ஒரு காதல் அக்கப்'போர்'



யாருக்கும் சொல்லாதே
நான் யாரென்றும் சொல்லாதே

நீ தான் நான் எனில்
நான் தான் நீ எனில்
முத்தங்களுக்கு முன்பாக
முந்நுாறு முறையாவது சொல்லி விடு
நான் தொலைந்து வெகு நாளான செய்தியை.

வீணாகத் திரிந்த நாளெல்லாம்
தானாக விளங்கும் பொழுதினில்
நம் மேல் நாம் கிடக்கும் நாடகம்
அரங்கேற்றலாம்.

ஓருடல் மேல் ஓருடல்
பரப்பி எல்லையற்று விரிந்து
கிடக்கும் உயிருக்குள்
ஒரு அனல் நதி பாய்ச்சலாம்.

பேசாத கதைகள் பேச
இப்போது நேரமில்லை
நரைத்த மயிர் கோதி குசுகுசுக்க
குறை இல்லா நிறை தேடலாம்.

நடு மார்பில் வழிந்தோடும்
வியர்வைத் துளியொன்றை
விலையில்லா விதையென விழுங்கி
நம் வாசனைச் செடி வளர்க்கலாம்.

இறுக்கிக் கோர்த்த கைகளிலிருந்து
இரண்டாவது சூரியன் படைத்து
நம் உடல் உலர்த்தலாம்.

காது கடிக்கும் பற்களுக்கு
இன்னொருமுறை
கற்கண்டாகலாம்.

வெற்று முதுகில் எழுதித் தள்ளிய
அர்த்தமில்லாச் சொற்களை
இதயத்தில் பிரசுரித்து
நம் காதலுக்கே தின்னக் கொடுக்கலாம்.

உஷ்ஷ்ஷ்...
ஒருநொடி மூச்சை நிறுத்து
உனக்குள்ளிருக்கும் என்னை
என்னிடம் தந்துவிட்டு மீண்டும் தொடங்கு. 

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...