அம்மா!


இறுதிவரை எங்கள் யாராலும் புரிந்து கொள்ளப்படவே முடியாத ஒரு மனுஷி. அவ்வளவு எளிதில் யாரும் தன் அகத்தை அறிந்து கொண்டு விடக்கூடாது என மெனக்கெட்டு தன்னை அப்படி வெளிப்படுத்திக் கொண்டாளோ என்று கூட எனக்கு தோன்றுவதுண்டு.


அவளுடைய இறுதிக்காலங்கள் முழுவதும் என்னை அலைக்கழித்த ஒரு கேள்வி - எக்கணமும் சிரிப்பும் கொண்டாட்டமுமாகவே இருக்க விரும்பிய ஒருத்தி, கடைசியில் ஏன் அப்படி ஆனாள்? தான் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை ஏன் அனுமதித்தாள்? அந்த சுய அழிவை ஏன் விரும்பினாள்? அதை எளிமையாக தடுக்க அவ்வளவு சாத்தியம் இருந்தும் அதையெல்லாம் ஏன் இடக்கையால் தூக்கியெறிந்தாள்? 


7 அண்ணன், தம்பிகளுடன் ஒரே இளவரசியாய் பிறந்தவள். அவள் காலத்து பெண் பிள்ளைகளுக்கு இருந்த சுமைகள் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் திரிந்தவள். குடும்பத்தின் பொருளாதார வறுமைகளெல்லாம் அம்மாவை அவ்வளவாக பாதித்திருக்கவில்லை. அம்மாச்சி பனியாரம் சுட்டு வைத்திருக்கும் காசுகளை திருடிச்சென்று சினிமா பார்ப்பதும், திருவிழாக்களுக்கு போவதும், ஊர் சுற்றுவதும் தான் வேலையே. 


வாழ்நாள் முழுவதும் இந்த கொண்டாட்டங்களை நீட்டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கள்ளமில்லா கனவுகள் அம்மாவுக்கு எப்போதும் இருந்தது. ஆனால்,  எளியோரின் கனவுகளை, மகிழ்ச்சிகளை எல்லாம் சிதைத்துத் தின்று விழுங்குவதில் தான் இந்த வாழ்க்கைக்கு ஆறாப்பசி இருக்கும் போல. அம்மா மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? 


5 நாத்தனார்கள் இருந்த அப்பாவின் குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்தது, தலைப்பிள்ளையாய் மூளை வளர்ச்சிக் குறைபாடுடன் அண்ணன் பிறந்தது, ஆரம்பம் முதலே கூட்டுக்குடும்ப வன்முறைகள் நெருக்கியது என அவையெல்லாம் அம்மாவுக்குள் ஒரு இருள் உலகை சிருஷ்டிக்கத் துவங்கின. 


தனிக்குடித்தன சூழல் அம்மாவின் அந்த இருளுலகினுள் ஒரு சிறு ஒளியை ஏற்றியிருக்கலாம். நான், தம்பி உட்பட மூன்று பிள்ளைகள் இருந்தாலும் அண்ணன் எப்போதும் எங்களுக்கு குழந்தை தான். அம்மாவுக்கோ அவன் சாமி. பொருளியல் கஷ்டங்கள் இருந்தாலும், அவ்வப்போது சினிமா, திருவிழா சந்தோஷங்கள் அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.  


அம்மா எங்களை சினிமாவுக்கு கூட்டிப் போவதை அவ்வளவு நுணுக்கங்களுடன் ஒரு கலை போலவே செய்வாள்.  அப்பா வரமாட்டார். நாங்கள் நாலு பேர் தான். சாயங்கால காட்சி தான் அம்மாவின் ஒரே தேர்வு என்பதால் மதியமே நல்ல டிரவுசர் சட்டையெல்லாம் போட்டு எங்கள் மூவரையும் தயார்ப்படுத்தி விடுவாள். சீனி தடவிய சப்பாத்தி, சுட்ட சோளக்கருது, முறுக்கு எல்லாம் கட்டி வைத்துக்கொள்வாள். காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் அல்லது அனுப்பானடி பழனி ஆறுமுகா தியேட்டருக்கு தான் எப்போதும் செல்வோம். ஷோவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து புறப்பட்டு மெல்ல நடந்தே செல்வோம். நாடோடி மன்னன், திருவிளையாடல் புராணம், பாசமலர் போன்ற பழைய படங்கள் தான் பெரும்பாலும். அதெல்லாம் ஏற்கனவே அம்மா பார்த்த படங்களாகக் கூட இருக்கும். இருந்தாலும் மீண்டும் பார்ப்பாள். டிபன் பாக்ஸில் இருந்து எதையாவது திண்ண கொடுத்துக்கொண்டே படத்தில் அடுத்த சீன் என்னவென்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். எங்களுக்கெல்லாம் எம்.ஜி.ஆரும், சிவாஜியும், சாம்பார் என்ற ஜெமினி கணேசனும் தெரிந்தது அம்மா வழியாகத்தான். அவள் சொல்லிச் சொல்லிச் சிரித்த கதைகள் மூலமாகத்தான்.  


வீட்டுக்கு மாமா யாராவது வந்துவிட்டால் போதும். அம்மாவுக்குள் எங்கிருந்தோ ஒரு புது உற்சாகம் பிறந்து விடும். அவர்கள் வாங்கி வந்ததை திண்பதும், கதை பேசுவதும், எங்களை சிரிக்க வைப்பதும் அவளுக்கு அவ்வளவு பிடித்தமானவை. அப்பா, தாத்தா துவங்கி எல்லோருக்கும் பட்டப்பெயர் வைப்பதில் அம்மாவுக்கு அலாதியான துணிச்சல். எங்களிடம் அதைச்சொல்லிச் சிரிப்பதில் ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சி எப்போதும் உண்டு அவளுக்கு. எங்களை விட அண்ணனின் சந்தோஷம் தான் அவளுக்கு பிரதானம். அவனுக்காகவே மாமா உட்பட எல்லோருக்கும் பட்டப்பெயர் வைப்பாள். மூக்குப்பொடி அம்மாச்சி, பீடி மாமா, நந்தினி மாமா, சிகரெட் மாமா, மருதாணி மாமா, ஏரோப்பிளேன் மாமா என இப்படி நீளும் சின்னஞ்சிறு கொண்டாட்டங்களால் ஆனவள் அம்மா.    


அம்மா இறந்த நொடியிலிருந்து அவளுடைய உருவமாக என் மூளையில் இருந்து புகைபோல எழுந்து வந்து கொண்டிருப்பவை எல்லாமே இப்படி அவள் எங்களுக்களித்த சிரிப்பும் கதைகளும் தான். இப்போது நினைத்தால் அவையெல்லாம் எனக்குள் பெரிய நிலைகுலைவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எப்படியெல்லாமோ சின்னச் சின்னச் சந்தோஷத்தைக் கூட விடாம எங்களுக்குக் கொடுத்திட்டு, பின்னாடி நீ ஏம்மா அப்படி ஆயித்தொலைச்ச? என்று தான் கேட்டுக் கேட்டுக் குமைகிறது மனம். 


சக்கரை வியாதி அம்மாவுக்குள் மெல்லப் பரவத்துவங்கியதும் பழைய உற்சாகமும், உழைப்பும் குறைந்தன. அண்ணன் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அம்மா தன்னை ஒடுக்கிக்கொள்ள ஆரம்பித்தாள். தியேட்டர் சந்தோஷம் வீட்டு டிவிக்குள் சுருங்கியது. அண்ணனை சாக்காக வைத்து  விசேஷங்களுக்குப் போவதைக் கூட தவிர்த்தாள். உண்பதில் கூட கவனமில்லை. எப்போதும் சோர்வானவளாக மாறிப்போனாள். அதை சோம்பேறித்தனம் என அறியாமையில் சொல்லிச்சொல்லி அப்பா, தாத்தா மட்டுமல்லாமல், அவர்களைப் பார்த்து நாங்கள் படுத்திய பாடுகளும் நிறைய உண்டு.    


பத்தாண்டுகளுக்கு முன்னர் அப்பா, அண்ணன், நான் என மூவரும் ஒரு சாலை விபத்தில் படுத்த படுக்கையான போது தான் அம்மாவுக்குள் இருந்த அதீதமான அக உறுதியையே நான் உணர்ந்தேன். அந்த உறுதியின் மூலம் மட்டுமே அம்மா ஜீவிதம் செய்து இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறாள் எனத் தோன்றும். 


வேலைக்காக முதல்முறையாக குடும்பத்தை பிரிந்து நான் சென்னை கிளம்பிய அன்று இரவு போனில், "நீ போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு"  என என்னிடம் உடைந்து அழுதாள். பிரிவு தான் எந்த மனிதரின் இருப்பையும் நமக்கு உணர்த்தும் ஒரே காலக்கருவி போல. அந்த சில ஆண்டு இடைவெளி தான் நான் அம்மாவை அதிகம் நினைத்த நாட்கள். 


நீரிழிவு நோயின் தீவிரத்தை அம்மாவிடம் நாங்கள் அறியத்துவங்கிய பின்னர் எங்களுடைய வற்புறுத்தலால் கடனுக்கென மருத்துவமனைக்கு வருவாள். இரண்டு நாள் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வாள். பின் அவை வீட்டின் ஏதாவதொரு மூலையில் தஞ்சமடையும். இதுவே வாடிக்கையானது. நோயின் ஆபத்தை யார் சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை. 


அம்மாவிடம் இருந்த இந்த தர்க்கமற்ற பிடிவாதம் தான் எங்களை களைப்படைய வைத்தது. அவளுக்கு அந்தக்கணம் எது பிடிக்கவில்லையோ அதன்பின் அதற்கு எந்தத்தகுதியும் கிடையாது. அப்படித்தான், முதல் மாத சம்பளத்தில் நான் வாங்கி வந்த சேலையைக் கூட கடைக்கு சென்று மாற்றிவிட்டு வந்தாள். அதில் துவங்கி, தம்பியின் அவசரத் திருமணம் வரை அந்தப் பிடிவாதமே அவளிடம் ஆதாரமாக இயங்கியது. 


அந்தப்பிடிவாதம் நீடித்த விதம் எங்களையெல்லாம் ஒரு கட்டத்தில் நடுங்க வைத்தது. நீரிழிவு நோயால் அம்மா உருகிக்கொண்டிருந்தாள். அப்போதும் அவள் சிகிச்சையை மதிக்கவில்லை. மாமா உட்பட யார் வீட்டுக்கு வருவதையும் அம்மா விரும்பவில்லை. ஒருவேளை தன்னுடைய உடல் பலவீனத்திலிருந்து அவளுக்குள் எழுந்த தாழ்வுணர்வின் காரணமாக கூட அவள் யாரும் தன்னை பார்ப்பதை விரும்பவில்லையோ என தோன்றுகிறது. 


அந்தத் தாழ்வுணர்வின் உச்சமாக, ஒப்புக்காக என் திருமணத்திற்கு மட்டும் வந்துவிட்டு, வரவேற்பு நிகழ்வு, மனைவியின் வளைகாப்பு, மகளின் பிறப்பு என எதிலும் பங்கு கொள்ளாமல் இருந்தாள். இவையெல்லாம் அம்மா மீது அப்போது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. அதை அவளிடம் வெளிப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு அம்மா முற்றிலுமாக சுகவீனமடைந்திருந்தாள். எனக்குத் தான் மனசே கேட்காமல் குலதெய்வ கோயிலுக்கு மகளை தூக்கிக்கொண்டு வந்து அம்மாவிடம் காட்டினேன். என் மகளை அம்மா ஏந்தியது அது தான் முதலும் கடைசியும். 


நோய் சிறுநீரகத்தை தொடர்ந்து மூளையை பாதித்தது. தனியார் மருத்துவர்கள் கை விரித்தார்கள். அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் படுக்கையில் இருந்தாள். அதன் பின்னர் வீட்டில் 6 மாதம். டியூப் வழியாக தான் எல்லாம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய இழப்புக்கு அம்மா எங்களை பழக்கிக்கொண்டிருந்தாள். எங்கள் குடும்பத்தின் துயர் மிகுந்த காலமிது. அம்மாவையும், அண்ணனையும் அப்பா தான் கவனித்தார். என்னால் முழுமையாக இயலவில்லையே என ஒரு குற்றவுணர்வு கூட உண்டு. சரி, இது 'அப்பாவின் கணக்கு' என நினைத்துக்கொண்டேன்.  


நாங்கள் நம்பிக்கையிழந்த தருணத்தில் அம்மா அவளுக்கேயுரிய மன உறுதியின் சிறு ஒளியின் துணை கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். அப்படித்தான் அன்றும் என்னிடம், "சித்திரைத் திருவிழாவுக்கு கூட்டிட்டுப் போ" என்றாள். மீனாட்சி படத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். மகள் வைகாவின் படத்தையும் பார்த்துப் பார்த்து, "இது நல்லாருக்கு... இது நல்லாருக்கு டா..." என சொல்லிச் சிரித்தாள். அன்றிரவு (4.5.2025) தான் நெடுங்காலத்திற்குப் பின்னர் அம்மா நிம்மதியாக உறங்கிப்போனாள். 


அம்மா இறந்த உடனே அவளுடைய இளமைக்கால புகைப்படத்தை தான் தேடிப் பார்த்தேன். எவ்வளவு அழகி அவள். அந்தக் கண்களில் தான் என்ன ஒரு சிறகடிப்பு. அவளா இப்படி ஆகிப்போனாள். முகமே இல்லை இது. உடலெல்லாம் சுருங்கி, வற்றிப்போய், வெறும் எலும்பாக. கண்ணாடிப் பெட்டிக்குள் அம்மாவின் முகத்தை என்னால் பார்க்க சகிக்கவே இல்லை. உயிர் பொங்கிக் கொண்டு வந்தது. "மா..." என கத்தி அழவேண்டும் போலிருந்தது. "நீ போனது கூட உனக்கு ஒரு வகையில விடுதலை மாதிரி தான் மா. ஆனா ஏன் இந்த நிலைமையில போன...?" 

இதை எழுதக்கூட முடியல இப்போ. ஆனா எழுதுனா ஒரு ஆறுதல் கிடைக்குது. அதுனால எழுதி வைக்கிறேன். எந்தப் பிரக்ஞையும் இல்லாம உள்ள இருந்து என்ன வருதோ வரட்டும்னு எழுதுறேன். 


அம்மாவை தகனம் செய்து விட்டு வந்த உடல் அசதியில் அன்றிரவு கொஞ்சம் தூங்கினேன். அப்பாவால் அதுவும் முடியவில்லை. இரவெல்லாம் அண்ணனிடம், "அம்மா எங்கப்பா... அம்மா எங்க..." என புலம்பிக்கொண்டே இருந்தார்.  நான் என்னை மிகக் கட்டுப்படுத்திக் கொண்டே அண்ணனிடம் அந்த வார்த்தைகளை கேட்காமல் இருந்தேன். எனக்குத் தெரியும். இதை அவனிடம் கேட்டால் நான் உடைந்து விடுவேன் என. ஏனென்றால், அண்ணனைப் பொறுத்தவரை அம்மா அவன் உடலுக்கு வெளியில் இருந்து இயங்கிய இன்னொரு உயிர். அம்மாவுக்கும் அவன் அப்படித்தான். அப்படியிருந்தும் அவனை எப்படி விட்டு விட்டுப் போனாள் எனத் தெரியவில்லை. எந்த நியாயத்தைச் சொல்லி தேற்றிக்கொள்வது எனப் புரியவேயில்லை. 


அஸ்தியை கரைக்க நடந்து செல்கையில் ஆற்று மணல் பொசுக்கிய நொடியில் என் உதட்டில் ஒலித்த 'அம்மா' என்ற சொல் திடுக்கென என் முதுகெலும்பில் ஒரு ஊசியைச் சொருகியது. இதுவரை எத்தனை கோடி முறை 'அம்மா' என்றிருப்பேன். ஆனால் முதல் முறையாக அது வெறும் சொல் என உணர்ந்த கணம் உடல் அதிர்ந்து அடங்கியது. இனி அது வெறும் சொல் தானா என மனம் பிதற்றியது. வீட்டுக்கு வந்து எப்போதும், "வைகா, மயிலு, அழகி" என என்னென்னவோ சொல்லி நான் அழைக்கும் என் மகளை அன்று என்னையே அறியாமல் அழைத்தேன் - "அம்மா!"  


 

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...