Laapataa Ladies - மீள்வதற்காகவே தொலைந்தவர்கள்


மழை ஓய்ந்த பின்னர் இலைகளிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள் போல அரிதாக சில திரைப்படங்கள் எடையற்ற எடையாக நினைவில் அசைந்து கொண்டிருக்கும். அப்படியானதொரு படம் - லாபடா லேடீஸ் (தொலைந்த பெண்கள்)


காதலும் கள்ளமின்மையும் கொண்ட தீபக்கும், கர்வமும் சூதும் கொண்ட பிரதீப்பும் திருமணம் முடித்து அவரவர் மனைவியரோடு ஒரே ரயிலில் அருகருகே இருக்கையில் அமர்ந்து பயணிக்கிறார்கள். இருவரின் மனைவிகளும் ஒரே மாதிரியான நிறத்தோற்றத்தில் முகத்தை மறைத்து முக்காடிட்ட உடையணிந்திருக்கிறார்கள். அதனால் தன் மனைவியென நினைத்து பிரதீப்பின் மனைவி ஜெயாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய நிறுத்தத்தில் இறங்கி விடுகிறான் தீபக். பின்னர், தன்னுடைய நிறுத்தத்தில் பிரதீப் இறங்குகையில் தான் அருகே உறங்கிக் கொண்டிருந்த ஃபூல் குமாரி தன்னுடைய மனைவியல்ல என்பது தெரிய வருகிறது. கதையாக இந்த தருணம் மிக சுவாரஸ்யமான ஒரு முடிச்சு.

தன் கணவனின் பெயரை கூட சொல்லத் தயங்கும் ஆசாரப்பிண்ணனி கொண்ட குடும்பப் பெண்ணாக, வெறும் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட ஃபூல் குமாரி நிர்கதியாக ரயில் நிலையத்தில் நிற்பதும்; அழைத்து செல்வது தன் கணவனல்ல எனத்தெரிந்தும் அவனுடைய வீடு வரை வந்து தன் கணவனின் பெயரை இயல்பாக சொல்லி உறுதியாக நிற்கும் ஜெயாவும் மத்தியபிரதேசத்தில் 2000ல் வாழ்ந்த பெண்களின் இருவேறு அகப்பிம்பங்கள்.

கதாப்பாத்திரங்களாக ஜெயாவும், ஃபூல் குமாரியும் சிதறலில்லாத நுண்மையான ஆக்கங்கள். இருவரும் தொலைந்த இடங்களில் சந்திக்கும் மனிதர்கள் அவரவர் மன அமைப்பிற்கு நேர் எதிரானவர்கள். தெரியாமல் தீபக்குடன் வந்திருந்தாலும், அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறாள் ஜெயா. கைவிடப்பட்ட நிலையிலிருந்தாலும் மீட்டுச்செல்ல கணவன் வருவான் என காத்திருக்கிறாள் ஃபூல் குமாரி.

கணவருக்கும், பிள்ளைகளுக்கும் பிடிக்காத உணவு தங்களுக்கு பிடித்திருந்தாலும் அதை மறப்பது சரியென நம்பியிருக்கும் தீபக்கின் குடும்ப பெண்களிடம், தங்கள் நம்பிக்கை தவறென நம்ப வைக்கிறாள் ஜெயா.
அழைத்துச் செல்ல கணவன் வந்தால் அவனை ஏற்க வேண்டுமா, இல்லையா என்பதை நீயே முடிவு செய்ய வேண்டும் என சொல்லும் மஞ்சு அம்மாவின் ரயில்நிலைய கடையில் சமையலாளி ஆகிறாள் ஃபூல் குமாரி. மீட்கிறாள் ஜெயா; மீட்கப்படுகிறாள் ஃபூல் குமாரி.

பெண்களின் உள இருமைகள் குறித்த சித்திரம் அலட்டல் இல்லாத சில எளிய உரையாடல்கள் மூலம் கடத்தப்படுகிறது. கதையமைப்பாக கூந்தல் பின்னலைப் போல இருவரின் தொலைதலும், அதற்கான நோக்கங்களும் சொல்லப்பட்டுள்ளன. இறுதியில் மீட்கப்பட்ட பின் இருவரும் தழுவிக் கொள்கையில் பூல் குமாரி சொல்கிறாள், "நீங்கள் இல்லையெனில் என்னை இவர்கள் கண்டுபிடித்திருக்க முடியாது" என. அதற்கு ஊன்றுதல் நிறைந்த புன்னகையுடன் ஜெயா சொல்கிறாள், "நீ இல்லையெனில் என்னை என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது" என. தொலைதல் என்பது எவ்வகையிலும் மீள்தலுக்கான வழியே.











Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...