தீரா தீர்தல்

எங்கே
நீ விட்டுச் சென்றாயோ
அங்கேயே அப்படியே
கிடக்கிறது நம் வாழ்வு.
என் பார்வையின்
விளிம்பில் கிடந்து தத்தளிக்கின்றது.

அதற்கெந்த
பிரத்யேக சேதமும்
ஏற்பட்டுவிட வேண்டாமென்கிற
கவனம் ஒருபுறம்.

அதை
வாரி அள்ளி
மார்போடு சாய்த்து அதன்
படபடப்பை ஆசுவாசப்படுத்த வேண்டும்
என்கிற அக்கறை மறுபுறம்.

அகம்புறமாய்
இரு நிலைகளும்
என் நிலையை நான் தேடும்
நிலைக்குள்ளாக்கும் பலமுடையவை.

அதுதான் பயம்.
பேய், பூச்சி என்றால்
ஏதேனும் சரணம் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் இது
சகலமும் சரணமடைதல் அல்லவா.

ஆதலால் இப்போது
செய்வதறியா நிலை.
எந்த நிலையிலும்
இந்த நிலை
வேண்டாமென்று தான் நினைத்தேன்.
வேண்டும் வேண்டாமென்பது பற்றி
நினைவிற்கென்ன தெரியும்.

ஆக,
அந்த வாழ்வின் மீது
உனக்கென்ன கரிசனம்
இருக்கும் இருக்காதென்பதை
பற்றி எனக்குத் தேவையில்லை.
தேவையெல்லாம்
தீராக்கணக்கின் தீர்வு மட்டுமே.

தீர்வதற்கு
இது வெறும் கணக்கல்ல
வாழ்வு.
அது தீராதது.
தீரா தீர்தல் தான்
நம் தீர்வு.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...