அன்பிற்கு உண்டு அடைக்கும்தாழ்
அன்பிற்கு பழக்கப்படுதல் அவ்வளவு எளிமையானதல்ல...
உண்மையான அன்பு நிறைய கோபங்களையும், நிறைய வெறுப்புகளையும், நிறைய அவமானங்களையும், நிறைய நிராகரிப்பு களையும், நிறைய சகிப்புகளையும் கடந்த பின்னரே புரிந்து கொள்ளப்படும்.
எல்லா அன்பும் புரிந்து கொள்ளும் நிலையை எட்டுவதில்லை ஒருவேளை எட்டிவிட்டால் ஒருகாலும் அதிலிருந்து தப்புவதில்லை.
ஆம்.
அன்பு எவ்வளவு பலமானதோ அவ்வளவு பலவீனமானது.
அது எவ்வளவு அழகானதோ எவ்வளவு அமைதியானதோ அவ்வளவு அசிங்கமானது அவ்வளவு வலி நிறைந்தது.
முதலில் இதமாக தெரியும் அன்பு போகப் போக ஒரு கட்டத்தில் லேசாக சுடும்.
பிறகு மெல்ல மெல்ல அதன் சூடு அதிகரித்து வெப்பம் தலைக்கேறி அதற்கு மேல் நம்மால் அதன் சூட்டை தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்து வெறிபிடித்த மிருகத்தைப்போல காட்டுமிராண்டித்தனமாக ஓடிஓடி ஓடிஓடி ஒரு நிழல் தேடி நின்று மூச்சிறைத்து குனிந்து பார்த்தால் நாம் நிற்கும் நிழலும் அன்பின் நிழலாகவே இருக்கும்.
அந்த கணம், அந்த ஒரு நொடி, அழுவதா... சிரிப்பதா... இல்லை அன்பின் நிழல் தந்த நிஜத்தை வாரி அனைத்து முத்தம் இட்டு சாவதா என்று ஒன்றும் புரியாத குழப்பத்தில் தொண்டை அடைத்து நிற்கும். அந்த நிமிடம் பரிபூரணமாக உணர்வோம், நாம் அன்புக்கு பழகிவிட்ட மிருகமாக இருப்பதை.
அன்பு நம் கண்ணுக்குத் தெரியாத எல்லைகளைக் கொண்டது, நம் இதயத்திற்குள் அடங்காத வெளிகளைக் கொண்டது.
அது எந்த வரைமுறையற்றும் இருக்கிறது எனவே அதிலிருந்து எளிதாக தப்பி விடலாம் என்ற மாயை, முதலில் அன்பை குறைத்து எடை போட வைக்கும் ; காட்டில் தன்பலம் மொத்தம் காட்டி பெரும் விருட்சத்தையும் சாய்த்துவிடும் யானை ஒரு ஓரடி அங்குசத்தை குறைத்து மதிப்பிட்டு இருக்குமே அது போல...
அன்பு - எவ்வளவு அடிமைத்தனம் கொண்டதோ அவ்வளவு சுதந்திரம் கொண்டது.
அன்பு - எவ்வளவு சுதந்திரம் கொண்டதோ அவ்வளவு அடிமைத்தனம் கொண்டது.
ஆதலால்,
அன்பிற்கு உண்டு அடைக்கும் தாழ்.
Comments