ஏன் தடுக்கப்பட்டார்கள் மீனாட்சியின் மக்கள்?

சித்திரைப் பெருவிழாவையே அவ்வளவு பொறுப்புடன் கொண்டாடும் மக்கள் இப்போது ஏன் இவ்வளவு திணறும் நிலைக்கு ஆளானார்கள்? அத்தனை இயல்பாக நடந்திருக்க வேண்டிய குடமுழுக்கு ஏன் இவ்வளவு குளறுபடியானது?
மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பதால் பெருந்திரளான மக்கள் வருவார்கள் என கோவிலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எதிர்பார்த்தன. அரசு அப்படி எதிர்பார்ப்பதும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமானது, நியாயமானதே. ஆனால், அந்த ஏற்பாடுகளில் மக்களுக்கு எந்த இடமும் இல்லாவிட்டால் அதற்கு என்ன பொருள்? பாதுகாப்பு என்ற பெயரில் கோயிலை சுற்றியுள்ள அத்தனை வழிகளையும் தடுப்பு வைத்து அடைக்க வேண்டிய அவசியம் என்ன?
எவ்வளவு கூட்டம் வந்தாலும் நெரிசலாகிற அளவுக்கு ஆபத்து கொண்டதல்ல மதுரையின் அமைப்பு. கோவிலை சுற்றி - சித்திரை வீதி - ஆவணி மூல வீதி - மாசி வீதி - மாரட் வீதி - வெளி வீதி என தாமரை இதழ்கள் போல அத்தனை அடுக்குகள் கொண்டது மதுரை நகரம். எந்த வழியில் வந்தாலும் எந்த வழியிலும் வெளியேறும் அளவுக்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே அத்தனை திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊர் இது. தேர் வடம் போவதற்கு கூட நான்கு திசையிலும் தெருக்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையையாவது அரசின் நிர்வாகங்கள் புரிந்து கொண்டிருந்தால் போதும். மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டிருக்காது.
அதைவிட்டுவிட்டு, குடமுழுக்கிற்கு 3 நாட்களுக்கு முன்பிருந்தே 'பாதுகாப்பு' என்ற பெயரில், சித்திரை வீதி துவங்கி மாசி வீதி வரை அனைத்தும் அடைக்கப்பட்டன. முதல் நாளே கடைகள் எல்லாம் மூடப்பட்டன. கொரோனா காலம் மாதிரி அவ்வளவு கட்டுப்பாடுகள். கோவிலை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள், தொழில் செய்வோர் எல்லோரும் அடையாள அட்டை காண்பித்து சென்றார்கள். வீடுகளின் மாடியில் உரிமையாளர் தவிர யாரும் நின்று குடமுழுக்கு பார்க்க தடை விதிக்கப்பட்டது. ஆபத்தான கட்டிடங்களை இடிக்குமாறு குடமுழுக்கிற்கு முதல் நாள் (செப்.16) வந்து நோட்டீஸ் ஒட்டியது மாநகராட்சி.
கோவிலின் மேல் தளத்தில் நின்று தரிசனம் செய்வதற்கு 8 வகையான பாஸ்கள் விநியோகிக்கப்பட்டன. அவை, அரசின் பிரதிநிதிகள், நீதிபதிகள் துவங்கி நன்கொடையாளர்கள் வரை பயன்படுத்தப்பட்டன. எந்தெந்த 'பாஸ்' வைத்துள்ளவர்கள் எந்தெந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என்பது வரை தீர்மானக்கப்பட்டன. ஆனால், மேல் தளத்தில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்பட உள்ளனர் என்ற தகவல் மட்டும், ஊடகங்கள் எவ்வளவு கேட்டும் இறுதி வரை சொல்லப்படவே இல்லை.
இவ்வளவு திட்டமிடலிலும் தெளிவாக தெரிந்த ஒன்று - கோவிலை ஒட்டியுள்ள சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது. அது தான் மிகப்பெரிய தவறு. இது எப்படியும் சிக்கலை உருவாக்கும் என முன்கூட்டியே கணித்தோம். இது பற்றி கேட்டதற்கு, 'பாதுகாப்பு' என காரணம் சொன்னார்கள். அவ்வளவு பெரிய சித்திரை வீதியை 'பாஸ் உள்ளோர்' மட்டும் வந்து செல்வதற்கான வழியாக பயன்படுத்தினார்கள். அவர்கள் வந்து செல்வதற்கு தாராளமாக தடுப்புகளுடன் கூடிய ஒரு தற்காலிக வழியை ஏற்படுத்திக்கொண்டு, மீதமுள்ள இடங்களில் பொதுமக்களை அனுமதித்திருக்கலாம். அதை செய்யவில்லை.
பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு செயற்கையான பதற்றம் தான் உருவாக்கப்பட்டது. அதனாலேயே எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் வரவில்லை. கோவில் மேல் தளத்தில் கூட கூட்டமில்லை. குடமுழுக்கு பார்க்க இரவிலிருந்து காத்திருந்த பொதுமக்கள் ஆவணி மூல வீதிகளில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்தாவது கூடியிருந்த மக்களை சித்திரை வீதியில் அனுமதித்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. அதனால் தான் மக்கள் கடும் விரக்திக்கு உள்ளானார்கள். "கூட்டமே இல்லையே, இன்னும் எங்களை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்?" என கேட்டார்கள். "எங்களுடைய மீனாட்சி குடமுழுக்கை பார்க்க எங்களுக்கு அனுமதியில்லையா?" என்று கொதித்தார்கள்.
மக்களுக்கு நேர்ந்த அவமதிப்புகளிலேயே உச்சம் என்னவென்றால், ஒரு துளி தீர்த்தம் தங்கள் தலையில் விழுந்தால் போதும் என ஏங்கியிருந்த மக்களை சமாளிப்பதற்காக, வெறும் தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் மீது போலீஸ் ஊற்றியது தான். "எங்களை முட்டாள் என நினைத்தீர்களா?" என மக்கள் வெகுண்டார்கள்.
இவை எதையும் சரிசெய்ய இயலாமல், 'எல்லாம் மக்களின் பாதுகாப்புக்காக தான்' என மேலோட்டமாக ஒரு காரணத்தை சொல்லி விட்டு, குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றதாக நழுவி சென்றார்கள் அமைச்சர்கள்.
அடிப்படையில், 'பாதுகாப்பு' என்பது - மக்கள் பங்கேற்பையே துண்டித்துவிட்டு, யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை என மார்தட்டிக் கொள்வதல்ல. மக்கள் பத்திரமாக பங்கேற்பதை உறுதி செய்வது தான். மக்களை அவசியமில்லாமல் பதற்றத்திற்கு உள்ளாக்குவதற்கு பெயர் கட்டுப்பாடு அல்ல, அது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் திறமின்மையின் வெளிப்பாடு. அப்படி ஆகிவிடுமோ, இப்படி ஆகி விடுமோ என அவர்களாக ஏதேதோ நினைத்துக்கொண்டு அவ்வளவு அற்புதமாக நடந்திருக்க வேண்டிய விழாவை குதறி விட்டார்கள்.
"இருக்கிறவனுக்கு ஒரு நியாயம், இல்லாதவனுக்கு ஒரு நியாயமா? இதையெல்லாம் கேக்க நாதியில்லையா" என நிர்க்கதி நிலையில் மக்கள் சொன்ன வார்த்தைகளின் பின்னாலுள்ள வலியை அறியாமலா இருப்பாள் மீனாட்சி!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!