பெருநிலைப் பயணம்


ஒரு மலையுச்சியில் இருந்து இன்னொரு மலையுச்சியை காணும் பொன் கனவு ஒன்று வாய்க்கப்பெற்றேன்.


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு சிறு பயணம் கொங்கர் புளியங்குளம் மலைக்கு. மதுரையின் காலாதீத உலகாக அதன் திக்கெங்கும் பேருருக் கொண்டு நிற்கும் எண்பெருங்குன்றங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்து அது முதன்முதலில் நிலைபெற இயற்கையின் கருணைக் குடையாகியவை பாண்டியத் தலைநகரின் குன்றுகளே.
அவற்றில், சமண மலை, அரிட்டாபட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம் மலைகளிலிருந்த சமணர் வாழ்விடங்களை இதுவரை காண்பதற்கான வழிகளை 'பசுமை நடை' அமைப்பு உருவாக்கித் தந்தது. இது எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் - நண்பர்களால் 15 ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்படுவது. 


மதுரை சார்ந்த அடிப்படை வரலாற்றுணர்வை அடைவதற்கான எளிய வாசல். தனிப்பட்ட முறையில் பசுமை நடை எனக்கு ஒரு செயலூக்கி போன்றது. வீட்டிலிருந்து மாதம் ஒரு முறையேனும் வெளியே கிளம்பி செல்வதற்கான கூவல் அங்கிருந்து வருகிறது. எதிர்மறை சூழல் கொண்ட அன்றாடங்களுக்கு மாற்றாக முழுக்க நேர்மறையான சில மணி நேரங்களை தருகின்றது. குழந்தைகளுடன் உரையாடி அவர்களுலகில் நுழைவதற்கான சாத்தியமளிக்கிறது. மிக முக்கியமாக இயற்கையை அணுகுவதற்கு நம்மை தயார்ப்படுத்துகிறது.



பசுமை நடையின் அண்மை ஞாயிறுப் பயணம் கொங்கர் புளியங்குளம் மலையில் நிகழ்ந்தது. மழைத் தூறலின் ஆசிகளுடன் புலர மறுத்துக் கிடந்த வானமென அந்நாள் துவங்கியது. 



மலை நோக்கி நடந்தோம். வழியெங்கும் பூத்திருந்த முல்லைப் பூக்களின் மணம் உடன் வந்தது. தலை உயர்த்திப் பார்க்கையில் விழி நிரம்பிய மலை ஒரு கணம் பிரம்மாண்ட செம்முல்லை மலரென தோன்றி மறைந்தது. மலையின் முதல் தளத்திலிருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறையின் முன் சமணப்பள்ளி குறித்த ஒரு அறிமுகம். நண்பர் ரகுநாத்தின் நகைப்புணர்வுடன் கூடிய பேச்சு சமணத்தை சற்று அருகில் அழைத்து வந்தது.



நான் ஏற்கனவே தொல்லியல் ஆய்வாளர் வேதாசலத்தின் 'எண்பெருங்குன்றம்' நூலிலிருந்து கொங்கர் புளியங்குளம் மலை பற்றிய குறிப்புகளையும் எடுத்து வந்திருந்தேன். மலையறிதல் துவங்கிய கடந்த மூன்றாண்டுகளில் முதல் முறையாக குறிப்புகளுடன் வந்தது இந்த மலைக்கு தான். ஒரு மலையை முழுமையாக அறிவதற்குண்டான அடிப்படை தகுதியை பெற்றதாக ஒரு உள ஊன்றுதல் அப்போது கிடைத்தது. எல்லோரும் மலையிறங்கிய பின்னர் அண்ணன் கந்தனின் உதவியுடன் மீண்டும் மலையேறினேன்.



பாண்டியர் காலத்தில் பஞ்சபாண்டவர் மலை என அழைக்கப்பட்ட இவ்விடத்தில் கி.பி. 10ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பாண்டிய நாட்டிலிருந்து சேரநாடு செல்லும் வழியில் அமைந்த பெரும்பள்ளியாக இது இருந்திருக்கிறது. இங்கிருந்த இயற்கையான குகைத்தளங்களில் சமணர்கள் உறைவதற்காக அமைக்கப்பட்டிருந்த படுக்கைகள், மழை நீரைத் தடுப்பதற்கு பாறையில் வெட்டப்பட்டிருந்த புருவம், தேங்கிய நீர் வெளியேறுவதற்கு பாறையிலேயே உருவாக்கப்பட்டிருந்த சிறு வாய்க்கால் என ஒவ்வொன்றாக தனியாக அவதானித்து அறிகையில் வரலாற்றின் இறுகிய கதவுகள் விரிசலுற்று திறந்து கொண்டேயிருந்தன.



சமணப் பெருமுனி அச்சணந்தி இம்மலையிலும் ஒரு தீர்த்தங்கர் உருவத்தை பாறையில் புடைப்புச் சிற்பமாக வடித்திருக்கிறார். அதைப்பார்க்க தான் உந்துதலோடு மீண்டும் மலையேறியிருந்தேன். அடர்ந்திருந்த மரப் புதர்களுக்குள் புகுந்து வெளியேறி வந்து அண்ணாந்து பார்த்து உறைந்து நின்றேன். அழிக்கவியலா வரலாறாய் சமணம் அங்கே நிமிர்ந்து அமர்ந்திருந்தது. இறைத் தருணமென மெய்யிழந்து கைகூப்பி வணங்கினேன். பின்னரே உற்று கவனித்து அதிர்ந்து ஓரடி பின் நகர்ந்தேன். தீர்த்தங்கரரின் முகமும், அவரருகில் இருந்த இயக்கர்கள் முகங்களும் சிதைக்கப்பட்டிருந்தன. 


எக்காலமும் மனிதர்களின் சீண்டுதலுக்கு உள்ளாகக்கூடாது என்ற நோக்கில் மலையில் மிக உயரத்தில் சமணச் சிற்பங்கள் வடிக்கப்படுவது வழக்கம். அப்படியிருந்தும் இங்கே சிலைகள் சிதைந்தது எப்படி? "சமணத்தினைப் பற்றி அறியாத மக்கள் தங்கள் ஊரில் திருடிய ஒருவன் இம்மலைக்கு வந்தபோது கல்லாகிச் சிற்பமானான் என்று கருதி இத்தீர்த்தங்கரர் உருவத்தின் மீது கல்லெடுத்து எறிந்துவரும் வழக்கம் இப்பகுதியில் இருந்துள்ளது" என்ற குறிப்பு என்னைப் பதற்றமடையச் செய்தது. போதாதென 'நம்மவர்களின் கல்வெட்டுக்கள்' வேறு. உலகில் இவ்வளவு தூரம் வரலாற்றுணர்வு மழுங்கடிக்கப்பட்ட ஒரு இனம் நாமாகத்தான் இருப்போம் எனத் தோன்றியது. மௌனமாய் சில நொடி கைகட்டி அங்கே நின்றிருந்து விட்டு நகர்ந்து இன்னும் மேலே சென்றோம்.



மலை மேல் ஒரு சிறிய கோவிலொன்றை அவ்வூர் மக்கள் கட்டியிருக்கிறார்கள். கோவில் அருகேயும் பாறையில் செதுக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. அவை என்னெவென்றே அறிய முடியாதபடி கரியும், சந்தனம், குங்குமம் அப்பியிருந்தன. சுவாமி சிலைகள் என மக்கள் பூவிட்டு வணங்கி வருகிறார்கள்.


இன்னும் சில சிறு பாறைகளில் ஏறிக்குதித்து உச்சியை அடைந்தோம். கண் முன்னே நாகமலை நீண்டு கிடந்தது. கழுத்தைத் திருப்பாமல், பார்வையை விலக்காமல் முழு நாகமலையையும் ஒரு நிலைத்த சட்டகத்திற்குள் பார்த்து செயலற்று நின்றேன். தலையின் பின்னாலும் ஒரு அதிசயம் காத்திருப்பது போலொரு பிரக்ஞை ஏற்பட சட்டென திரும்பினேன். பனிமூடிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கடலுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து வருவது போல் தரிசனமளித்தது. 


அப்படியே உட்கார் என வானிலிருந்து ஆணை வந்தது. அமர்ந்தேன். தானாக இமைகள் மூடின. அகம் விழித்துக் கொண்டது. பறவைகள் கீச்சொலிகள் திசையெங்கும் வியாபித்தன. மேகங்கள் மலையிறங்கி தழுவியது போல் குளிர்ந்த காற்று சூழ்ந்தது. நானும் இயற்கையும் மட்டுமேயான ஒரு அந்தரங்க வெளி. உடல் முழுக்க ஒரு மென் நடுக்கம். நீருக்குள்ளிருந்து தூண்டிலை எடுத்தது போலொரு சலனம் இமையோர ஈரமாய் ஆக கண்களை திறந்தேன். வான் பார்த்தேன். உதடுகள் தானே அகன்று விரிந்து புன்னகைத்தன. நானல்ல அது. ஆம். நான் அல்லாத நான். 'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லையிலாத' தருணத்தில் அண்டத்தின் துகளென ஆகியிருந்தேன். பெருநிலை அல்லவா இது.


இயற்கை அனுபவமாக பிற சமணக் குன்றுகளில் இருந்து முற்றிலும் தனித்துவ அம்சம் கொண்டது கொங்கர் புளியங்குளம் மலை. மற்ற மலைகளின் உச்சியிலிருந்து ஊரைத் தான் பார்க்க முடியும். ஆனால், இந்த மலையின் உச்சியிலிருந்து இன்னொரு மலையின் உச்சியை பார்க்க முடியும். அது ஒரு பேரனுபவம். திகட்டாதது. வாழ்நாள் முழுவதும் துரத்தும் பொன் கனவு!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...