Posts

Showing posts from December, 2017

இன்னொரு 365

புள்ளியில் எது முதலாவது எது இறுதியானது எனும் தேடல் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பெரும் வட்டத்தின் உள்ளேயும் வெளியேயும். தேடலில் விளையும் எல்லாவற்றையும் காலத்தராசு எப்படியும் சமன் செய்து விடும் இருமைகளால். அன்றாடத்தின் நெரிசல்களில் எந்த இடைவெளிக்குள்ளோ ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை நம்மால் அணுக முடிந்து விட்டதெனில் இதயத்தினுள் ஆனந்த இசையொன்று இழையோடும். அந்த இசை தன் வாழ்வை இன்னும் இன்னும் நீட்டிக் கொண்டு விட இன்னொரு நரம்பினை அதுவே தேடிக் கொள்ளும். அன்பின் மகரந்தச் சேர்க்கைக்காக நம்மை துாக்கிக் கொண்டுப் பறந்தலையும் பட்டாம்பூச்சியின் கால்களை ஒரு போதும் நழுவ விட வேண்டாம். பயணத்தை காற்றின் தண்டவாளங்கள் தீர்மானித்துக் கொள்ளும். முடிவிலிக்குள் முடிந்து போகும் இந்த மிகச்சிறிய முடிவுக்குத் தான் எத்தனை எத்தனை ஆதாரங்கள். ஒருவேளை ஆதாரங்கள் கூட அர்த்தமற்றுப் போகலாம். இந்த 2018 ம் கூட இன்னொரு 365 ய் ஆகலாம். ஆனால் நாம்?! – 1.1.2018 தினமலர் இதழில் வெளியானது.

உங்களை காணவில்லை

தலை கவிழ்ந்திருக்கிறான் கையில் ஒன்றோ அல்லது இரண்டுமோ மார்புக்கருகில் தாங்கியபடியே இருக்கின்றன அவனை விட கனமான செவ்வக ஒளியொன்றை. அது அவனை கனமிழக்கச் செய்து இழுத்துப் போய்க் கொண்டிருந்தது சரசரவென. இரண்டுக்குமிடையில் நசுங்கி விம்மிக் கொண்டிருந்த கொஞ்சமும் கனமற்ற அவன் வாழ்விற்காக எந்த எச்சரிக்கை குரலாவது வருமென காத்திருக்கும் கணத்திற்குள் சத்தமில்லாது காணாமல் போயிருந்தார்கள் எல்லோரும் ஒரு 'பீப்' ஒலியோடு.

க்ளோரின் வைகை

தென்மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் தூய புல்லிடுக்குகளை சந்திக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு எப்படியாவது சொல்லியனுப்ப வேண்டும், 'குரல் தாழ்த்தி கொஞ்சமும் சொல்லிவிட வேண்டாம் வைகையில் க்ளோரின் வாசமடிப்பதைக் கூட' என்று.

வயிற்றுக்குள் மரம்

'கொட்டையை முழுங்லாமா' விஸ்வா கேட்டான் 'முழுங்க கூடாது, முழுங்குனா வயித்துல மரம் மொளைக்கும்' தர்பூசணி வண்டிக்காரர் சொன்னார் விஸ்வா கீழே துப்பி விட்டான். ஏதோ துளிர்த்து அசைவது போலிருந்தது என் வயிற்றுக்குள்.

நிசப்தத்தின் சப்தம்

Image
பேரிரைச்சல் பரவிப் படிந்த பாலம் நிசப்தமித்துக் கிடந்தது இரவின் மத்திமத்தில். அதன் விரல் கம்பிகளின் மேலிருந்து இறங்கி வந்த மின் மஞ்சளொளியின் சப்தத்தில் விழித்துக் கொண்ட நிசப்தம் புலர்ந்தது பேரிரைச்சலாக.

திருடனின் பரிசு

ஓவியன் வீட்டிற்குள் நுழைந்து விட்ட திருடன் ஆத்திரத்தில் வண்ணத்தை எல்லாம் எட்டி உதைத்துக் கொட்டி கோபம் கழித்துச் சென்றிருந்தான் அவனுக்கே தெரியாமல் ஒரு ஓவியத்தையும் விட்டு விட்டு.

சிரிப்பும் சோகமும் சந்தித்தல்

எந்த சோகத்தையோ எதன் சிரிப்பாலோ மறைக்கும் முயற்சியின் முடிவில் எதுவும் மறைக்கவில்லை எதுவும் மறையவில்லை அப்படியே தான் இருந்தன எல்லாமும், முதல்முறையாக இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கும் வரை.

இன்னொரு முத்தம்

உனக்கு இன்னொரு முத்தம் தர என்னால் முடியுமோ முடியாதோ ஆனால், நீ பெறவிருக்கும் முத்தத்தில் ஏதேனும் ஒன்று உனக்குத் தரலாம் என்னை.

கண்ணீர் சிறகுகள்

Image
காய்ந்து கருகிய ஊரணிக்கரை ஒற்றைப் பனைமரத்தை முதல் முறையாக முழுமையும் தழுவிக் கொண்டே வந்து சரிந்தது அதன் கடைசித் தோகை. நிலத்திடமிருந்து எதையோ பறிப்பதாக நினைத்துக்கொண்டே தோகையை எடுத்த சிகப்பி மெதுவாக தூக்கி நிறுத்தினாள் தலைக்கு மேல். 'உன்னை மறைத்து விட்டேன் பார்' என்பது போல சூரியனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே குதித்தாள். ஆயத்தமானது ஆகாயம் ஆடுகிறது ஒரு மயில்  என நினைத்து. படம் - ஹென்க் ஒச்சப்பன்

பசி விற்பனைக்கு

எப்போதோ விற்கப்பட்டு விட்ட பசிக்காக இப்போது தயாரிக்கப் படுகிறது உணவு.

நெளியும் துளி

வீடு முழுவதும் கிடந்த மழைச் சுவடுகளை அழித்த சகுந்தலா பாட்டி, ஜன்னலுக்குக் கீழ் தேங்கியிருந்த சாரலை மட்டும் மிச்சம் வைத்திருந்தாள் தோணும் போதெல்லாம் போய் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் மெதுவாக போய்ப் பார்த்தேன் அதற்குள் இப்போது என் முகம் அசைந்து கொண்டிருந்தது. சகுந்தலா பாட்டி இறந்து மூன்று வருடத்திற்குப் பின்பு வந்தது அதே மழை அதே ஜன்னலருகில் அதே சாரல் குளமாய் ஆனால் அதே நான் அதில் தெரியவில்லை மங்கலாக நெளிந்து கொண்டிருந்தாள் சகுந்தலா பாட்டி.