அழகர்கோயில் - திறக்கும் கதவும், திறக்காத கதைகளும்!
பண்பாட்டின் தலைநகரான மதுரையின் சித்திரைப்பெருவிழா நாயகன் - கள்ளழகர் வீற்றிருக்கும் அழகர்கோயில் தமிழ்நாட்டு பெருந்தெய்வ கோயில்களில் சில தனித்த நடைமுறைகளை உடையது.
108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதும்; பெரியாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் உள்ளிட்டோரால் பாடப்பெற்றதும்; இலக்கியங்களில் திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் உள்ளிட்ட பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதுமான அழகர்கோயில் மதுரை மாநகரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் மலையும், கிராமங்களும் சூழ அமைந்துள்ளது.
இந்த அமைப்பே அடிப்படையில் இந்த கோயிலோடு நகர்ப்புற மக்களை விட, நாட்டுப்புற மக்கள் அதிகம் தங்களை பிணைத்துக்கொள்ள காரணமாயிருக்கிறது.
இந்த இரு விழாவையும் இணைக்கும் மையப்புள்ளி - ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரவாசல் கதவு. அந்தக் கதவு அடைபட்டிருப்பது குறித்து மக்களிடம் புழங்கும் பழமரபுக் கதை ஒன்றுண்டு.
"ஒரு காலத்தில் கேரள நாட்டிலிருந்து மந்திர தந்திரம் தெரிந்த பதினெட்டு லாடர்கள் இக்கோயில் இறைவனின் "களை"யை (இறைவனின் அருள் ஒளி - spiritual essence) திருடிச்செல்ல திட்டமிட்டு வந்துள்ளனர். அவர்கள் ஒரு மந்திர மையை கண்ணில் தடவிக்கொண்டால் பிறர் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். அப்படியான மையை தடவிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். இரவு நேரங்களில் கருவறைக்குள் புகுந்து இறைவனின் களையை அவர்களின் மந்திர வலிமையால் இறக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கும்பத்துக்குள் அடக்கி வந்தனர்.
இறைவன் கோவில் பட்டரின் கனவில் தோன்றி இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பட்டர் மறுநாள் ஊர் நாட்டார்களை அழைத்து தெரிவித்த பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி பட்டர் கருவறைக்குள் பூசைகள் செய்துவிட்டு அதிகமாக ஆவி பறக்கும் சுடு சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு வெளியே வந்து கதவை பூட்டிவிட்டார்.
சூடு சோற்றிலிருந்து கிளம்பிய ஆவி மந்திரக்கார லாடர்களின் கண்களில் இருந்து மையை கரைத்து விட்டது. மை கரைந்ததும் பிறர் கண்ணுக்கு அவர்கள் தெரிந்தனர். அப்போது வெளியே மறைந்திருந்த நாட்டார்கள் கதவை திறந்து பதினெட்டு பேரையும் பிடித்து வெளியே கொண்டு வந்து அனைவரின் தலையையும் வெட்டி கோயில் கோபுர வாசல் அடியில் புதைதுள்ளார்கள். அவர்களோடு துணையாக வந்திருந்த கருப்பசாமி எனும் தெய்வம் மட்டும், 'என்னை விட்டு விடுங்கள் நான் இந்தக் கோபுர வாசலில் இருந்து கோவிலை காவல் காக்கிறேன்' என சொன்னதன் அடிப்படையில் கருப்பசாமியை மக்கள் விட்டுவிட்டனர். அதன்பின்னர் கருப்பசாமி அங்கு அந்த கதவிலேயே இருந்து காவல் காத்து வருகிறார்" - என்பதே அந்த பழமரபுக்கதை.
இந்தக்கதை எழுப்பும் கேள்விகள் :
அந்த 18 திருடர்களும் உண்மையில் எதை திருட வந்தனர்?
கோயில் ராஜகோபுர கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டது ஏன்?
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் அந்தக்கதவு திறக்கப்படுவது ஏன்?
அந்தக்கதவு திறக்கப்படும் போது சக்கரத்தாழ்வார் மட்டும் அதன் வழியாக வந்து செல்வது ஏன்?
பெருந்தெய்வ கோயிலில் சிறுதெய்வம் காவல் காக்கும் நடைமுறை ஏற்கப்பட்டது எப்படி?
இந்தக் கதையும் அது எழுப்பும் பண்பாட்டு ரீதியிலான கேள்விகள் குறித்தும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் நடத்திய கள ஆய்வின் முடிவுகள் அடங்கிய "அழகர்கோயில்" நூல் அளிக்கும் புரிதல்கள் இவை:
18 திருடர்கள் கோவிலுக்குள் நுழைந்த நோக்கம் :
இக்கோயிலில் திருட வந்த 18 பேரும் தமிழ்நாட்டினர் அல்ல. எனவே தான் அவர்கள் "மலையாள நாட்டவர்" என வழக்கு மரபும், "அயோத்தி நாட்டவர்" என கோவில் கதைப்பாடலும் குறிப்பிட்டுள்ளன.
வந்தவர்கள் படையெடுத்து வரவில்லை. அவர்கள் சிறிய எண்ணிக்கையில் தந்திரமாக கோவிலுக்குள் நுழைந்த காரணத்தால் அவர்கள் திருட வந்ததாக கருதப்பட்டுள்ளது.
18 பேரும் தந்திரமாக பிடிக்கப்பட்டனர் எனும் செய்தியை வழக்கில் உள்ள கதை உணர்த்துகிறது. கோயிலுக்கு வெளியே நாட்டார் பெருங்கூட்டமாக இருந்து அவர்களை மடக்கிப் பிடித்திருக்க வேண்டும். எனவே, தப்பிக்கும் முயற்சிக்கோ சண்டையோடுவதற்கோ அவர்களுக்கு வாய்ப்பில்லாது போயிருக்க வேண்டும்.
இறைவனின் "அருட்களை"யை திருட வந்ததாக கதையில் சொல்லப்படும் செய்தியில் உண்மையில்லை.
அழகர்கோயிலில் கொப்பரை கொப்பரையாக தங்கம் இருப்பதாக கேள்விப்பட்டே அவர்கள் வந்துள்ளனர்.
இக்கோயிலில் 2 1/2 அடி உயரத்தில் அபரஞ்சி எனும் அரிய தங்கத்தாலான திருமால் சிலையொன்று "ஏறுதிருவுடையாள்" என்ற பெயரோடு இன்றும் உள்ளது. இந்த சிலையை திருடும் நோக்கிலேயே திருடர்கள் வந்திருக்க வேண்டும்.
கோயில் கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டதன் காரணம் :
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் கூட இக்கோபுரவாசல் அமைக்கப்பட்டது பற்றிய குறிப்பு இல்லை. அடைக்கப்பட்ட கோபுரவாசலில் காணப்படும் கல்வெட்டுக்களில் காலத்தால் பிந்தியது கி.பி.1608-ல் பொறிக்கப்பட்ட சதாசிவராயர் கல்வெட்டாகும். அதன்படி, 1608-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த கதவு அடைக்கப்படவில்லை. தெய்வமும், மக்களும் இந்த வழியே சென்று வந்திருக்கிறார்கள்.
கி.பி.1709-ம் ஆண்டு தரப்பட்ட வெள்ளையத்தார் வீட்டு பட்டய நகல் ஓலையில் "பதினெட்டாம்படி வாசல்" என்ற தொடர் காணப்படுவதால் அதற்கு முன்னரே அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சரியாக கி.பி.1608 முதல் கி.பி.1769 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மதுரையின் அரசியல் தலைமை பலவீனமடைந்து இருந்த விசயரங்க சொக்கநாதன் காலத்தில் அல்லது அவனது மனைவி மீனாட்சியின் ஆட்சிகாலமான கி.பி.1695 - 1742 க்குள் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம்.
கோயிலில் திருட வந்தவர்களை பிடித்து வெட்டி, கோபுரத்தின் வாசல்படிக்கு கீழே புதைத்ததால் அந்த வாசல் தீட்டுப்பட்டது.
எனவே, அவ்வழியே தெய்வம் வருவது முறையில்லை. தெய்வம் வராத வழியில் மக்கள் செல்ல அஞ்சுவர். எனவே, கோயில் தலைவாசல் அடைக்கப்பட்டது.
தெய்வமும், மக்களும் சென்று வர வாசலுக்கு சற்று வடக்கே கோவில் கோட்டை மதில் சுவரை உடைத்து வண்டி வாசல் என்ற பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கதவு திறப்பதன் நோக்கம் :
இங்குள்ள கருப்பண்ணசாமிக்கு உருவம் கிடையாது. கோபுர வாசல் கதவில் தான் அவர் உறைவதாக நம்பிக்கை. எனவே, இந்தக் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவை பூசி, பூ, மாலை ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம்.
கருப்பண்ணசாமிக்கு தனி திருவிழா ஏதுமில்லை. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இக்கதவுகளுக்கு சந்தனம் சார்த்தி வழிபடுகின்றனர்.
ஆடி திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் அழகரின் போர்க் கருவியான சக்கரத்தாழ்வார் தேரோடும் வீதியில் வலம் வந்து எட்டுத்திக்கும் படையல் இடுகிறார். ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டு இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமி கோபுர வாசல் கதவு பிரம்மோற்சவ காலமான ஆடி மாதம் பௌர்ணமி அன்று தேரோட்ட நாளில் திறக்கப்படும் போது அவ்வாசல் வழியாக சக்கரத்தாழ்வார் வந்து செல்கிறார். அழகரின் பல்லக்கு கூட இவ்வழியை பயன்படுத்துவது இல்லை. எனவே, சக்கரத்தாழ்வாருக்காக மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை அவ்வாசல் திறக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் மட்டும் அவ்வழியே வந்து செல்வதன் காரணம் :
இயற்கையல்லாத முறையில் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தோடு கூடிய நம்பிக்கைகளுக்காக அவ்விடத்தில் கருப்பசாமி நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.
திருமாலின் போர்க்கருவியான சக்கரத்தாழ்வார் மட்டும் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தினையும், பகையினையும் வென்று அவ்வழியே செல்ல முடியும் என்பதற்காக அவர் மட்டும் அவ்வழியே செல்கிறார்.
கள்ளழகரின் காவல் தெய்வமாக கருப்பசாமி ஏற்கப்பட்டதன் தொடர்புகள்:
கிருஷ்ணன் - வாசுதேவ கிருஷ்ணன் என அழைக்கப்படுவதும் உண்டு. வாசுதேவனை - காரிக்கண்ணன் (கரிய நிறமுடையவன்) என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் நிறம், கொம்பு, காது, வால் உள்ளிட்ட உறுப்புகளை கொண்டு மாடுகளுக்கு பெயரிட்டு இனங்காண்பது வழக்கம். திருமால் வழிபாட்டினராகிய ஆயர்கள் கருப்பு நிறமுடைய மாட்டை காரி என பெயரிட்டு அழைத்தனர் என சிலப்பதிகாரம் சொல்கிறது.
திருமலை - "திருவடியும் கண்ணும் திருவாயும் செய்ய கரியவன்" என இளங்கோவடிகளின் பாடலும், "கண்ணன் என்னும் கருந்தெய்வம்" என ஆண்டாளின் பாசுரமும் குறிப்பிடுகின்றன.
திருமால் கரிய திருமேனியுடைய அழகனாகவே கருதப்படுகிறார். கருமை அழகு நிறைந்த நிறம் என்றே தமிழர்கள் கருதுகின்றனர்.
எனவே, கோவிலின் "அண்ணன்மார்சாமி கதை" என்கிற கதைப்பாடல் திருமால் கடல் கடைந்த போது கருப்பசாமி பிறந்ததாக கூறி, கருப்பசாமியின் பிறப்பை திருமாலோடு தொடர்புப்படுத்துகிறது.
மதுரை வட்டாரத்தில் காணப்படும் கருப்பசாமி சிலைகள் அனைத்தும் தென்கலை வைணவ திருநாமத்துடன், வைணவ சார்பு பெற்றிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.
திருமால் காத்தலாகிய தொழில் செய்யும் கடவுள் என்ற கருத்தும், கருப்பசாமி காவல் தெய்வமாக கருதப்படுவதும், காரி (வாசுதேவ கிருஷ்ணன்) வழிபாடே கருப்பசாமி வழிபாடாயிற்று என்ற கருத்தினை மேலும் வலுவாக்குகின்றன.
இந்தப் பின்னணியில் தான் திருடர்கள் உடல் புதைக்கப்பட்ட கோபுரவாசல் தீய ஆவிகளை விரட்டவும், மக்களின் அச்சத்தை நீக்கவும் ஒரு சிறுதெய்வத்தை நிலைப்படுத்த வேண்டிய நிலமை அழகர்கோயிலில் ஏற்பட்ட போது, அது பிற இடங்களில் தென்கலை வைணவத் திருநாமத்துடன் காட்சிதரும் கருப்பசாமியாக அமைந்தது.
நடைமுறையில் கோயிலுக்கும், கருப்பசாமி சன்னதிக்கும் உள்ள ஒரே தொடர்பு இதுதான்.
சிறு தெய்வமான கருப்பசாமிக்கும் பிராமணர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவு வியப்பை தருவதாகும். இவ்வுறவை பற்றி சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), "அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய மரபுகள் ஒத்துப்போதலின் (compromise) மிகப்பெரிய சாதனையை நமக்கு காட்டுகின்றன. நம் முன்னோர்கள் தங்கள் தகுதி நிலைக்கு (standard) மக்களை எப்படி ஈர்ப்பது என அறிந்திருந்தனர்" என குறிப்பிட்டிருக்கிறார்.
சொத்துடைமை நிறுவனமான அழகர்கோயில், அதன் பெருந்தெய்வமான அழகரின் படைத்தளபதியாக சிறுதெய்வமான கருப்பசாமியை நிலைநிறுத்தியதன் பின்னால் உள்ள செய்திகள் சமய இயக்கங்கள் தங்களை காத்துக்கொள்ள எவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப்போகின்றன (compromise) என்பதையே உணர்த்துபவையாக உள்ளன.
...
(குறிப்பு : இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' எனும் ஆய்வு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன)
Comments