவே நிலையான கற்றலுக்கான வழி என உள்ளுணர்வு முன்னடத்திற்று.

உடல் - மூச்சு - மனம் சார்ந்த அழுத்தங்களை Muscular tension, Mental tension, Emotional tension என அவர் பகுத்து மூன்றையும் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு கற்பித்த போது தான் உடல் சார்ந்த அடிப்படை புரிதலே நிகழ்ந்தது. எனக்கு 27 வயதே எனினும் உடல் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களை வெகுவாக எதிர்கொண்டிருந்தேன். அதெல்லாம் என்னை பாதிக்கின்றன என நான் நம்பிக்கொண்டிருந்தது என்னுடைய பிழை தான் என குரு வழியாக அறிய நேர்கையில் 'நான்' கழன்று புதிய ஒருவனாக அங்கு நின்று கொண்டிருந்தேன். அந்தக்கணம், உங்கள் 'தன்மீட்சி' நூலின் வழியாக நான் பெற்றிருந்த மீட்சியின் நீட்சியாகவே அந்த 3 நாள் பயிற்சி முகாம் எனக்குத் தோன்றியது.

அங்கு கற்கும் யோக பயிற்சிகளுக்காக, நம் அன்றாடத்தில், உணவில், பழக்கங்களில் (புகை, குடி) பிரத்யேகமாக எந்தவித மாறுதல்களையும் செய்ய வேண்டாம் என குரு அறிவுறுத்தி, அதற்கான உளவியல் காரணங்களை அவர் விளக்கிய போது ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, நிமிர்ந்து, முன்னகர்ந்து அமர்ந்தேன். இதற்கு முன் கற்ற பயிற்சிகளும் அவை விதித்த நிபந்தனைகளும் தானாகவே அதிலிருந்து ஒரு விலக்கத்தை உருவாக்கியிருந்தன என்பதே அந்த நிமிர்வுக்கு காரணம்.

யோகம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவங்களை அளிக்கக்கூடியது, அதை ஒவ்வொருவரும் தொடர் பயிற்சியின் வழியாகவே கண்டறிந்து, தங்களை மீட்டுக்கொள்வதற்கான சாத்தியங்களை அடைய முடியும் என்றார். அதை அடைவதற்காக தினமும் காலை 1 மணி நேரம், மாலை அரை மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்கிறேன். இதுநாள் வரை அந்த நேரம் எங்கிருந்தது, அதை எப்படி இப்போது எடுத்துக்கொண்டேன் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நமக்கு எது முக்கியம் என நாம் உணர்ந்தால் போதும். அதை செயல்படுத்திக் கொள்வதற்கான வழிகளை நாமே கண்டறிவோம் என நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

பயிற்சிக்கு அப்பால், குருவுடன் நிகழ்ந்த அலட்டல் இல்லாத இயல்பான உரையாடல்களும்; உங்களுக்குப் பிடித்தமான 'யானைக் குடிலில்' நாங்கள் தங்கியதும், அது சார்ந்து அந்தியூர் மணி அண்ணா பகிர்ந்த சுவையான தகவல்களும்; குழந்தைகளின் கற்பனை கதைகளும்; புதிய நண்பர்களும் என 3 நாள் தருணங்கள் அனைத்தும் நினைவடுக்குகளில் நிறைந்து விட்டவை.

"இப்படி ஒரு சூழலில், யோகம் கற்பதற்கான வாய்ப்பை ஜெயமோகன் வழியாக நாம் பெற்றது யோகி சத்தியானந்தர் மற்றும் குரு நித்யாவின் ஆசிகள் தான்" என பயிற்சி நிறைவின் போது குரு சௌந்தர் சொன்னார். ஒரு கணம் உடல் சிலிர்த்து மீண்டது. என்னைப் பொறுத்தவரை, இளமைக்கேயுறிய கற்பனையும், அழைக்கழிப்பும், சமநிலையின்மையும் கொண்ட எனக்கு இது என் நல்லூழ் விளைவு.

உங்களுக்கும், குரு சௌந்தர் அவர்களுக்கும், அந்தியூர் மணி அவர்களுக்கும் என் எல்லையிலா நன்றிகள் சமர்ப்பணம்.

- வெற்றி, மதுரை

எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் அறிமுகமான யோக குரு திரு.சௌந்தர் நடத்திய முதல்கட்ட யோக முகாமில் பங்கேற்ற பின்னர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதமும் அவர் அளித்த பதிலும் கீழே சுட்டியில் உள்ளது.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!