நனையாத காகித கப்பல்
கேட்க கேட்க காதுக்குள் ஒரு கேட்காத ஊற்று பெருக்கெடுக்கிறது. உச்சந்தலை நோக்கி அது சீறித் தவழ்கிறது. ஏதோ விந்தை தான், மேல்நோக்கிப் பாய்கிறது இந்த ஆறு மட்டும்.
ஓடாத ஆற்றின் பின்னால் ஓடத் தொடங்கினேன். ஓடுகையில் காலுக்கடியில் சட்டென ஒரு திரை கிழிந்தால் என்னாகும்?
தெரியாது. ஆனால் தெரியும், கிழிவதை தடுக்க முடியாதென்று மட்டும்.
கிழிந்தது.
உச்சிப்பாறை ஒன்றில் இருந்து விழுந்தேன். நிசப்தமான ஆற்றில் இப்போது சின்னதாய் ஒரு சப்தம்.
தவறி விழுந்த மரக்கட்டையென எனை எங்கெங்கோ இழுத்துப் போய்க் கொண்டிருந்தது ஆறு.
அநேகமாக ஆறு இப்போது அந்தியை தொட்டிருந்தது. ஒளி எனைச் சுட்டிருந்தது. அசைந்தசைந்து கரை ஒதுங்கினேன். நினைவைப் பிடித்து மெல்ல எழுந்தேன். ஆற்றின் வெளியே கால் வைத்தேன். வீட்டு மார்பில் தரை தட்டியது. அதிர்ந்து திறந்தது இமை. உடல் மொத்தத்திலும் துளி ஈரமில்லை. இதமாக சுட்டுக் கொண்டிருந்தது மனம் மட்டும்.
Comments