கடைசி விவசாயி - ஒரு பண்பாட்டின் மழைப்பாடல்!


இந்தப்படத்தை எடுப்பதற்கெல்லாம் பெரும் துணிச்சல் வேண்டும் என்ற மொண்ணைத்தனமான பாராட்டை இயக்குனருக்கு அளித்தால் அது தான் இந்தப் படைப்புக்கு செய்யும் முதல் இழுக்கு.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என பிறிதொன்றிலாத படைப்பூக்கம் மிகுந்த படங்களின் வழியாக தமிழ் திரையுலகில் முட்களின் நடுவே ஒரு ஒற்றையடிப்பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார் மணிகண்டன். அந்தப்பாதை அவருக்களித்த தன்னிகரில்லா தன்னம்பிக்கையும், தமிழ்த்திரையுலகில் விரிந்து கிடக்கும் தார்ச்சாலைகள் ஏற்படுத்திய சலிப்பினாலும், மலினங்களினாலும் அவர் கடைசி விவசாயியை படைத்திருக்கிறார்.

அந்த ஒற்றையடிப்பாதையின் முன் நீண்டு கிடக்கும் ஒரு நெடுங்கோட்டை வரைந்து அந்த பாதையின் போக்குக்கு ஒளி படர்த்தியவர் பாலுமகேந்திரா. இப்போது இந்த படத்தின் வழியாக அந்த கோட்டை மணிகண்டன் தொட்டு விட்டார் என்றே உணர்கிறேன்.

கடைசி விவசாயி ஒரு பண்பாட்டின் விழுமியங்களை தளராமல் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் முனகல். அந்தப் பண்பாட்டின் மனிதர்கள் இன்றி, அவர்களின் பூமி இன்றி, அவர்களின் வாழ்க்கை இன்றி இந்தப்படைப்பு சாத்தியமில்லை.

படத்தில் எனக்கு தாளாத பிரமிப்பை ஏற்படுத்தியது மாயாண்டியின் கண்கள் தான். படம் முழுவதும் எந்தச் சலனமுமின்றி அவர் கண்கள் கடத்தும் உணர்ச்சிகளுக்கு ஈடாக எந்த காட்சியும், எந்த இசையும், எந்த வார்த்தையும் சமன் செய்ய முடியாது.
மாடுகளுடனும், கோழிகளுடனும், வயலுடனும், நீருடனும், நிலத்துடனும், மலையுடனும், மயிலுடனும், மனிதர்களுடனும், வானுடனும், ஜெயிலுடனும் அவர் அந்தக் கண்கள் வழியாகவே உரையாடுகிறார். வெறுமே நிலை குத்தி நிற்பதுபோல் தோன்றும் அந்தப் பார்வைகள் நிகழ்த்தும் நிழலாட்டங்கள் எல்லோராலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள இயலாதவை.

மாயாண்டியின் கண்கள் மட்டுமல்ல கால்களும் இணையில்லாதவை. அவருடைய கால் பாதங்களுக்கு மட்டும் குறிப்பாக இரண்டு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்று, அவரை காவலர் அழைத்துச் செல்கையில் இருவேறு செருப்புகளை அணியும் போது. மற்றொன்று, "இதுக்குள்ளையா...?" என உணர்ச்சியற்ற அவரது குரலொலியுடன் ஜெயில் கம்பிகளை கடந்து செல்லும் போது.
இதே போல, விடுதலையாகும் போது மாயாண்டியின் இடதுகை கட்டை விரலில் வைக்கப்பட்ட மையை, வலது கை கட்டை விரல் மூலம் அழிக்கும் காட்சி கடத்தும் வரலாற்றின் வலி உறைவுக்கு உள்ளாக்குபவை. இந்த காட்சிகள் போதும் கடைசி விவசாயியின் மொத்த காட்சியியல் அனுபவத்தையும் புரிந்துகொள்வதற்கு.

பறவைப் பார்வையில் மலைகளையும், வறண்ட நிலங்களையும், சூரிய அஸ்தமன/உதயங்களையும் அவசியத்துடனேயே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதிலும், இடி விழுந்து பட்டுப்போன பெருமரம் ஒன்றை அறுத்துக் கூறாக்கும் போது வரும் காட்சிக்கோணம், அது மரம் என்பதற்கு மாறாக ஒரு மனிதர் என்ற தோற்றத்தையே அளித்தது.

"மரம்னு ஒன்னு இருந்தா விதைன்னு ஒன்னு இருக்கும்ல" ; "விதையில்லாத தக்காளியை உருவாக்கினவனுக்கு விதைக்கொட்டை இல்லாமல் ஒரு மகன் பிறந்தால் அருமை தெரியும்" ; "பணத்தை வாங்கி தலைக்கு வைத்து படுக்கவா?" ; "துட்டு இன்னைக்கு வரும், நெல்லு உசுரு இல்லையா? ஒத்த உசுருக்காக ஆயிரம் உசுரை கொல்லுறதா?" என மாயாண்டி பேசும் வார்த்தைகள் எதுவும் மணிகண்டனின் வார்த்தைகள் அல்ல, அவை நிஜ மாயான்டியின் வார்த்தைகள் என நம்புவதற்கு துளி இடையூறையும் திரைக்கதை செய்யவில்லை.

மாயாண்டியை போலவே இந்தப் படத்தின் பிற பாத்திரங்கள் அனைவரும் அவரவரே. கதைக்காக அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை, கதை அவர்களுக்காக உருவாகி வந்துள்ளதாகவே கருதுகிறேன். அந்த பாத்திரங்களின் எள்ளல்கள் வழியாக மணிகண்டன் நினைவூட்டும் சமூகம், சாதியம், பொருளாதாரம், அதிகாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகள் ஏராளம்.

"எந்தக் கேள்வியும் கேக்காம தனியார் பேங்க் லோன் தருவான்" ; "எல்லா சாதிக் காரர்களும் இருந்தா தான் சாமி வரும்" ; "ரெண்டு பேரும் வேற வேற ஆளுக, அதுனால சாட்சியை மாத்தி சொல்ல மாட்டான்" ; "ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை இல்லாமல் உன்னை குடிமகன் என எப்படி நம்புவது?" ; "நேர்மையானவங்க தேர்தல்ல நின்னா காசு வாங்காம ஓட்டு போடுவேன்" ; "குற்றவாளிகளை பிடிக்க முடியாவிட்டால் நல்லவர்களை குற்றவாளியாக ஆக்க கூடாது" ; "மலைகள் திடீரென காணாமல் போகிறது" ; "எல்லாம் தெரியும் என்றால், ஜி.எஸ்.டி தெரியுமா?" ; "தமிழ்நாட்டை முருகன் ஆள்கிறான்" ; "டெங்கு காய்ச்சல் வந்த போது நிலவேம்பு மரம் காணாமல் போச்சு" ; "பைத்தியக்காரனை தவிர எல்லாருக்கும் வட்டிக்கு கொடுத்துருக்காங்க" என படத்தில் ஆங்காங்கே இழையோடும் இந்த வசனங்களில் ஒன்று கூட கதைக்கு மேல் துருத்தவில்லை.

"காட்சிகளால் ஒன்றை சொல்ல முடியாத போதே சொற்களின் உதவியை நாடுகிறேன்" என்றும், "பார்வையாளனுக்கு எதையும் மூக்கில் வைத்து தேய்க்க கூடாது" எனவும் காட்சியிலக்கணம் வகுத்தவர் பாலுமகேந்திரா. அந்த இரண்டு விதிகளையும் இந்தப் படத்தில் மிக நேர்த்தியாக செயல்படுத்தியிருக்கிறார் மணிகண்டன்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்படத்தில் மணிகண்டன் நிகழ்த்திய உச்ச அனுபவம் ஒன்றுண்டு. அது, தமிழ்க்குடிகளின் வாழ்வியல் பறவையாக மயிலை சித்தரித்து, அதன் அகவும் ஒலியை குறியீடாக பயன்படுத்திய விதம்.

இறுதி காட்சி ஒன்றில், மாயாண்டி இறந்து விட்டதாக எண்ணி நீதிபதி, காவலர்கள், சக கைதி என எல்லோரும் பதற்றத்தில் அவரை நோக்கி கூச்சலிடுகிறார்கள். அப்போது அந்த கூச்சலை தொடர்ந்து சில காகங்கள் கரையும் ஒலி கேட்கிறது.
சில நொடி அமைதிக்குப் பின்னர் மயில் அகவும் ஒலி கேட்கிறது. சட்டென்று எழுந்து அமர்கிறார் மாயாண்டி. மயிலாக அகவியது அவர் மகன் ராமையா என்றும் காகங்கள் போல கரைந்தது, இன்ன பிறர் என்றும் உணர்த்திய அந்த காட்சி இதுவரை அடைந்திராத பேரனுபவம்.

இந்தப்படம் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டதன் காரணமே இந்த காட்சியை பின்தொடர்ந்து வரும் முடிவு தான். உண்மையில் அது முடிவல்ல, பெரும் மழைப்பாடலுக்கான துவக்கம்!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...