அன்பெனும் பெருவெளி - களிப்பருளும் இசையனுபவம்
ஒரு ஆவணப்படத்திற்குறிய வழமைகளிலிருந்து முற்றிலிலும் மாறுபட்ட உள்ளடக்கம் கொண்டது அன்பெனும் பெருவெளி. இந்தத் தலைமுறைக்கு வள்ளலார் வந்தடைவதற்கான இடைவெளியை அகற்றும் சாத்தியங்கள் நிறைந்தது.
வள்ளலார் எழுதிய பாடல்களின் இசையாக்கமாக இது கிளர்ச்சியளிக்கும் ஒரு புதிய அனுபவம். துவக்கத்தில் கொஞ்சம் மென்மையான மெட்டுக்களில் பாடல்கள் இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. வெறுமென பாடல்களின் ஆக்கமாக மட்டும் இப்படம் இருந்திருந்தால் இறுதிவரை அந்த எண்ணம் நீடித்திருக்கலாம். இடையிடையே வள்ளலாரின் வாழ்வும் நோக்கமும் குறித்து இயல்பாய் பொருந்தியிருக்கும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், வீ.அரசு, ஆறுமுக தமிழன், ஆ.இரா.வேங்கடசலபதி, திருமாவளவன் போன்றோரின் பகிர்வுகள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டது. வள்ளலாரை புத்துருவாக்கம் செய்து அவரை பின்தொடர்ந்து செல்வதற்கான வாசலை திறந்து விட்டிருக்கிறது.சைவத்திற்கு உள்ளிருந்தே அதன் பிற்போக்குகளை உடைத்த புரட்சியாளராக வள்ளலாருக்கு இருக்கும் அடையாளம் இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை. அவருடைய புலால் உண்ணாமையும், தரும சாலையுமே பொதுத்தளத்தில், பள்ளிகளில் பெருவாரியாக கற்றளிக்கப்பட்டன. உண்மையில் பெரியார், அம்பேத்கருக்கு முன்பே வள்ளலார் செய்த சீர்திருத்தங்களை எல்லாம் எளிமையாக கடத்தும் சீர்மையும், நுண்மையும் கொண்டது இப்படம்.
தமிழில் ஒரு சமய மறுமலர்ச்சியாளருக்கு இத்தனை நேர்த்தியான ஆவணத்தை பங்களித்திருக்கும் இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் வணக்கத்திற்குரியவர். பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் தனது கர்நாடக சங்கீத நடையிலிருந்து வேறுபட்ட ஒரு தளத்தில் இயங்கிருப்பது தனித்துவமான அனுபவம். இசையமைப்பாளராக சான் ரோல்டனின் பார்வையும், இசைக்கோர்வையும் இளம் தலைமுறையினரிடம் வள்ளலார் தடையின்றி சென்று சேர்வதற்கான கூர்மைக்கு சான்று. நடனங்களுடன் கூடிய பாடல்களின் காட்சியாக்கம் வள்ளலாரின் வரிகளுக்கு புதிய எழுச்சியை அளிக்கின்றன.
படம் முடிவுறுகையில் தன் உடலை மறைத்திருக்கும் அந்த வெண்ணுடையை உதறி கழுத்தில் சுழற்றி, அது காற்றில் பரவ நிமிர்ந்த நடையில் வள்ளலார் மெலெழுந்து வருவது போன்ற ஒரு கனவுருவகம் பிறக்கிறது.
அன்பெனும் பெருவெளி ஆவணப்படம்:
https://youtu.be/na-6NV0MXVE?si=XvDev8Rs17xIidBn
Comments