உள்ளொழுக்கு - திறந்தெழும் ஒளி

 


மனிதனின் பலவீனத்தையும், அக இருளையும் தீரமான படிமக் காட்சிகளுடன் படமாக்கும் மலையாள சினிமாவின் மற்றுமொரு படைப்பு - உள்ளொழுக்கு (Ullozhukku)

காதலுக்கு பெற்றோரிடமிருந்த எதிர்ப்பால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பார்வதிக்கும் (அஞ்சு), புற்றுநோய் பாதிப்புக்குள்ளான மகனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்காக அஞ்சுவை மருமகளாக்கிய ஊர்வசிக்குமான (லீலாம்மா) உள ஊடாட்டம் தான் படம். 

இறக்கும் கணவனுக்கு ஈடாக அஞ்சுவை பின்தொடரும் முன்காதலும், மகனின் உயிரியல் தொடர்ச்சிக்காக மருமகளை பற்றியிழுக்கும் லீலாம்மாவும் இந்தப் படத்தில் இருமுனை கூர்கொண்ட கத்திகள். அந்தக்கூர்மை தத்தமது உறைகளையும் தாண்டி சதையை கிழிக்கும் அசாதரணத் தன்மை கொண்டவை.

"உங்க நல்லதுக்குத் தான்" என்ற சாயலில் குடும்பங்கள் தன்னளவில் கொண்ட 'திருமண அதிகாரம்' மூலம் பிள்ளைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும், அதன் வழியே மனிதர்களுக்குள் இயல்பாக வளரும் மீறலும், கபடங்களும் அசலான காட்சியாக்கங்கள்.  

இறந்து போன அஞ்சுவின் கணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடையூறாக படம் முழுவதும் நீடிக்கும் மழை - காலத்தின் மனசாட்சி போல தோன்றுகிறது. அந்த மழை தான் அஞ்சுவுக்கும், லீலாம்மாவுக்கும் இடையே அவரவர் பலவீனங்களையும், அற்பங்களையும் காட்டிக்கொடுக்கிறது. லீலாம்மாவுடன் கைகோர்த்துக்கொண்டு அஞ்சு படகில் செல்கையில் பெய்யும் மழை - காதலின் மனசாட்சியாக பேருரு கொள்கிறது; காதலில் ஆண்கள் செய்யும் கீழ்மைகளை அப்பட்டமாக காண்பித்து உறுத்துகிறது.

"இது என் இடமல்ல, நான் செல்கிறேன்" என சொல்லிக்கொண்டிருக்கும் அஞ்சுவும், "இந்த இடத்தை உனக்கானதாக ஆக்குகிறேன்" என பதிலளித்து கொண்டிருக்கும் லீலாம்மாவும் இறுதியில் இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு ஒரே ஆற்றில், ஒற்றைப் படகில் பயணிக்கும் காட்சி அகவொளி.  

அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியான The Jolly joeph case ஆவணப்படத்தை இயக்கிய கிறிஸ்டோ ஆண்டனியின் முதல் முழுநீளப் படம் இது. ஊர்வசி, பார்வதியின் கண்களில் இருந்த உயிரோட்டத்தை படத்தின் உள்ளுணர்வாக மாற்றியது ஒரு படைப்பாளியாக அவருடைய உச்சம். 

தரையில் விழுந்து துடிக்கும் மீன்களைப் போல பார்வதி, ஊர்வசியின் கண்கள் படம் முடிந்த பின்னர் பிரக்ஞையில் விடாமல் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. உள்ளொழுக்கு என்றால் அடிநீரோட்டம் என அர்த்தம். உண்மையில் கண்ணுக்கு தெரியாத ஒரு நீரோட்டத்தை நிகழ்த்துகின்றன அந்தக்கண்கள்.    





Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...