காதலுக்கும் நட்புக்கும் இடையில்...

அவளுக்கொரு காதலனும்
அவனுக்கொரு காதலியும்
இருக்கும் போது
அவர்கள் இருவரும் பழக நேர்ந்தது.

இருவருக்கும் ஓரளவு கவிதை எழுத தெரியும்.
ஒருவருக்கொருவர் பாராட்டி ரசித்துக் கொண்டார்கள்.

அவனுடைய மூக்குக் கண்ணாடி அழகாக இருக்கிறதென்றாள்.
எப்போதும் அணிந்து கொள்ள ஆசைப்பட்டான்.

அவள் கொலுசு சத்தம் இசையாக இருக்கிறதென்றான்.
அவனைச்சுற்றி நடந்து கொண்டே இருந்தாள்.

தாடி வைத்தால் ஸ்மார்ட்டாக இருக்கும் என்றாள்.
அடிக்கடி ஷேவிங் செய்தான்.

ஈரத் தலையும், மல்லிகைப் பூவும், சந்தன பொட்டும் பிடித்திருக்கிறதென்றான்.
வாரம் நான்கு நாட்களுக்கேணும் வைத்துக்கொள்ள பிரயத்தனப்பட்டாள்.

இருவருக்கும் ஒரே செல்லப்பெயர் வைத்துக்கொண்டார்கள்.
இருவருக்குள்ளும் பரிசுத்தமான நட்பொன்று மலர்ந்திருப்பதாக நம்பினார்கள்.
"காற்றே பூங்காற்றே..." பாடலை அவள் பரிந்துரைத்தாள்.
"நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." பாடலை அவன் பரிந்துரைத்தான்.

அவள் பிறந்தநாளுக்கு காதல் கவிதை புத்தகத்தை பரிசளித்தான்.
முதல் செல்ஃபி போட்டோவில் இருவரும் அழகாக இருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார்கள்.

முதல் முறையாக முத்தமிட்டுக் கொண்டார்கள்.
முதல் முத்தத்தில் சில பிழைகள் இருந்ததாக கருதியவர்கள்
அடுத்தடுத்த முத்தங்களில் தேர்ந்தார்கள்.

அது காதலும் இல்லை
காமமும் இல்லை
அந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை என்று புது இலக்கணம் கற்பித்துக் கொண்டார்கள்.

அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி மழை பெய்தது.
இந்த மழையைப் போல தான் நம் காதலும் பருக இயலாது, பத்திரப் படுத்திக் கொள்ளலாம் என்று கவிதை மொழிந்தார்கள்.

வேலைக்காக வெளியூர் செல்வதாக சொன்னாள்.
கைகளை பற்றிக் கொண்டு அழுதான்.
எங்கிருந்தாலும் நான் நானாகவே இருப்பேனென்று சத்தியம் செய்தாள்.
முன் நெற்றி முத்தத்துடன் பிரியாவிடை கொடுத்தான்.

ஆறு மாதம் கழித்து அவனைப் பார்க்க வருகையில் ஜீன்ஸ் பேண்ட்டும், சட்டையும் அணிந்திருந்தாள்.
நீ என்னுடையவள் அல்ல என்றான்.
பழமைவாதம் பேசாதே என்று வாயடைத்தாள்.

அவளுடைய புதிய ஆண் நண்பனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த அன்று,
நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய குடித்தான்.

அவளை மறந்து விட அவன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த வேளையில்,
அவள் தன் பழைய ரகசிய சினேகத்தின் நினைவுக்காற்று தொடா தூரத்தில் தக்கெனப் பிழைத்தல் விதியில் வெற்றி கண்டிருந்தாள்.

நெடு நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை முத்தமிட நேர்கையில், கண்ணீரில் கழுவிக் கொண்டார்கள் களங்கப்பட்ட அவர்களின் காதலை.
"மீண்டும் நாம் நண்பர்களாகவே ஆகி விடலாம்" என்றாள் அவள்.
"எப்போது நாம் காதலர்களாக இருந்தோம்?" என்றான் அவன்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...