மகளுலகு

மகள் வைகாவின் முதல் பிறந்தநாள் அவளுக்குப் பிடித்த காடும், ஆறும், மலையும், பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் என பொலிந்து நிறைந்தது. இன்று அற்ப ஆணவ சுகத்துக்காக முழுக்க ஆடம்பர போட்டிகளாக மாறி விட்ட திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களின் நோயிலிருந்து மகளையாவது சற்று தள்ளி அழைத்து வந்துவிட வேண்டும் என நினைத்தே அவள் பிறந்தநாளுக்கு வீட்டை விட்டு கிளம்பிச் சென்றோம். மகள் பிறந்ததிலிருந்து குடும்பத்தின் உள்ளேயும் வெளியேயும் கடமையென எங்களைச் சுற்றிச்சுழல்வது அவளுக்கான பொருளாதார சேமிப்புகளும், வளர்ப்பு முறைகளும் தான். அடிப்படையில் இக்கால சேமிப்பு நடைமுறைகள் எல்லாம், உலகமய நுகர்வு வெறியிலிருந்து எவ்வளவு தூரம் நம்மால் விலகி வாழ முடிகிறது என்பதைப் பொறுத்தது. ஒரு குடும்பமாக இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நம் கைகளுக்கு அப்பாற்பட்டது. இயன்றவரை எளிமையாய் இருக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் ஆவது. ஆனால், குழந்தை வளர்ப்பு முறையில் எளிதாக கைக்கொள்ள முடிகிற ஒரு வழி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவளை அவதானித்ததன் மூலமாகவும், அவள் சார்ந்து தேடிக் கற்றவையிலிருந்தும் மிக சீக்கிரமே கண்டுகொண்ட ஒரு...