நடந்து செல்லும் நீரூற்று
தன் முதலிரவில் சம்பிரதாயமாக மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவன் அவன்; தனக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் வாங்கி இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு கொடுத்து விட்டவன்; தன் குழந்தையின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாமல் திணறியவன்; அந்தக் குழந்தை இறந்த போது அழுவதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன்; அவன் வைத்திருக்கும் ஜவுளிக்கடைக்கு வரும் பெண்கள் யாராவது தற்செயலாக அவனை உரசினாலோ, இல்லை அவன் முன்பாகவே ஜாக்கெட் ஊக்குகளை கழற்றி மார்பு தெரிய குழந்தைக்கு பால் கொடுத்தாலா கூட எந்தச் சலனமும் இல்லாதிருந்தவன்; தன் வாழ்வு முழுவதையும் வெறுமைக்கு தின்னக் கொடுத்து விட்டவன்.
தனக்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும், அது முழுக்க தீர்க்க முடியாத வெறுமையும் துக்கமும் நிரம்பி இருப்பதாகவும் நினைத்துக் கொண்டிந்தவன்.
அன்று – ஒரு நாள் முழுவதும் ஆட்டு மந்தையின் நாற்றத்திலும், இரவு முழுவதும் அதன் வெறுமையையும் அனுபவித்து விட்டு எழுந்து நடக்கையில் அவன் கால் இடறி தரையிலிருந்து ஒரு நீரூற்று வெளிப்படுகிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தையும், ஒருவித பரவசத்தையும் கொடுக்கிறது. கைகளால் நீரை வாங்கி முகத்தில் பூசிக் கொள்கிறான். தன் உலகிற்குள் யாரோ அழையா விருந்தாளி வந்துவிட்டதைப் போல பரபரக்கிறான். யாரையாவது அழைத்து அந்த நீரூற்றை அறிமுகப்படுத்த துடிக்கிறான். ஆனால் அந்த நீரூற்று அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.
அது நிஜமா இல்லை கற்பனையா என்று குழம்பியவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் விளங்கியது, அந்த நீரூற்று அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்தியிருந்தது என்று.
அதற்குப் பிறகு அவன் மனைவியை தனிக்குடித்தனம் அழைத்துப் போவதும்; மீண்டும் அவள் ஒரு பெண் குழந்தையை பிரசவிப்பதும்; அவன் அந்தக் குழந்தையை விழுந்து விழுந்து கவனிப்பதும்; பார்த்து பார்த்து வளர்ப்பதும்; அவனுக்கே அவன் ஆச்சரியமாக தெரிந்தான்.
அதன்பின் அவன் தன் வாழ்நாள் முழுவதையும் அந்த நீரூற்றை எதிர்பார்த்து எதிர்பார்த்தே கழிக்கிறான். இடையில் ஒரே ஒரு முறை மட்டும் அவன் வீட்டிற்கு அருகே அந்த நீரூற்று அவனுக்கு காட்சி கொடுத்தது. தன் மனைவியை, மகளை அழைத்து காண்பிக்கையில் மறைந்து விட்டது. ஆனால் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விடுகிறான்.
ஒரு நாள், அவன் வழக்கமாக செல்லும் பூங்காவின் வெளியே ஒரு நலிந்த பெரியவருக்கு அந்த நீரூற்று காட்சி தருவதைக் கண்டு திகைக்கிறான். அவரிடம் பேச நினைத்து நெருங்குவதற்குள் அவரும் நீரூற்றும் மறைந்து விடுகிறார்கள்.
‘ஏனோ அப்போது அவனுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. எந்தச் சலனமும் இல்லாமல் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு இருட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்’ என்பதோடு கதை முடிகிறது.
அவனுக்கு மட்டுமே காட்சி தந்து, அவனிடம் மட்டுமே ஏதோ சொல்ல நினைத்து சொல்லாமல் போகும் நீரூற்றை, இன்னொருவரும் அனுபவிப்பது கண்டு அவனுக்குள் ஏற்படும் தவிப்பு மிக அழகாக இருக்கிறது. இந்த இடத்தில் தான் அவன் நமக்கு மிக நெருக்கமாகி, அவனைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்கிறான்.
அவனுக்கு நீரூற்றைப் போல, நமக்கு இந்த முடிவு ஒருவித பரவசத்தை கொடுக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த ‘நடந்து செல்லும் நீரூற்று’ கதை, நம்மையும் அந்த நீரூற்றை நோக்கி திருப்புகிறது. இன்றைய உலகத்தில், எந்தக் காரணமுமின்றி ஏதாவதொரு வழிகளில் வெறுமையை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும் நமக்கும், அவனைப் போலவே அவசியமாகி விட்டது அந்த நீரூற்று.
***
Comments