நண்பகல் நேரத்து மயக்கம் - கனவின் மறுபிறப்பு
மலையாள இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மீது எனக்கு தனிப்பெருங்காதல் உண்டு. அன்றாடங்களினுள் புதைந்திருக்கும் அழகியலையும், முரண்களையும், உறவுச்சிக்கல்களையும் கதைகளாக்கி அலட்டல் இல்லாமல் சினிமாவாக்கும் இயல்பு மலையாள படைப்புலகிற்கு உண்டு எனில், அந்த இயல்பில் நின்று கொண்டே கற்பனையின் அதீத சாத்தியங்களை எட்டும் இயல்பு லிஜோவினுடையது.
எந்த இலக்கியமும், சினிமாவும் அதன் செவ்வியல் தன்மையை நிறைவு செய்யும் இடம் என்பது, அது அதன் வாசகர்களுக்கு/பார்வையாளர்களுக்கு அளிக்கும் அகவெளியை பொறுத்தே அமையும். அந்த வகையில், இதுவரை லிஜோ இயக்கியவற்றில் ஈ.மா.யூ.,வும், ஜல்லிக்கட்டும் அளித்த வெளியின் நீட்சியாகவே தற்போது அவருடைய "நண்பகல் நேரத்து மயக்கம்" படத்தை உணர்கிறேன்.
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் குழுவில் உள்ள சராசரி குடும்பத் தலைவரில் ஒருவர் ஜேம்ஸ் (மம்மூட்டி). நண்பகல் நேரத்து பயணத்தில் தூக்கம் கலைந்து எழும் ஜேம்ஸ், வேனை நிறுத்தச் சொல்லிவிட்டு சாவகாசமாக இறங்கி நடக்கிறார். பெரும் பொன்னிற வயல் வெளியை கடந்து சிறு கிராமம் ஒன்றின் வீதிகள் வழியாக எந்த தடுமாற்றமும், சந்தேகமும் இன்றி நடந்து சென்று ஒரு வீட்டை அடைகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அந்த வீட்டின் குடும்பத்தலைவன் சுந்தரமாக அங்கே சம்பவிக்கிறார். தொலைந்து போன கணவனின் பாவனையை வேறொருவன் உருவத்தில் கண்ட அதிர்ச்சியிலிருக்கும் சுந்தரத்தின் மனைவிக்கும், வேறொருத்தியின் கணவனாக மாறிவிட்டவனுக்குள் இருந்து தன் கணவனை மீட்பது எப்படி எனும் தவிப்பிலிருக்கும் ஜேம்ஸின் மனைவிக்கும் இடையிலான சூழல்களின் வினைகளும் எதிர்வினைகளும் தான் படம்.
இறுக்கமும், சிடுசிடுப்பும், பழமையுணர்வும் கொண்ட ஜேம்ஸாகவும், அதற்கு நேரெதிராக எளிமையும், கொண்டாட்டமும், கட்டற்ற அன்பும் கொண்ட சுந்தரமாகவும் மம்மூட்டி அளிக்கும் தரிசனங்கள் ஈடற்றவை. பின்னனி இசையென்று தனியாக ஏதுமில்லாமல், அவைகளுக்கு மாற்றாக பழைய தமிழ்ப்பட பாடல்களையும் உரையாடல்களையும் பொருத்தியிருக்கும் கற்பனை அலாதியானது. நிலைத்த சட்டக காட்சிகளின் (Block shots) ஒழுக்கில் பயணிக்கும் கதை, சம்பவங்களுக்கு அப்பால் நேரடி காட்சியுணர்வாகவே நினைவில் நீடிப்பது தனித்த கலையனுபவம். ஒரு மலையாள படத்தில் தமிழ் உரையாடல் துளி துருத்தலின்றி இயற்கை சிதறாமல் அளவாக வெளிப்பட்டிருப்பது அற்புதம். சுந்தரமாக இருக்கும் ஜேம்ஸை குடும்பம் அனுமதிக்கிறதா? ஊர் ஏற்கிறதா? எனும் ஊடாட்டத்திற்கு இடையே சுந்தரத்தின் தாய், தந்தை, மனைவி, மகள் வழியே நிகழும் மனிதம் நெகிழ்விக்கிறது.
இவைகளுக்கு அப்பால், "உறங்குவது போலும் சாக்காடு" எனும் திருக்குறளின் அடிப்படையாய் கதை எழுந்து வந்ததா அல்லது கதையில் திருக்குறள் ஒரு கண்ணியாக இணைக்கப்பட்டதா என்ற கேள்வியும், அது அளிக்கும் தத்துவக் குறியீடுகளும்,
அதன் வழியாக ஒவ்வொருவருக்கும் நிகழும் திறப்பும், படம் முடிந்த பின்னர் நாமாக கதையை சிந்தித்து விரித்துச் சென்று மேலும் கற்பனை செய்து வளர்த்துக்கொள்வதற்கான இடைவெளியும் மிக முக்கியமானவை.
Comments