விஸ்வா வீட்டிற்கு வந்திருந்தான். மொபைல் கேம் கேட்டு நச்சரித்தான் சப்வே சர்ஃப் இன்ஸ்டால் செய்து தந்தேன். விளையாடி அலுத்ததும் கடைக்குப் போலாம் மாமா என்றான். நடந்து போகையில் அவன் வலது கை விரல் மொத்தத்தாலும் இறுக பற்றிக் கொண்டு வந்தான் என் இடது கை சுண்டு விரலை. கிண்டர் ஜாய் வாங்கினான். அவன் தின்றதற்கான அடையாளங்களோடு சென்று விட்டிருந்தான். இப்போது மிக இயல்பாக கிண்டர் ஜாய் குப்பையையும் சப்வே சர்ஃபையும் அழித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அழுத்துவது போலிருந்தது மெதுவாக பார்த்தேன் அப்படியே இருந்தன என் சுண்டு விரலில் அவன் விரல்கள் இன்னமும்.
யாரோ தொலைத்த யாருடைய வார்த்தைகளை யாரோ எடுத்து யாரின் வண்ணமோ தெளித்து யாருக்கோ கொடுத்து யாரோ அளிக்கும் யாரின் வார்த்தைகளில் யார் இருப்போம் யாரை தொலைத்து!?
எப்படியும் பூவை எழுத உதவியது தான் அவருக்கு புரட்சியையும் எழுத உதவியிருக்கும். அப்படித்தான் உதவியிருந்தது இப்போதும் கடைசியாக, 'மர்ம நபர்களால் கொல்லப்பட்டார் என்று மட்டும் என் மரணத்தை எழுதி விடாதீர்கள். ஏனெனில் நான் பேனாவை நம்புகிறவன்.'
தென்றலோ மழைச்சொட்டோ சிற்றெறும்போ காரணமாயிருக்கலாம் அந்த சினுங்கலுக்கு. விரல் பட்டதால் என நினைக்கும் அறியாமையை ஒரு மனிதனுக்கு உணர்த்த முடியாது இன்னொரு மனிதனால்.
கால்வாய் பாலத்தின் கடைசியில் இருந்த பேச்சியம்மாவின் இட்லி கடை கூரை நேற்றின் மழையில் சரிந்து விட்டதாக அழுது கொண்டிருந்தாள். வெகுநாளாய் கூரையின் மேல் ஒட்டியிருந்த புங்க இலை ஒன்று மெதுவாக சரிந்து விழுந்தது ஓடிக் கொண்டிருந்த மழை நீரில்.
எப்போதோ எழுதிய கவிதையின் மூன்றாவது வரியை படிக்கையில் நானாக சிரித்தேன். யாரோ என்னை பார்ப்பது போலிருந்தது திரும்பிப் பார்த்தேன் ஜன்னலும் வாசலும் கூட சாத்தியிருந்தன. மேசையின் மேல் விரித்து வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டினேன் பார்த்தேன். இப்போது பார்க்கவில்லை யாரும்.