'அருள்மிகு' கதையனுபவம்

நண்பர் ரகுநாத் தனது முதல் சிறுகதை தொகுப்பான 'அருள்மிகு' மூலம் புனைவுலகு நோக்கிய தனது சாளரத்தை திறந்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு எனது இதமான தழுவல்கள். கீழக்குயில்குடி மலை அடிவாரத்தில் ஒரு தேநீர்ப் பொழுதில் தன்னுடைய சிறுகதை தொகுப்பு குறித்து அவர் முதல்முறையாக என்னிடம் பகிர்ந்து கொண்ட கணம் நிகழ்ந்த அதே இமை விரிவுடனேயே இந்த தொகுப்பை முழுமையாக படித்து முடித்தேன். எப்போதும் அவரிடம் நானுணரும் எள்ளலும், துடிப்பும் மிகுந்த அந்த கள்ளமின்மையின் சாரத்தை எல்லா கதைகளிலும் காண முடிந்தது. சமூகத்தின் இடுக்குகளில் பொருக்கோடிப் போன நூற்றாண்டுகளின் கறைகளை சுரண்ட முற்படும் பொருட்டு தன்னுடைய கதைகளை பகடித் தன்மையுடன் அவர் அணுகியிருக்கும் விதம் மாறுபட்டதொரு வாசிப்பனுபவம். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களில் வைதீகம் செலுத்திய ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்துதல், எளிய மக்களிடம் இயங்கும் சாதி, மதம் சார்ந்த உளவியல் சிடுக்குகளை ஆராய்தல், பாலின சமநிலையின்மையும், பெண்ணுரிமையையும் பிரக்ஞைப் பூர்வமாக அணுகுதல் என பல நுட்பமான கருக்களை எளிய மொழியில் தன் பெரும்பாலான கதைகளின் மையங்களாக்கியிருக்கிறார். மனித அகத்தில் ஈரத்தின் சுவடுகள் தெரியும் இடங்களை இன்னும் ஆழமானதாக்கும் தருணங்கள் கொண்ட 'சவிக்கை', 'விடுதலையின் தூரம்' போன்ற கதைகள் எனக்கு கூடுதல் நெருக்கமானவை. கட்டற்ற புறவுலக அவதானிப்புகளை புனைவின் சாத்தியங்களுக்காக கூர்மைப்படுத்தும் அவரது பாங்கும், அவருடைய அரசியலறிவும் கற்பனையும் இணையும் அழுள்ளமும் இதே போல் இன்னும் இன்னும் விரிவெய்திட என் ஆதுரமான வாழ்த்துக்கள். சித்தார்த்தனும், ரோகித்தும் மட்டுமல்ல நாங்களும் தான் காத்திருக்கிறோம் நிறைய கதைகளுக்காக.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!