அநாதை காதல்
ஒரு தத்துக் குழந்தை போல
அது நம்மிடம் வளரவில்லை.
நீயும் நானும் புதியவர்கள் என்று
அதற்கு எப்போதும் தோன்றியதில்லை.
அவ்வப்போது நாம் சண்டை போட்டால் மட்டும்
அது செல்லமாக குரைக்கும்.
நாம் பேசிக் கொள்ளாமல் இருந்தால்
வீட்டின் மூலையில் சென்று
இரண்டு நாட்கள் பட்டினி கிடக்கும்.
மழை பெய்யும் போதெல்லாம்
நம் கைகளை கவ்வி இழுத்துச் சென்று
நனைய வைக்கும்.
மாலைத் தேநீரை நம்மோடு சேர்ந்து
நம் கோப்பைகளை தொடாமல்
அதுவும் பருகும்.
நாம் முத்தமிட்டுக் கொள்கையில்
தாவி வந்து
மோவாயை நக்கித் தீர்க்கும்.
இப்போது நாக்கில் மண் ஒட்ட
தெரு முச்சந்தியில்
படுத்துக் கிடக்கிறது.
எப்போதாவது வீட்டிற்கு வந்து எட்டிப்பார்க்கிறது,
சொல்லாமல் கொள்ளாமல் சென்ற நீ
வேறெந்த வழியிலாவது வந்திருப்பாயா என்று.
கட்டாயப்படுத்தி தூக்கி வந்து
வீட்டில் விட்டாலும்,
முகத்தைத் திருப்பிக் கொண்டு வாசலருகில்
சுருண்டு கிடக்கிறது.
உன்னைப் பற்றி
ஏதாவது பேசினால் மட்டும்
வாலை ஆட்டிக் கொண்டு
என்மேல் பாய்கிறது.
கொலுசு சத்தத்துடன்
யாராவது வீட்டை கடந்து சென்றால்
கதவை முட்டிக் கொண்டு
வெளியே எட்டிப் பார்க்கிறது.
மல்லிகை பூ விற்பவரை
கண்டால் விரட்டி அடிக்கிறது.
எவ்வளவோ முறை மார்போடு அள்ளி
அணைத்து தட்டிக் கொடுத்தாலும்
அது ஆசுவாசம் அடைவதில்லை.
இவ்வளவு சகித்துக்கொண்டு
என்னுடன் இருக்காதே எங்காவது
பொய்த்தொலை என்று துரத்தினாலும்
அது போவதில்லை.
பாவம்
வேறென்ன செய்து விடும்
ஒரு
அநாதை நாய்க்குட்டி?!
Comments