இன்னொரு 365

புள்ளியில்
எது முதலாவது
எது இறுதியானது எனும்
தேடல் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
பெரும் வட்டத்தின்
உள்ளேயும் வெளியேயும்.

தேடலில் விளையும் எல்லாவற்றையும்
காலத்தராசு எப்படியும்
சமன் செய்து விடும்
இருமைகளால்.

அன்றாடத்தின் நெரிசல்களில்
எந்த இடைவெளிக்குள்ளோ
ஒளிந்து கொண்டிருக்கும்
வாழ்வின் அர்த்தத்தை நம்மால்
அணுக முடிந்து விட்டதெனில்
இதயத்தினுள் ஆனந்த
இசையொன்று இழையோடும்.

அந்த இசை
தன் வாழ்வை
இன்னும் இன்னும்
நீட்டிக் கொண்டு விட
இன்னொரு நரம்பினை
அதுவே தேடிக் கொள்ளும்.

அன்பின் மகரந்தச்
சேர்க்கைக்காக நம்மை
துாக்கிக் கொண்டுப் பறந்தலையும்
பட்டாம்பூச்சியின் கால்களை
ஒரு போதும் நழுவ விட வேண்டாம்.

பயணத்தை
காற்றின் தண்டவாளங்கள்
தீர்மானித்துக் கொள்ளும்.

முடிவிலிக்குள்
முடிந்து போகும் இந்த
மிகச்சிறிய முடிவுக்குத் தான்
எத்தனை எத்தனை
ஆதாரங்கள்.

ஒருவேளை
ஆதாரங்கள் கூட
அர்த்தமற்றுப் போகலாம்.
இந்த 2018 ம் கூட
இன்னொரு 365 ய் ஆகலாம்.
ஆனால்
நாம்?!

– 1.1.2018
தினமலர் இதழில் வெளியானது.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!