காதல் : ஒரு தசாப்த தவம்




தாலி கட்டும்போது நான் உளம்குழைந்து அழுதபடி வர்ஷினிக்கு நெற்றிமுத்தமிட்ட காட்சியை அவளுக்கு ஒப்பனையிட வந்த தோழி இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது பல லட்சம் பார்வையாளர்களை எட்டியது. யாரென்றே தெரியாத பல்லாயிரம் பேர் "நாங்களும் அழுதிட்டோம்... நீங்க நல்லாயிருக்கணும்..." என வியந்து கருத்திட்டிருந்தனர்.

உள்ளபடியே எனக்கு இது திகைப்பளித்தது. எளிய, ஆடம்பர வாழ்க்கை கொண்டவர்கள் உட்பட யாவருக்கும் தாலி கட்டும் தருணம் என்பது எப்படியும் சில நொடியேனும் உணர்ச்சிவயத்திற்குரிய ஒன்று தான். நானே நேரில் என் நண்பர்கள் சிலர் அப்படி கண் கலங்கியதை பார்த்திருக்கிறேன். எனில், எங்கள் வீடியோ ஏன் இவ்வளவு பரவி பாதித்தது?

எங்களுடைய திருமண புகைப்படக்கலை நண்பர் சொன்னார், "கண்ணீரல்ல காரணம். '10 ஆண்டு காதல்' என்ற தலைப்பு தான். இன்றுள்ள காதலர்கள் பெரும்பாலோனோருக்கு இவ்வளவு காலம் காதலில் தொடர முடிவதில்லை” என.




காதலில் தொடர்ச்சி என்பது உண்மையில் இவ்வளவு மதிப்புமிக்க ஒரு செயலா? நம் சமூகத்தின் பொதுப்பண்புகளால் அளவிடுகையில் காதல் இன்று அகமும் புறமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. ஆழ்மனதில் தொன்மம் போல நீடித்த விழுமியங்களையும், நிஜமான அர்த்தங்களையும் இழந்திருக்கிறது.


எவ்வித சமூக பொறுப்புகளுமற்ற பதின் பருவத்தின் இறுதியில் அல்லது மிக இளம் வயதில் எதிர்பாலின ஈர்ப்பில் துவங்குகிற உயிரியல் படிநிலைகள் காதல் என நம்பப்படுகிறது. அவரவர் பொருளாதார, குடும்ப பின்புலத்தின் அடிப்படையில் மிகப் புறவயமான கோணத்தில் காதல் வழிநடத்தப்படுகிறது. பின், திருமணம் என்பது காதலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கான துலாமுள்ளாக நிலைநிறுத்தப்படுகிறது. காதலித்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்த காதல் வென்றது. இல்லாவிட்டால் அது தோற்றது. பெரும்பாலும் இது பெற்றோர்கள், குடும்பத்தினர் ஏற்பிலோ நிராகரிப்பிலோ தான் முடிவாகிறது.

அடிப்படையில் பெண்களை அணுகுவதிலும், மதிப்பதிலும், பெண்களுடன் பயணிப்பதிலும் உள்ள மனச் சிக்கல்களும், ஆணவமும் குடும்பங்களால் உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் நமக்கே தெரியாமல் நம்முள் ஊறி நம்முடன் தீயூழாக தொடர்கின்றன என தெரிவதற்கும், அதை கடப்பதற்கான முயற்சிகளை துவக்குவதற்குமே இன்றுள்ள தலைமுறையினருக்கு கால் நூற்றாண்டு காலம் தேவைப்படுகிறது.

பிரதானமாக, காதல் இன்னெதென்று அறிவதற்கு நெடிய மனப்பயிற்சிக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காதலை அறிந்த பின்னர் காதலியை தெரிவு செய்ய கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், காதலியை நாம் தேர்ந்தெடுத்ததாக நம்புவது போன்றதொரு வாழ்க்கை முரண் நிச்சயம் அரங்கேறும். ஏனெனில், இன்னாருடன் வாழ்வை பகிர்ந்துகொள்ளலாம் என்கிற முடிவுகளை ஒருபோதும் நம்மால் எடுக்க இயலாது. இது இப்படித்தான். இது இவ்வளவு தான். இவருடன் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என நிச்சயிக்கப்பட்ட முன்முடிவான ஒன்று.





ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்களாக - Made for each other போல இருப்பதாக புளகாங்கிதம் அடைவது வழக்கம். அது உடல் அதன் சம்பிரதாயமான மேலோட்டமான தேவைகளை தீர்த்துக்கொள்வதன் மூலம் அடைகிற தற்காலிக துள்ளல். இருவரின் அன்றாடங்களை, கனவுகளை, உள நோக்குகளை எதிர்கொள்ள நேர்கையில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றனர். அப்போது தன்னிலிருந்தே ஆயுதங்களை உருவாக்கி ஒன்றை ஒன்று உடைத்துக்கொள்வதையே இயல்பாக்கிக் கொள்கின்றனர்.

உடைந்து உடைந்து நிலையழிகையில் கொஞ்சம் குற்றவுணர்வு கொள்கிறவர்கள் உடைந்ததை ஒட்டவைக்க முயல்கின்றனர். இயலாதவர்கள் அல்லது ஒட்ட விரும்பாதவர்கள் விலகிக்கொள்கிறார்கள். 99 சதவிகிதம் விலகலையே தேர்வு செய்கின்றனர். காரணம், இந்த நவீன யுகம் உருவாக்கி அளித்துள்ள பரவலான வாய்ப்புகள். எனவே, இன்று காதலை தக்கவைப்பதற்காக எக்கணமும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் போராடும் அந்த 1 சதவிகிதத்தினர் அரிதானவர்கள். இவர்கள் எவ்வித தர்க்கங்களுக்கும் இடமளிக்காத ஒரு அதிதீவிர சட்டகமிடப்பட்ட மனநிலை கொண்டவர்கள். இருவரில் யாரேனும் ஒருவர் இப்படியான மனநிலையில் இருந்தால் கூட போதும். காதலை வாழ்வின் போக்கில் நகர்த்திக் கொண்டு வந்துவிட முடியும். பின்னர், காதலே அவர்களை உள்ளிருந்து அதனருளால் இயக்கும்.




இவ்வாறாக காதல் உள்ளிருந்து இயக்குவதற்கு ஒப்பளித்த அந்த 1 சதவிகிதத்தில் ஒரு இணை தான் நானும் - வர்ஷினியும்.
கல்லூரி இறுதியாண்டில் 2014 அக்டோபர் 2 அன்று மழைத்தூறலுடன் கூடிய நள்ளிரவில் அலைபேசியின் கிசுக்கிசு உரையாடலின் போது காதலானோம். அதன்பின்னர் சில மாதங்களேனும் எல்லோருக்கும் வாய்க்கும் அந்த அதி உற்சாக கணங்கள் எங்களுக்கு வெறும் 20 நாட்கள் மட்டுமே கிடைத்தன. இருபதாவது நாளில் தீபாவளியன்று பெரும் சாலை விபத்தில் என் இடது கால் உடைந்து 6 மாதம் படுக்கைவாசம். என்னோடு அப்பாவும், மூளைவளர்ச்சி குன்றிய அண்ணனும் கடும் காயங்களுடன் வீட்டிற்குள் முடங்கினர். முதன்முறையாக தீபாவளிக்கு துணிக்கடைக்கு நேரில் சென்று அவள் பரிந்துரைத்து எடுத்த இளம்பச்சை நிற சட்டை கூட அவ்விபத்தின் போது ரத்தக்கறையானது.

வாழ்வின் இருட்குகை காலம் அவை. மூளை நரம்புகளில் பதிவான அந்த விபத்தின் அதிர்வுகள் இப்போதும் எக்கணமும் என்னை செயலற்று சில நிமிடமேனும் நிற்க வைப்பவை.
புத்தகங்களில் கவனம் குவியவில்லை. சினிமா இயக்குனராகும் என் கனவு செயலாவதற்கான துவக்கப்புள்ளியே கேள்விக்குறியானது. உளச்சோர்வின் உச்சத்தில் இருந்த பொழுதுகள். அந்நாட்களில் ஒரு சாதாரண விசைப்பலகை அலைபேசி வழியாக கிடைத்த அவளுடனான உரையாடல் மட்டுமே எனக்கான ஒரே துணை.



அந்த உரையாடலின் போது என் பழைய பிழையொன்றை ஒப்புவித்து மன்னிப்பு கோருகையில் அவள் சொன்னாள், "இதுவரையிலான உன் வாழ்வு எனக்கு பொருட்டல்ல. இனி எனக்கானவனாக நீ தரவிருக்கும் வாழ்வே முக்கியம்"
அந்த வார்த்தைகளுக்காக அன்று அவளுக்கு நான் செய்த சத்தியத்தையே பத்தாண்டுகள் கழித்து இப்போது தான் செயல்படுத்த எனக்கு வாய்த்திருக்கிறது. இடையில் நிகழ்ந்தவை யாவும் முதிரா இளமையின் ஊழாட்டங்களே. அவற்றில் ஏராளம் 'நான் உனக்கு செய்கிறேன்' என்ற வகையிலான தியாக பாவனைகளின் வெளிப்பாடுகள் தான் என இப்போது தோன்றுகிறது.

நான் ஊடகவியலாளர் பணியையும், அவள் கல்லூரி பேராசிரியர் பணியையும் தேர்வு செய்ய வேண்டிய சூழல். பத்தாண்டுகளும் மதுரையிலும் சென்னையிலுமாக பிரிந்தே இருந்திருக்கிறோம். சென்னையில் சேர்ந்து அன்றாடம் சந்திக்க முடிந்த சில ஆண்டுகளும் உடல், மன ரீதியாக அந்த ஊரும், வேலையும், வாழ்வியலும் அளித்த அழுத்தங்களும், அலைக்கழிப்புகளும், எரிச்சலும் அதனால் எங்களுக்குள் நடந்தேறிய மோசமான எதிர்வினைகளும் எங்கள் காதலை கசப்பின் உச்சிக்கு கொண்டு சேர்த்தன.

பிரிவை தவிர வேறொரு செயல் அப்போதைக்கு எங்கள் இருவரின் தனிவாழ்வில் அமைதியை தராது என்ற முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். சுய கனவுகளை அடைவதற்கான இணை பயணியாக இருவராலும் இருக்க முடியுமா? வெளியுலகின் சில்லறை கண்களுக்காக சேர்ந்து வாழ முடிவெடுத்து மீதமிருக்கும் வாழ்நாட்களை முழுவதும் துயர் மிகுந்தவையாக மாற்றிக்கொள்ள வேண்டுமா? என்ற ஊசலாட்டத்தில் உளம் தடுமாறி அலைந்தது. மீண்டும் அந்த கள்ளமில்லா கனவுக்காலங்கள் மீளுமா என ஏங்கினோம். மீட்பதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் நிகழ்கிற உரையாடல்கள் எல்லாம் மேலும் மேலும் அதிருப்தியையே அளித்தன. "எங்களால் சண்டையிட மட்டுமே முடிகிறது, உரையாட முடிவதில்லை" என விஷ்ணுபுரம் நாவலில் வரும் வரியைப்போலவே சிக்கலாக்கிக்கொண்டே இருந்தோம்.

எத்தருணத்திலும் எல்லா தருக்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு புள்ளியில் சென்று நின்றுவிட அவளால் முடிந்தது. சட்டென்று உடைந்தழுது கட்டிக்கொண்டு, "நானில்லாமல் உன்னால் இருந்து விட முடியுமா" எனக்கேட்க முடிந்தது. அந்தக்கணம் ஆணவமழிந்து மண்டியிட்டு மீண்டும் அழுவது தான் என் உயிருக்கு காதலிடும் ஆணை. எவ்வளவு கசப்பின் உச்சியிலும் ஒரு துளி இனிப்பை பருக முடியுமென்மதை உணரப்பெற்றோம்.





உடலாலும், மனதாலும் சமநிலையுடன் இருப்பதற்கான சாத்தியங்களை எழுத்தாளர் ஜெயமோகன் வழியாக யோக குரு சௌந்தர் கற்பித்த யோகத்தின் மூலம் அடையும் நல்லூழ் எனக்கு கடந்த ஓராண்டாக வாய்த்துக் கொண்டிருக்கிறது. மனம் தன்னைத் தானே அவதானித்துக் கொண்டேயிருக்கும் ஆற்றலை பெறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக முன்கோபம் தணிந்தது. எங்களுக்குள் காரணமற்ற சண்டைகள், காழ்ப்புகளுக்கு இடமில்லாமல் போனது.

ஆரம்பம் முதலே சாதி ஒரு பெரும் புறவியல் தடையாக எங்களுக்கிருந்தது. முழுமனதுடன் என்னை ஏற்க அவளுடைய குடும்பத்தார்க்கு இடைஞ்சல் இருந்தது. எதுவுமில்லாவிட்டாலும் எங்களால் எங்களுக்காக மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற உள ஊன்றுதல் கிடைத்துவிட்ட கணத்தில் திருமணம் செய்து கொள்ளலாமென முடிவு செய்தோம். உண்மையில் நாங்கள் எடுத்ததாக நம்பிக்கொண்டிருந்த அந்த முடிவை எடுத்தது காதல் தான். "இயற்கையால் நிச்சயிக்கப்பட்ட எங்கள் புதுவாழ்வு" என திருமண அழைப்பிதழில் அச்சிட்டோம். அவளுடைய குடும்பத்தின் ஆதரவில்லை என்கிற எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் எற்பாடுகளை செய்தோம். பெருநியதி எங்களிடம் பெருங்கருணையோடு இருந்தது. யாவும் தானாய் நிறைந்தேறியது.




"தாலி கட்டுகையில் ஏன் அழுதாய்?" என வர்ஷினியும் நண்பர்களும் கேட்டதற்கு இது தான் காரணமென என்னால் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. அவ்வப்போது தோன்றுவதை வர்ஷினியிடம் சொல்வேன். அது ஏதோ சொல்ல வேண்டுமென்று சொன்னது போலிருக்கும். அதியுச்ச உணர்வுப்பெருக்கின் கணங்களில் வெளிப்படும் கண்ணீருக்கு வார்த்தைகளால் காரணம் சொல்லிவிட முடியாது. சொல்ல முடியாத வரை அது இன்னும் அழகாக, ஒளி மிகுந்ததாக மாறிக்கொண்டே இருக்கும் எனத்தோன்றுகிறது.




"மனிதர்களிடையே இருக்க வேண்டியது அன்பு அல்ல மரியாதை" என்ற ஜி.நாகராஜனின் வரிகள் மந்திரம் போல எனக்குள் இசைத்துக்கொண்டே இருக்கிறது. காதல் என்பது அவள் தான். அவளை மதிப்பதன் வழியாகத்தான் நான் காதலுக்கு மதிப்பளிக்கிறேன். அவளைக் கொண்டாடுவதன் மூலம் தான் நான் காதலைக் கொண்டாடுகிறேன். இதுவரை எனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடிக்க வேண்டுமென்ற அறிவீனமெல்லாம் விட்டு, அவளுக்குப் பிடித்தபடியே முதல்முறையாக அவள் பிறந்தநாளுக்கு இரவு 12 மணிக்கு ரகசிய ஏற்பாடெல்லாம் செய்து கேக் வெட்டினோம். மதுரை தோப்பூரில் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்திலிருந்த போலியற்ற மனிதர்களுக்கு இனிப்புகள் கொடுத்து ஆடிப்பாடி களித்திருந்தோம். இந்த பிறந்தநாள் அவள் வாழ்நாள் முழுக்க பூத்துக்குலுங்கும் காடாக நினைவில் நிற்க வேண்டுமென அவளால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு கொண்டாடிட இயற்கை ஆசியளித்தது. "வெற்றி, நீயா இது" என பிரம்மித்துப்போனாள்.




தேனிலவு நாட்களும் அவளின் போக்கிலேயே நிகழட்டும் என உடனிருந்தேன். இயற்கையும், சாகசங்களும் கூடிய பேரின்ப அனுபவங்கள் நிறைந்த தருணங்களாக அமைந்தன. உண்மையில் காதல் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது. அறிவால் நாம் கற்கும் எவற்றாலும் அளவிடவியலாதது. அது திறந்த மனதுடன் தன்னை இழக்க தயாராயிருக்கிற எவருக்கும் பிறிதொன்றிலா தரிசனங்களை அளிக்கிறது.




ஒரே வானின் கீழ், ஒரே வேரில் தழைக்கிற இரு மரமாக இன்றிருக்கிறோம். நீரையும், உரத்தையும் பகிர்ந்து கொண்டு அவரவர் நிழலில், அவரவர் வானை நோக்கி எழுகிறோம். வேறு வேறு நிறங்களில் பூத்தாலும், எக்காலமும் எங்களுக்கு பூக்காலமே.

                                                                                                                          - வெற்றி



Comments

2 perukum ennoda manam makilntha valthukkal💐💐💐Chance eh illa😊 inemel vara generations itha pathu therinjukkatum👏👏Oru 10 years back engala patha mathiri eh iruku 😍Itha oru line koda miss pannama padicha apo enaku engala patha mathiri eh manadukula avlo santhosam 🥰😍Nijama solla varthaigaley illa 😊Very very happy now😍😊Nenga epothum ipdi eh happy & healthy ah irukanum nu na 100 times pray pannikiren😍😍Happy Married life both of you 💐💐💐💐


By
Meena sathish kumar
இன்னும் ஞாபகம் இருக்கு, "எங்களால் சண்டையிட மட்டுமே முடிகிறது, உரையாட முடிவதில்லை" - இந்த தருணத்தில் தான் நாங்கள் (நானும் என் கணவரும்) உங்களை சந்தித்தோம்... கொஞ்ச நேரத்துக்குள்ள இவ்வளவு சண்டை போட்டுக்கிறாங்க, இது சரியான தேர்வுதானா என்று நாங்கள் எங்களுக்குள் அன்றிரவு விவாதித்தோம். முடிவில் இரண்டும் நல்ல பசங்க, நல்ல இருந்தா சரிதான்-னு நினைச்சோம்.. கல்யாணம்-னு சொன்னதும் மிக்க மகிழ்ச்சி... " இருவரும் இணைபிரியாமல் நல்லா இருங்க"
RJ Govind said…
இனிமையான காதல் பயணம்
Vetri Dhaasan said…
அன்புள்ள சகோ,
Meena Sathishkumar
https://www.blogger.com/profile/15072663990891362055

காதல் மனிதர்களின் மனதால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கண்ணாடிக்கூடு. அதில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைக் காண முடியும். எங்கள் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையை காண முடிந்ததும் காதலின் கணங்களே.

உங்கள் அன்பிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

Vetri Dhaasan said…
அன்புள்ள சகோ,
Kavitha vishnu vardhini,
https://www.blogger.com/profile/09982339904216844274

நாங்கள் சண்டையிடுவதை நீங்கள் பார்த்த பின்னராவது அதை தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாத அசட்டுத்தனமான ஒரு மனநிலையில் இருந்திருக்கிறோம். நீங்கள் மட்டுமல்ல அக்காலத்தில் எங்களை பார்த்த யாவருக்கும் உங்களுக்கு எழுந்த அதே சந்தேகம் எழுந்தது, எங்களுக்கும் கூட. ஒரேயொரு நல்வினை என்னவென்றால் நாங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதற்கும், அதை சரி செய்வதற்கும் தேவையான மனம் பின்னால் வாய்த்தது என்பது தான். காதல் துணையிருக்கிறது.

அன்பில் திளைத்த நன்றிகள்.
அருமை அருமை வாழ்த்துக்கள் வெற்றி
ARK said…
அற்புதமான எழுத்து. இனிய திருமண வாழ்த்துக்கள். அன்புடன் ராமகிருஷ்ணன் aruramakrishnan@rediffmail.com
Dinesh pandiyan said…
Vazthukkal! Ur writing style is really good

Popular posts from this blog

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...