உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...




‘நான் ஒரு சோழன்’ – இது உடையார் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம். உண்மையில் அது புதியது அல்ல. மிகமிகப் பழையது.
‘பொன்னியின் செல்வனையோ, உடையாரையோ படிக்கும் ஒவ்வொருவருக்கும் சோழ தேசத்தோடு ஜென்மாந்திர பந்தம் இருக்கும்’ – இது உடையார் முன்னுரையில் ஒரு வாசகர் சொன்னது. இவை மிகச் சத்தியமான வார்த்தைகள். ஒரு சத்தியமான வாழ்க்கை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சத்தியமான வார்த்தைகளையும் தானாகவே தேடிக்கொள்ளும் என்பது ‘உடையார்’ வரையில் மிகவும் பொருந்தி விட்டது.
‘என்னுடைய 237 நாவல்களும் உடையார் நாவலுக்கான பயிற்சி’ – இது எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சொன்னது. இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, ‘என் 14 ஆண்டு கால வாசிப்பும் உடையாருக்கான பயிற்சி’ என்பதும்.

உடையார் – சோழதேசத்தின் வாழ்வையும், ராஜராஜ சோழனின் வாழ்வையும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் வாழ்வையும், மிக நெருக்கமாக அனுபவித்து ஒரு சோழனாகவே வாழ்வதற்கான வாய்ப்பு. வாய்ப்பு என்று சொல்வது தவறு; அது பாக்கியம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்...
பாண்டிய தேசம் முரட்டு வீரத்தாலும், சேர தேசம் அந்தணர்களின் தந்திரத்தாலும் தட்டுத் தடுமாறி வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் சோழதேசம் மட்டும் வீரத்திலும், கலையிலும், பக்தியிலும், பண்பிலும், வளத்திலும் தன்னிறைவு பெற்று விளங்கியது.
இது எப்படி சாத்தியம்? இதற்கு எது மூலம்? யார் ஆதாரம்?
அருண்மொழி. அது தான் ராஜராஜ சோழனின் இயற்பெயர்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போட்டார் விஜயாலயச் சோழன். அந்த விஜயாலயச் சோழனுக்குப் பிறகு அவரது வாரிசுகள் நிறைய பேர் சோழ தேசத்தை ஆட்சி புரிந்தார்கள். யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் செய்துவிடவில்லை, ஒன்றைத்தவிர.
காட்டில் பதுங்கியிருந்த பாண்டிய மன்னன் ஒருவனின் தலையை வெட்டி எடுத்து வந்து சோழ அரண்மனை வாயிலில் தொங்கவிட்டான் அருண்மொழியின் அண்ணன் கரிகாலச்சோழன். அங்கு தான் சரியத் தொடங்கியது விஜயாலயச்சோழன் போட்டுக்கொடுத்த அஸ்திவாரம். பாண்டிய மன்னனைக் கொன்ற கரிகாலச் சோழனை பழி வாங்க துடித்தார்கள் பாண்டிய தேசத்து வீரர்களான, சேர அந்தணர்கள். அதே நேரம் அருண்மொழியின் குடும்பத்திற்குள்ளும் ஒரு உட்கட்சிப் பூசல் ஏற்பட அதைப்பயன்படுத்தி சோழ அரண்மனைக்குள் ஊடுருவுகிறார்கள், பாண்டிய ஆபத்துதவிகளான ரவிதாஸன் கோஷ்டியினர்.

அரண்மனைக்குள்ளேயே கொல்லப்படுகிறான் கரிகாலச்சோழன். ஆட்சி மாறுகிறது. அடுத்த சோழ சக்ரவர்த்தியாக அருண்மொழி தான் முடிசூட்டப்படுவான் என்று நாடு எதிர்பார்த்திருக்க, நடந்ததோ வேறு. அருண்மொழியின் அப்பா சுந்தரச்சோழரின் சகோதரக் குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. விட்டுக்கொடுப்பார் கெட்டுப்போவதில்லை என்று அரியணையையும் விட்டுக்கொடுத்தார் அருண்மொழி. அரசராகும் தகுதியுள்ளவர் இளவரசரானார்.
அருண்மொழியை ஆற்றுப்படுத்தி, ஞானமளித்து, காத்திரு உன் கர்ஜனை கேட்கும் காலம் வரும் என்று அந்த புலியை பூனையாக இருக்கச் சொல்லி ஆசியளித்தார் கருவூர்த்தேவர். இந்த கருவூர்த்தேவர் தான் அருண்மொழியின் கடைசி மூச்சு வரை அவரது ஆன்மாவை வழிநடத்தியவர்.

பூனையாக இருந்து கொண்டே புலியை விட வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டார் அருண்மொழி. கமுக்கமாக அண்ணனைக் கொன்றவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். ஒரு அரசனைக் கொன்ற கொலையாளிகளே அந்த நாட்டின் முதல் மந்திரியாக இருக்கும் அவலம் சோழ தேசத்தில் நிகழ்ந்தது. ரவிதாஸன் கோஷ்டி தான் சோழ தேசத்தையே இயக்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருந்தும் மொத்த கூட்டத்தையும் கூண்டோடு அழிக்க வேண்டுமென்று அமைதி காத்தார். ரகசியமாக அவரது அரச வலிமையை அதிகரித்துக் கொண்டார்.

இதற்கு நடுவே அவருக்குள் கனல் போல் பற்றத் தொடங்கியது தமிழும், சைவமும். சைவத்தின் மேல் அவருக்கிருந்த காதல் அவரை பஞ்சவன் மாதேவியிடம் சரணடைய வைத்தது. பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். பொதுவாக தேவரடியார்கள் அரசருக்கோ, அதிரகாரத்தினருக்கோ காலம் முழுதும் அடிமையாகவே வாழ்ந்து இறப்பவர்கள். ஆனால், பஞ்சவன் மாதேவி மிக வித்தியாசமானவள். அவளுடைய சைவப்பற்று அருண்மொழியின் ஆஸ்தான காதலியாக அவளை மாற்றியது. அருண்மொழிக்கு மொத்தம் பதினான்கு மனைவிகள். ஆனால் அவர் உண்மையாக காதலித்து மணந்து கொண்டது பஞ்சவன் மாதேவியை மட்டும் தான். சரித்திரத்தில் ஒரு தேவரடியார் செய்யாத செயலையெல்லாம் செய்தாள் பஞ்சவன் மாதேவி. அரசவைக்குள் ராணியாக நுழைந்தாள். ஆனால் எந்தச் சூழலிலும் அவள் ராணியாக இருக்கவேயில்லை. அருண்மொழிக்காகவே தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தாள். அருண்மொழிக்கு நிகரான அறிவும் அருளும் கொண்டிருந்தாள். எங்கே தனக்கொரு குழந்தை பிறந்தால் அதனால் ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று தன்னையே மலடாக்கிக் கொண்டவள். ராஜேந்திரசோழனையே தன் மகனாக கருதி வளர்த்தவள். அந்த தியாகமே அவள் இறந்த பிறகு ராஜேந்திரச்சோழனை அவளுக்காக கோயில் கட்ட வைத்தது.
சிதம்பரம் கோயிலில் சிதையுண்டு கிடந்த சைவ ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பியை கொண்டு மீட்பதற்கு உதவியதும் இந்த பஞ்சவன் மாதேவியே.

காலம் உருண்டது. கரிகாலச் சோழனின் கொலை வழக்கை முன்னிறுத்தி ஆட்சியை கவிழ்த்து, சக்ரவர்த்திப் பதவியேற்றார் அருண்மொழி என்கிற உடையார் ஸ்ரீராஜராஜத்தேவர்.
பதவியேற்ற முதல்வேளையாக, ராஜ துரோகிகளான ரவிதாஸன் கோஷ்டியை கூண்டோடு சோழதேசத்தை விட்டு விரட்டுகிறார். அண்ணனைக் கொன்றவர்களுக்கு கூட அவ்வளவு தான் தண்டனை. அத்தனை கருணை மிக்கவர் உடையார்.
ஆனால் ரவிதாஸன் கோஷ்டியினர் அமைதியாக இருக்கவில்லை. உடையாரை பழிவாங்க காந்தளூர்ச்சாலையில் பதுங்கி இருந்து திட்டம் தீட்டினர். விரைந்தார் உடையார். காந்தளூர்ச்சாலை மொத்தத்தையும் தரைமட்டமாக்கினார். இது தான் உடையார் ராஜராஜத்தேவர் தன் வீரத்தை முதன்முதலாக பறைசாற்றிய இடம்.

அதற்குப் பின் பாண்டிய நாடு, சேர நாடு, சாளுக்கிய நாடுகள் (ஆந்திரா, கர்நாடகா), ஈழம் என பல நாடுகளுக்கும் படையெடுத்து சோழ தேசத்தை மேன்மேலும் வளப்படுத்தினார். சோழ சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தரித்தார். இளவரசராக இருந்த போதிலேயே வளர்த்துக்கொண்ட அறிவையும், அனுபவத்தையும், ஆன்ம ஞானத்தையும் வைத்து மிகக்குறுகிய காலத்திற்குள்ளாகவே எந்த அரசனும் எட்டாத உயரத்தை எட்டி நின்றார்.


உடையாரின் மனதிற்குள் ஆழ வேர்விட்டு வளர்ந்து கொண்டிருந்த சைவமும், சிவ பக்தியும் அவரை வேறு திசை நோக்கி திருப்பி விட்டன. சந்திர சூரியர் இருக்கும் வரைக்கும் சோழர் புகழ் நிலைக்கும்படியான ஒரு செயலைச் செய்யத் துாண்டின.
ஏழு பனை உயரத்திற்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றார் உடையார். கேட்டவர் அத்தனை பேரும் திகைத்தார்கள். இது சாத்தியமே இல்லை என்றார்கள். இவ்வளவு பெரிய கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும், எப்பேர்ப்பட்ட உழைப்பு தேவைப்படும், அரசு இயக்கத்தில் குளறுபடி வருமென்று ராஜேந்திர சோழனுக்கு கூட இதில் உடன்பாடில்லை.
ஆனால், உடையார் மனம் உறுதியாய் இருந்தது. ஏழுபனை உயரம் தான். அதில் இம்மியும் குறையப்போவதில்லை என்று நெஞ்சில் நிறுத்திக் கொண்டார்.  தீவிரமாக சிந்தித்தார். காண்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி வியந்தார். அவருக்கும் கோயிலை எப்படி கட்டுவது என்ற எண்ணம் ஒரு பக்கமிருந்தாலும், இது அந்த சிவனின் எண்ணம்; இது அவனுடைய கோயில்; நான் எதற்கு கவலைப்பட வேண்டும்; அவனே கட்டுவான் என்று தைரியமாக இருந்தார் உடையார்.

பெருந்தச்சர் குஞ்சரமல்லர் வந்து சேர்ந்தார். உடையாரின் கனவை வரைபடமாக்கினார். வரைபடத்தை பார்த்த ஒவ்வொருவரும் வாய்பிளந்து நின்றார்கள். இதை நிஜமாகவே கட்ட முடியுமா, ஒருவேளை கட்டப்பட்டால் எப்படி இருக்கும். சோழ தேசம் யாராலும் அசைக்க முடியாத புகழுக்குச் சொந்தமாகுமே என்று மொத்த சோழ தேசமும் பரபரத்தது.
நுாற்றுக்கணக்கான சிற்பிகள் வந்திறங்கினார்கள். ஆயிரக்கணக்கான அடிமை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். கல் எடுப்பதற்கு நார்த்தாமலை தேர்வு செய்யப்பட்டது. கற்களைச் சுமந்து வர ஏராளான மாடுகளும், குதிரைகளும், யானைகளும் வரவழைக்கப்பட்டன. தஞ்சை அல்லோலகலப்பட்டது.

மனிதர், யானை என்று நிறைய பலிகளை கடந்து, மொத்தம் ஏழு ஆண்டுகள் கோயில் பணி நடைபெற்றது. சைவ ஆகம விதிகளை உடைத்து கோயில் வளர்ந்தது. பொதுவாக கோபுரம் தான் பெரிதாக இருக்கும். விமானம் அதை விட சிறிதாக தான் இருக்கும். ஆனால், இங்கு விமானம் மட்டும் ஏழு பனை உயரத்திற்கு கட்டப்பட்டது. அதாவது 210 அடி. இது உடையாரின் கனவு என்பதைத் தவிர வேறு காரணம் தேவையில்லை.
இத்தனை உயரத்திற்கு கற்களை கொண்டு போவதற்கு, சாரைப்பள்ளம் என்ற ஊரிலிருந்து மண்பாதை போடப்பட்டதாகத் தான் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அது முற்றிலும் பொய். மூலஸ்தானத்தைச் சுற்றி வளைத்து வளைத்தே கெட்டியான மண்பாதை போடப்பட்டது. கட்டிடக்கலை எவ்வளவு வளர்ந்தாலும் பெருவுடையார் கோயில் என்றும் அளக்க முடியா ஆச்சரியமே.
ஆயிரம் இருந்தாலும் தஞ்சைப் பெரியகோயிலில் சில குறைகள் இருக்கிறதாம். அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்தக் குறைகளே, பெருவுடையார் கோயில் இவ்வளவு காலம் நிற்பதற்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன தொழில்நுட்ப வசதி இருந்திருக்கும்; எப்படி போக்குவரத்து நடந்திருக்கும்; என்னென்ன உபகரணங்கள் தேவைப்பட்டிருக்கும்; யாரெல்லாம் என்னென்ன வேலையெல்லாம் செய்திருப்பார்கள்... நினைத்தாலே தலை சுற்றுகிறது. சுற்றிச்சுற்றி வந்து கடைசியில் உடையாரின் காலடியில் தான் விழுகிறது.

கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலுக்காக உழைத்த ஒவ்வொருவரின் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது.
இவ்வளவு பெரிய சாதனையைச் செய்து விட்டு, ‘இந்த கோயிலை நான் கட்டவில்லை, சிவன் தான் கட்டினான்’ என்று கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் சொல்லிவிட்டு தரையில் விழுந்து வணங்குவார். அது தான் உடையார்.

கோயில் பணி முடிந்ததும், ஆட்சியை மகன் ராஜேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு, பழையாறையிலுள்ள பழைய அரண்மனைக்கு சென்று விட்டார். தன் காதல் மனைவி பஞ்சவன் மாதேவியுடன் அமர்ந்து சிவனிடம் சென்று சேர்வது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்தார் உடையார்.

உடையார் என்றால் அறிவுடையார்; அழகுடையார்; அன்புடையார்; வீரமுடையார்; விவேகமுடையார்; வெற்றியுடையார் என்று பொருள். இத்தனையும் உடையார் எது சொன்னாலும் எதுவும் கேட்கும். அன்று அவர் உயிரும் கேட்டது. அவரை விட்டுப் பிரிந்தது. தஞ்சை வந்தது. ஆசை ஆசையாய் அவர் சிவனுக்கு கட்டிய காதல் கோட்டையான பெருவுடையார் கோயிலுக்குள் நுழைந்தது. அன்று நுழைந்தது தான். இன்று வரை அங்கேயே இருந்து, அவர் ஸ்தாபித்த மகாஸ்வாமியை தரிசிக்க வருவோரை வரவேற்பதும், வழியனுப்புவதுமாய் இருக்கிறது.

உடையார் நாவல் மொத்தமும் ஆறு பாகம். கிட்டத்தட்ட மூவாயிரம் பக்கங்கள். அந்த மூவாயிரம் பக்கத்தையும் எளிதாக கடந்து விட்டேன். ஆனால், ‘சோழ தேச சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீராஜராஜத்தேவர் இறைவனடி சேர்ந்தார். சிவபாதசேகரன் இறைவனடி சேர்ந்தார்’ என்ற இரண்டு வரிகளைப் படித்ததும் சட்டென்று கண்களை மூடிக்கொண்டேன். கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். உடையார் கால்களைப் பிடித்துக் கொண்டு பேச்சற்று இருந்தேன்.

ராஜராஜத்தேவர் எப்படி தெய்வப்பிறவியோ, அப்படித்தான் பாலகுமாரனும். அவர் எழுத்து சாதாரண எழுத்தல்ல. ராஜராஜ சோழனை யாராலும் முழுதாக எழுத முடியாது; கல்கியே அதை பாதியில் நிறுத்தி விட்டார்... என்ற பேச்சு ஏச்சுகளை எல்லாம் கடந்து தமிழுக்கும், சோழத்திற்கும் ஒரு பெருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்.  பாலகுமாரன் ஒரு சோழ தேசத்து அந்தணராக இருந்தாலும், சோழ தேசத்தில் அந்தணர்கள் செய்த தகிடுதத்தங்களை பரிபூரண மனசாட்சியுடன் நிறுவியிருக்கிறார். இந்த உண்மை போதும். முப்பதாண்டு உழைப்பில் படைக்கப்பட்ட ‘உடையார்’ ஆண்டாண்டு காலத்திற்கும் நிற்கும், பெருவுடையார் போல.
சோழதேசத்தோடு, பெருவுடையாரோடு, கருவூர்த்தேவரோடு, ராஜராஜரோடு, பஞ்சவன்மாதேவியோடு, ராஜேந்திரனோடு, பிரம்மராயரோடு, பெருந்தச்சரோடு வாழும் பாக்கியத்தை தந்த பாலகுமாரனின் பாதங்களுக்கு என் கண்ணீர் மிகுந்த முத்தங்கள் அர்ப்பணம்!
***

Comments

பாலா said…
நல்ல படிப்பு.. பெருமை கொண்ட படிப்பு...

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!