கொரோனா - நன்றியும், வேண்டுதலும்!


கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து அது குறித்த அச்சமே நம்மை பாதுகாத்துக் கொள்ளும் கவசமாகவும் அமைந்திருந்தது. மாஸ்க், தனி மனித இடைவெளி, சானிடைசிங், கபசுர குடிநீர் என கடந்த ஆண்டு முழுவதும் மூளைக்குள் புகுத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை உணர்வு அதிக பாதுகாப்பு ஊக்கங்களுடன் இயங்க வைத்தது. அவ்வப்போது அறிகுறிகள் தென்பட்டாலும், கபசுர குடிநீர் உள்ளிட்டவை அளித்த நோய் எதிர்ப்புச் சக்திகள் காப்பாற்றின.

முதல் அலை சற்று ஓய்ந்தவுடன் துவங்கிய தேர்தல் பணிகளில் அந்த பாதுகாப்பு உணர்வு சற்று மழுங்க துவங்கியது. முக கவசம் அணிவதில் கவனம் இருந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த கவனமின்மை காரணமாக இப்போது கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஏப்.7 - 9 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து வாயிலாக சென்னைக்கு சென்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த பயணத்தின் போது தான் தொற்று தாக்கியிருக்க வேண்டும் என கருதுகிறேன். ஏப்.12 பிற்பகலில் உடல் வலி, காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் தென்பட்டன. வெயில் காரணமாக அவை இருக்கலாம் என கருதிய நிலையில், ஏப்.13 அன்று சுவை, மணம் உணர முடியாமை, வயிற்றுப் போக்கு உள்ளிட்டவை அதை உறுதி செய்தன. தனிமைப் படுத்திக் கொண்டு ஏப்.14ல் மதுரை அரசு மருத்துவமனையில் சளி மாதிரிகள் அளித்தேன். ஏப்.15 அன்று தொற்று உறுதி செய்யப்பட்ட உடன், குடும்பத்தினரை பரிசோதிக்க வைத்து விட்டு, நேரே கிளம்பி ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கிருந்த கள யதார்த்தம் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆபத்தை உள்ளுக்குள் மிகத்தீவிரமாக விதைத்தன. திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா நோயாளிகள். மருத்துவமனை வளாகத்திற்குள் மக்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருந்தது. சளி மாதிரி அளிக்க வந்த போது இருந்ததை விட அப்போது கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எவ்வளவோ நோயாளிகளை குணப்படுத்தி அனுப்பிய அரசு மருத்துவமனை நம்மையும் எளிதாக குணப்படுத்தி விடும் என நம்பிக்கொண்டு இருந்த என் எண்ணங்களை கண்முன் காணும் காட்சிகள் உடைத்துக் கொண்டிருந்தன.

அரசு மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற அங்கிருந்த செவிலியர்கள் பரிந்துரை செய்து கொண்டிருந்த நிலையில், சக ஊடக நண்பர்கள் அறிவுறுத்தல் காரணமாக மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
மாநகராட்சி ஆம்புலன்ஸ் ஒன்றில் இடமாற்றம் கோரிய நோயாளிகள் அனைவரும் ஏற்றப்பட்டோம். ஒரு ஆம்புலன்சில் 7 பேர்.
அது உள்ளுக்குள் விதைந்திருந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தினாலும், அதிலிருந்து தப்ப வேறு வழியில்லை.
அரசு செய்த அவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் போதாது என்பதை அந்த கணத்தில் உறுதி செய்து கொள்ள முடிந்தது.

வெளியில் இருந்த மொத்த சூழலும் ஏற்படுத்தியிருந்த கணிப்புகளை தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகம் சட்டென்று தலைகீழாக மாற்றியது.
திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, இன்னிசை, பறவைகள் கீச்சொலி, பேரமைதி.
அவை கொரோனாவில் இருந்து மீள்வதற்கு வேண்டிய நம்பிக்கையை போதும் போதும் என்ற அளவிற்கு அள்ளித்தந்தன.
தேர்தல் கால பணி நெருக்கடிகளுக்கு பின்னர் இயல்பாகவே உடலும் மனமும் சிறு ஓய்வை தேடிய நிலையில், எதிர்பாராமல் கொரோனா வழியாக காலம் அதற்கான வாய்ப்பை வழங்கியது. தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகம் அதற்கு ஏற்ற இடமாக தோன்றியது.

இந்த நம்பிக்கையின் முழு நன்றிக்கு உரியவர் மருத்துவமனை வளாக அதிகாரி, மருத்துவர் காந்திமதி நாதன். பல்லாண்டுகளாக காச நோயாளிகள், மன நோயாளிகள் மீது கொண்டிருந்த அதே அக்கறையை, கொரோனா நோயாளிகள் மீதும் கொண்டிருந்தார். அதற்கு அந்த வளாகமே சாட்சி.

காலை எழுந்ததும் நடை, சுவாச பயிற்சி. 8 மணி அளவில் கபசுர குடிநீர் மற்றும் உடல் வெப்பம், இரத்த கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகள்.
9:30 மணி அளவில் ஒரு அவித்த முட்டையுடன் காலை டிபன். ஓரிரு மணி நேரத்திற்கு பின் மிளகுப்பால். 1-2 மணி அளவில் அவித்த முட்டை, கீரையுடன் மதிய உணவு. 4 மணிக்கு மீண்டும் கபசுர குடிநீர், 6 மணிக்கு சுண்டலுடன் மிளகுப்பால். பின், சுவாச பயிற்சி அடங்கிய மருத்துவ ஆலோசனை. 8 மணி அளவில் வாழைப் பழத்துடன் இரவு உணவு.

ஓரிரு நாளிலேயே குணமடைந்து விட்ட உணர்வை வளாக சூழலும், உணவும், மருத்துவர்களும், சக கொரோனா போராளிகளும், தொலைபேசி வழியாக நற்சொற்கள் தந்த உறவுகளும் அளித்தனர்.

இவற்றுடன் சில புத்தகங்கள். கல்லூரி காலத்திற்கு பின் கைவிட்ட வெறிபிடித்த வாசிப்பை மீண்டும் கைக்கொள்ள முடிந்தது. தினம் ஒரு புத்தகம்; அவை அளித்த பேரனுபவம்; அக முன்னேற்றம்... அனைத்தும் மீண்டும் புதிதாய் பிறந்த உணர்வெழுச்சியை அளித்தன.
படி இது தான் உனக்கான நேரம் என மேலும் சில புத்தகங்களை அளித்து ஊக்கப்படுத்திய அண்ணன், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் க்கு அன்பில் திளைத்த நன்றிகள்.

சிகிச்சை காலத்தில் படித்த 'நீர்வழிப் படூஉம்' நாவலில், "என்ன செய்தும் வசப்படாத அந்த வாழ்வை அவர்கள் நேசித்தார்கள்" என்று தன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் தேவிபாரதி.
வாழ்வில் மீண்டும் பிறந்த எல்லோராலும் அந்த வரியின் உள்ளெழுச்சியை உணர முடியும். எனை மீண்டும் பிறப்பித்த கொரோனாவிற்கு நேசம் மிகுந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

கொரோனா பாதித்தாலும் அது மதுரையில் நிகழ வேண்டும் என்ற நிறைவுடன் அங்கிருந்து இன்று (ஏப்.23) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
என் வாழ்க்கையில், மிகவும் பிடித்திருந்தும் போய் வருகிறேன் என சொல்ல முடியாமல் பிரிந்த ஒரே இடம் என்றால் அது மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகம் தான்.
இருந்தாலும் இன்னும் பல நோயாளிகள் யான் பெற்ற இன்பம் பெற வேண்டும் என உள்ளுக்குள் ஒருபுறம் வேண்டிக் கொண்டேன்.
அதே நேரம், இந்த வேண்டுதல் பொய்யாக வேண்டும் என்றும் மறுபுறம் வேண்டிக் கொள்கிறேன்.
ஏனெனில், இங்கும் படுக்கைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன!
...

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து மீண்ட தருணத்திலிருந்து எழுதியது.
2021, ஏப்ரல்

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...