Posts

Showing posts from March, 2018

நனையாத காகித கப்பல்

Image
ஆறு ஓடும் சத்தத்தை கேட்க 'ஆப்' வந்து விட்டது. வசதி என்றான பின் எதுவானாலென்ன என்று கேட்க ஆரம்பித்தாயிற்று. கேட்க கேட்க காதுக்குள் ஒரு கேட்காத ஊற்று பெருக்கெடுக்கிறது. உச்சந்தலை நோக்கி அது சீறித் தவழ்கிறது. ஏதோ விந்தை தான், மேல்நோக்கிப் பாய்கிறது இந்த ஆறு மட்டும். ஓடாத ஆற்றின் பின்னால் ஓடத் தொடங்கினேன். ஓடுகையில் காலுக்கடியில் சட்டென ஒரு திரை கிழிந்தால் என்னாகும்? தெரியாது. ஆனால் தெரியும், கிழிவதை தடுக்க முடியாதென்று மட்டும். கிழிந்தது. உச்சிப்பாறை ஒன்றில் இருந்து விழுந்தேன். நிசப்தமான ஆற்றில் இப்போது சின்னதாய் ஒரு சப்தம். தவறி விழுந்த மரக்கட்டையென எனை எங்கெங்கோ இழுத்துப் போய்க் கொண்டிருந்தது ஆறு. அநேகமாக ஆறு இப்போது அந்தியை தொட்டிருந்தது. ஒளி எனைச் சுட்டிருந்தது. அசைந்தசைந்து கரை ஒதுங்கினேன். நினைவைப் பிடித்து மெல்ல எழுந்தேன். ஆற்றின் வெளியே கால் வைத்தேன். வீட்டு மார்பில் தரை தட்டியது. அதிர்ந்து திறந்தது இமை. உடல் மொத்தத்திலும் துளி ஈரமில்லை. இதமாக சுட்டுக் கொண்டிருந்தது மனம் மட்டும்.

இதற்கு மேல்

இதற்கு மேல் பார்க்க முடியாது அவன் திரும்பிக் கொண்டான். இதற்கு மேல் திரும்பி இருக்க முடியாது அவள் பார்த்து விடுவாள்.

The Shape of water - இரு ஜீவ இசை

Image
ஒரு ஊமை இளம்பெண் (எலிசா), மனித உருவம் கொண்ட நிலநீர் வாழும் (Humanoid Amphibion) உயிரினத்தை பார்த்து, 'You'll never know... just how much... i love you...' என்று சொன்னால் எப்படி இருக்கும்? நேரில் பார்த்தால் மிரண்டு ஓடும் ஒரு உயிரினத்தோடு நெருங்க நினைக்கிறாள் எலிசா. நெருங்குகிறாள். அதுவும், மறுக்கவில்லை. மறக்கவுமில்லை. இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல வார்த்தைகளற்ற ஒரு பெருவெளி படர்கிறது. அதற்கு உணவு கொடுக்கிறாள். உணர்வு கொடுக்கிறாள். உள்ளம் கொடுக்கிறாள். உடல் கொடுக்கிறாள். உயிரையும் கொடுக்கிறாள். அதை, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டு குளியல் தொட்டியில் வைத்து காதல் செய்கையிலும்... தயங்கித் தயங்கி முதல் முறையாக தன்னையே அளிக்கயிலும்... அறை முழுதும் தண்ணீர் நிரப்பி ஒரு காதல் கடல் செய்து, அதனோடு கலந்து கரைகையிலும்... உச்சக்கட்ட பைத்தியக்காரத் தனத்திற்கு புது அத்தியாயம் படைக்கிறாள் எலிசா. எப்படிப் பார்த்தாலும் இது பைத்தியக்காரத் தனம் தான். பைத்தியக்காரத் தனத்தை எப்படிச் சொன்னாலும் அது காதல் தான்.

ஒரு காதல் அக்கப்'போர்'

Image
யாருக்கும் சொல்லாதே நான் யாரென்றும் சொல்லாதே நீ தான் நான் எனில் நான் தான் நீ எனில் முத்தங்களுக்கு முன்பாக முந்நுாறு முறையாவது சொல்லி விடு நான் தொலைந்து வெகு நாளான செய்தியை. வீணாகத் திரிந்த நாளெல்லாம் தானாக விளங்கும் பொழுதினில் நம் மேல் நாம் கிடக்கும் நாடகம் அரங்கேற்றலாம். ஓருடல் மேல் ஓருடல் பரப்பி எல்லையற்று விரிந்து கிடக்கும் உயிருக்குள் ஒரு அனல் நதி பாய்ச்சலாம். பேசாத கதைகள் பேச இப்போது நேரமில்லை நரைத்த மயிர் கோதி குசுகுசுக்க குறை இல்லா நிறை தேடலாம். நடு மார்பில் வழிந்தோடும் வியர்வைத் துளியொன்றை விலையில்லா விதையென விழுங்கி நம் வாசனைச் செடி வளர்க்கலாம். இறுக்கிக் கோர்த்த கைகளிலிருந்து இரண்டாவது சூரியன் படைத்து நம் உடல் உலர்த்தலாம். காது கடிக்கும் பற்களுக்கு இன்னொருமுறை கற்கண்டாகலாம். வெற்று முதுகில் எழுதித் தள்ளிய அர்த்தமில்லாச் சொற்களை இதயத்தில் பிரசுரித்து நம் காதலுக்கே தின்னக் கொடுக்கலாம். உஷ்ஷ்ஷ்... ஒருநொடி மூச்சை நிறுத்து உனக்குள்ளிருக்கும் என்னை என்னிடம் தந்துவிட்டு மீண்டும் தொடங்கு.