மகளுலகு
மகள் வைகாவின் முதல் பிறந்தநாள் அவளுக்குப் பிடித்த காடும், ஆறும், மலையும், பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் என பொலிந்து நிறைந்தது.
இன்று அற்ப ஆணவ சுகத்துக்காக முழுக்க ஆடம்பர போட்டிகளாக மாறி விட்ட திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களின் நோயிலிருந்து மகளையாவது சற்று தள்ளி அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்தே அவள் பிறந்தநாளுக்கு வீட்டை விட்டு கிளம்பிச் சென்றோம்.
மகள் பிறந்ததிலிருந்து குடும்பத்தின் உள்ளேயும் வெளியேயும் கடமையென எங்களைச் சுற்றிச்சுழல்வது அவளுக்கான பொருளாதார சேமிப்புகளும், வளர்ப்பு முறைகளும் தான். அடிப்படையில் இக்கால சேமிப்பு நடைமுறைகள் எல்லாம், உலகமய நுகர்வு வெறியிலிருந்து எவ்வளவு தூரம் நம்மால் விலகி வாழ முடிகிறது என்பதைப் பொறுத்தது. ஒரு குடும்பமாக இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம் கைகளுக்கு அப்பாற்பட்டது. இயன்றவரை எளிமையாய் இருக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் ஆவது.
ஆனால், குழந்தை வளர்ப்பு முறையில் எளிதாக கைக்கொள்ள முடிகிற ஒரு வழி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவளை அவதானித்ததன் மூலமாகவும், அவள் சார்ந்து தேடிக் கற்றவையிலிருந்தும் மிக சீக்கிரமே கண்டுகொண்ட ஒரு உண்மை - குழந்தைகளை வளர்க்க முடியாது, அவர்கள் வளர்வதற்கான சூழலை அல்லது அவர்களே வளர்த்துக் கொள்வதற்கான விதைகளை மட்டும் தான் நம்மால் அளிக்க முடியும் என்பதே.
அவளை வளர்ப்பதற்காக எங்களுடைய அன்றாடங்களை பிரத்யேகமாக மாற்றிக்கொள்வதோ, புதிதாக எதையேனும் கட்டமைத்துக்கொள்வதோ சாத்தியமற்றது. புறவயமான இது போன்ற முயற்சிகள் எல்லாம் மிக தற்காலிகமானவை. அதில் பலனிருக்காது எனத்தெரிந்துவிட்டது. அதனாலேயே ஆரம்பத்திலேயே இந்த குழந்தை வளர்ப்பு ஆலோசனை என்ற வியாபாரக்கூத்துகளை அறவே ஒதுக்கியாயிற்று. அவை ஒரு பெற்றோராக எனக்கு குழப்பத்தையும் பதற்றத்தையும் கொடுப்பவை.
அதனால், உலகியல் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு என் வாழ்க்கையில் இதுவரை எதுவெல்லாம் எனக்கு நிறைவளிக்கிறதோ, எவையெல்லாம் எனக்கான நேர்மறையான மகிழ்ச்சி என்று நான் உணர்ந்திருக்கிறேனோ அவற்றையெல்லாம் அவளுக்கு அப்படியே அளிப்பதை தான் செய்து கொண்டிருக்கிறோம். இயற்கை, இலக்கியம், பயணம், திருவிழா, விலங்குகள், சிறந்த படங்கள் என என்னுடைய செயலூக்கத்திற்கான பாதையில் அவளையும் தோளில் ஏற்றி அழைத்துச் செல்கிறோம்.
இவற்றில் இலக்கியத்தை அறிமுகம் செய்வதற்கான செயல்முறைகள் வைகாவிடம் நல்விளைவுகளை உருவாக்கியிருப்பது தெரிகிறது. தவழ்கையிலேயே கற்கப் பழகுவதற்கான நுட்பங்களுடன் கூடிய புத்தகங்களை வர்ஷினி அறிமுகப்படுத்தினாள். தொட்டுணர்தல் (Touch and Feel) ரகசியங்களை அறிதல் (Peekaboo), விலங்குகள், பறவைகளின் ஒலிகளை, உருவங்களை கவனித்தல் உள்ளிட்டவை அடங்கிய வண்ண வண்ண கெட்டி அட்டைப் புத்தகங்கள். 4 மாதங்களில் அவள் தரையில் அமரத்துவங்கியது முதலே நூல்களை அவள் கண் முன்னால் பரத்தி வைத்தோம். ஆரம்பத்தில் வெறுமனே வண்ண வண்ண உருவங்களுக்காக அவைகளை பார்த்தவள், பின் விலங்குகளின் உடல் முடிகளை தொட்டுப் பழகத் துவங்கினாள். விலங்குகள், பறவைகளின் ஒலிகளை நாங்கள் சொல்லச் சொல்ல உள்வாங்கிக் கொண்டு உடனே அவற்றை அவளுடைய மொழியில் திருப்பிச் சொன்னாள். அவளுடைய வடிவமற்ற இனிக்கும் ஒலிகள் வழியாக ஆதி மானுடனிடம் மொழிப்பரிணாமம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதைக்கூட உள்ளுணரும் பேரனுபவம் வாய்க்கிறது.
இதன் அடுத்த படிநிலையாக அவளுக்கு தும்பி இதழை அறிமுகம் செய்தோம். தமிழ் குழந்தை இலக்கியத்தில் தும்பி ஒரு மகத்தான பற்றுக்கோல். உலக இலக்கியத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தரமான வண்ணப் படங்களுடன் கூடிய கதைகள், அறிவியல், இயற்கை, மனிதம் உள்ளிட்டவை சார்ந்த எளிமைப்படுத்தப்பட்ட தரவுகள் என இந்த இதழ்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எக்காலத்துக்கும் குழந்தைமையை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு ஒளிமிகுந்த வாசல். என்வரையில் வைகாவின் பொருட்டாவது தும்பியை இப்போதேனும் வந்தடைந்ததில் பெரும் ஆறுதல்.
இலக்கியத்தின் நற்றுணையால் டிவி உள்ளிட்ட காட்சியூடக அடிமைத்தனத்திலிருந்து இதுவரை அவளை காப்பாற்ற முடிந்திருக்கிறது. இனியும் முடியும் என்றே நம்புகிறேன். வேறு வழியில்லாமல் அவளை திசை திருப்பும் தேவையேற்படில் மட்டும் விலங்குகள், பறவைகளின் வீடியோக்கள், அட்டன்பரோவின் ஆவணப்பட காட்சிகள் காண்பிக்கிறோம். அரிதாக சில சினிமா பாடல்கள். கார்ட்டூன் வீடியோக்களுக்கு எப்போதும் இடமில்லை. அவை குழந்தைகளின் ஆழ்மனதை வன்முறையும், சராசரித் தன்மையும் கொண்டதாக ஆக்குகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன.
பயணத்தை அறிமுகம் செய்வதற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடுவதில்லை, அப்படி மெனக்கடுதல் எல்லா நேரமும் இயல்வதுமல்ல. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்வதற்கு எப்போதெல்லாம் சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். குடும்பமாகவே செல்வதால் நமக்கே தெரியாமல் கூட வந்தமைந்து விடுகிற சுற்றுலாத்தனமான செயல்களை எவ்வளவு தவிர்க்க முடியுமோ தவிர்த்துக் கொள்கிறோம்.
இதுவரை மிகக்குறைந்த காலத்துக்குள் நாங்கள் அதிக பயணங்கள் மேற்கொண்டது மகள் வந்ததற்கு பின்னரான இந்த 12 மாதங்கள் தான். தஞ்சை பெரிய கோயில், ஶ்ரீரங்கம்; தென்காசி, பாபநாசம் தாமிரபரணி, அகஸ்தியர் அருவி, பண்பொழி முருகன் கோயில், கேரள பாலருவி; அவளுக்கு முதற்சோறு ஊட்டுவதற்காக குருவாயூர், திருச்சூர், அதிரப்பள்ளி அருவி; கும்பக்கரை, மேகமலை, தென்மலை, அச்சங்கோவில், மணலாறு; பெங்களூரு பானர்கட்டா மிருக்காட்சிக்கூடம் என எல்லாம் அவளுடைய நினைவுகளின் பகுதியாகவே எங்கள் மூளையில் பதிவாகியிருக்கின்றன.
இவற்றின் நீட்சியாக இப்போது பிறந்தநாள் பயணம். வால்பாறை அருகேயுள்ள மானாம்பள்ளி என்கிற ஆனைமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில். எந்நேரமும் மழை வியாபித்திருந்த அடர் காடும், ஆர்ப்பரித்து பாயும் சோலையாறும் சூழ வாய்த்த அழகிய தருணம். இங்கும், வால்பாறையில் தேயிலைக் காடுகளின் நடுவே பரந்தோடிய ஆற்றின் கரையிலும் நின்று வைகாவுக்கு சிறிய துண்டு கேக்குகளை ஊட்டி அவளுக்கே பிடித்தவகையில் அவளுடைய பிறந்தநாளை கொண்டாடினோம்.
இப்படி அவள் மூலமாக துளித்துளியாய் நாங்கள் சேகரித்துக்கொண்ட ஒவ்வொரு கணங்களிலும், புதிதாக எதைக் கற்கும்தோறும் நிகழ்கிற அவள் இமைவிரிவுகள் அளிக்கும் பெரும்பித்து ஈடற்றது.
உயிரியல் தொடர்ச்சியென உருவெழுந்தவளை எப்போதும் கைகளிலும், தோளிலும் சுமந்தபடியே அவளுடைய விழியின் வழியே இவ்வுலகை காண்பது தித்திக்கும் இறையனுபவம்.
என்றும் இவற்றை தீராது அருள்க தவமே.
Comments