மாரீசன் - அமைதியும், அலைக்கழிப்பும்
மாரீசன் படத்தில் நான் வியக்கும் முதல் அம்சமே வடிவேலு என்னும் நடிகனுக்குள் இருக்கும் கலைஞனின் முதிர்வு தான். உண்மையில் அது மிகப் பூடகமானது. கூர்மையான அவதானிப்பின் மூலமே அறிய முடிவது. அவரிடம் வெளிப்படும் இந்த புதிய பரிமாணத்திற்காகவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ்ப்படத்தை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.
வடிவேலு அடிப்படையில் தெக்கத்தி பகடியுணர்வின் முகம். அவ்வகையில், காமெடியனாக மட்டும் நமக்குள் பதிந்திருந்த அவருடைய பாவனைகளில் பெரும்பாலும் நாடக அம்சங்களையே பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்திலிருக்கும் வடிவேலு முற்றிலும் வேறானவர். வெறும் உடல் வயதினால் ஏற்பட்ட முதிர்வு மட்டுமல்ல இது. அகவயமாகவே இதுவரை நாம் பார்த்திராத உயரத்திற்கு வந்திருக்கிறார். தமிழ்த்திரையில் சிவாஜி, கமல், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்று அரிதான சில நடிகர்களிடம் மட்டுமே நான் உணரக்கூடிய ஒரு படிநிலையை வடிவேலுவிடமும் இப்போது காண்கிறேன்.
இம்சை அரசன் படத்தில் உக்கிரபுத்தனாக அவர் அப்போதே இந்த புள்ளியை நோக்கி நகர்ந்திருக்கிறார். ஆனால், நாம் தான் அவரை சரியாக பயன்படுத்தவில்லையோ என நினைக்கிறேன். மாமன்னன் படம் இந்தப் போதாமையை போக்கியது. அதற்கடுத்து மாரீசன்.
படத்தில் கூண்டுக்குள் இருந்து தப்பிய எலியொன்று பாம்பிடம் செல்வதாக அமைக்கப்பட்டுள்ள முதல்காட்சியே திரைக்கதையின் நுண்மையான குறியீடு. வடிவேலுவிடம் பகத் பாசில் இப்படியாக வந்து சேர்ந்தாலும் படம் முழுக்க நீடிக்கும் அவர்களுக்கு இடையேயான இணைவும், முரணும் தான் இந்தப்படத்தின் உச்சபட்ச சுவாரசியமே.
'மாரீசன்' எனும் ராமாயண கதாபாத்திரத்தின் உள்ளுறையும் அந்த இரட்டைத் தன்மையை அற்புதமாக தனக்குள் நிலைக்க வைத்திருக்கிறார் வடிவேலு. கள்ளமற்ற ஒரு கிராமத்து வயோதிகரிடம் அந்த ஞாபகமறதி வேடத்திற்கு பின்னால் ஒரு அசாத்தியமான புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதை அவர் ஆரம்பத்திலிருந்தே நமக்கு மறைமுகமாக உணர்த்திக்கொண்டே இருப்பார். இறுதியில் அதற்கான நியாயங்களையும் அவர் சேர்த்திருப்பார்.
பகத் பாசிலின் துடிப்பும், துறுதுறுப்பும் கூடிய அவருக்கேயுரிய அந்த தனித்துவமான கலைமொழி மீது எனக்கு எப்போதுமே மிகுந்த ஈர்ப்புண்டு. இப்படத்தில் வடிவேலுவை விட்டு அகலவும் - அணுகவும் முடியாமல் அவருக்குள் நடக்கும் உளப்போராட்டங்களை அவ்வளவு இயற்கையாக கடத்தியிருப்பார்.
கதாபாத்திரங்களாக வடிவேலுவின் சமநிலையும், பகத் பாசிலின் அலைக்கழிப்பும் மனித மனத்தின் அடிப்படையான இயங்கு நிலைகள். அவற்றின் இருவேறு போக்குகளையே மிக கவனமாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். எழுத்து, இயக்கம், இசை, காட்சியாக்கம், உரையாடல் எல்லாமே துருத்தலின்றி பொருந்தியிருக்கின்றன. படத்தின் பிற்பாதியில் காட்டப்படும் முற்கதைகள் சற்று சோர்வளிப்பது போல தோன்றினாலும் முழுப் படமாக திருப்தியளிக்கிறது.
Comments