Posts

Showing posts from 2018

நடந்து செல்லும் நீரூற்று

Image
தன் முதலிரவில் சம்பிரதாயமாக மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவன் அவன்; தனக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் வாங்கி இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு கொடுத்து விட்டவன்; தன் குழந்தையின் அழுகையை சகித்துக் கொள்ள முடியாமல் திணறியவன்; அந்தக் குழந்தை இறந்த போது அழுவதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன்; அவன் வைத்திருக்கும் ஜவுளிக்கடைக்கு வரும் பெண்கள் யாராவது தற்செயலாக அவனை உரசினாலோ, இல்லை அவன் முன்பாகவே ஜாக்கெட் ஊக்குகளை கழற்றி மார்பு தெரிய குழந்தைக்கு பால் கொடுத்தாலா கூட எந்தச் சலனமும் இல்லாதிருந்தவன்; தன் வாழ்வு முழுவதையும் வெறுமைக்கு தின்னக் கொடுத்து விட்டவன். தனக்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும், அது முழுக்க தீர்க்க முடியாத வெறுமையும் துக்கமும் நிரம்பி இருப்பதாகவும் நினைத்துக் கொண்டிந்தவன். அன்று – ஒரு நாள் முழுவதும் ஆட்டு மந்தையின் நாற்றத்திலும், இரவு முழுவதும் அதன் வெறுமையையும் அனுபவித்து விட்டு எழுந்து நடக்கையில் அவன் கால் இடறி தரையிலிருந்து ஒரு நீரூற்று வெளிப்படுகிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தையும், ஒருவித பரவசத்தையும் கொடுக்கிறது. கைகளால் நீரை வாங்கி ...

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...

Image
‘நான் ஒரு சோழன்’ – இது உடையார் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம். உண்மையில் அது புதியது அல்ல. மிகமிகப் பழையது. ‘பொன்னியின் செல்வனையோ, உடையாரையோ படிக்கும் ஒவ்வொருவருக்கும் சோழ தேசத்தோடு ஜென்மாந்திர பந்தம் இருக்கும்’ – இது உடையார் முன்னுரையில் ஒரு வாசகர் சொன்னது. இவை மிகச் சத்தியமான வார்த்தைகள். ஒரு சத்தியமான வாழ்க்கை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சத்தியமான வார்த்தைகளையும் தானாகவே தேடிக்கொள்ளும் என்பது ‘உடையார்’ வரையில் மிகவும் பொருந்தி விட்டது. ‘என்னுடைய 237 நாவல்களும் உடையார் நாவலுக்கான பயிற்சி’ – இது எழுத்துச்சித்தர் பாலகுமாரன் சொன்னது. இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, ‘என் 14 ஆண்டு கால வாசிப்பும் உடையாருக்கான பயிற்சி’ என்பதும். உடையார் – சோழதேசத்தின் வாழ்வையும், ராஜராஜ சோழனின் வாழ்வையும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் வாழ்வையும், மிக நெருக்கமாக அனுபவித்து ஒரு சோழனாகவே வாழ்வதற்கான வாய்ப்பு. வாய்ப்பு என்று சொல்வது தவறு; அது பாக்கியம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்... பாண்டிய தேசம் முரட்டு வீரத்தாலும், சேர தேசம் அந்தணர்களின் தந்திரத்தாலும் தட்டுத் த...

நனையாத காகித கப்பல்

Image
ஆறு ஓடும் சத்தத்தை கேட்க 'ஆப்' வந்து விட்டது. வசதி என்றான பின் எதுவானாலென்ன என்று கேட்க ஆரம்பித்தாயிற்று. கேட்க கேட்க காதுக்குள் ஒரு கேட்காத ஊற்று பெருக்கெடுக்கிறது. உச்சந்தலை நோக்கி அது சீறித் தவழ்கிறது. ஏதோ விந்தை தான், மேல்நோக்கிப் பாய்கிறது இந்த ஆறு மட்டும். ஓடாத ஆற்றின் பின்னால் ஓடத் தொடங்கினேன். ஓடுகையில் காலுக்கடியில் சட்டென ஒரு திரை கிழிந்தால் என்னாகும்? தெரியாது. ஆனால் தெரியும், கிழிவதை தடுக்க முடியாதென்று மட்டும். கிழிந்தது. உச்சிப்பாறை ஒன்றில் இருந்து விழுந்தேன். நிசப்தமான ஆற்றில் இப்போது சின்னதாய் ஒரு சப்தம். தவறி விழுந்த மரக்கட்டையென எனை எங்கெங்கோ இழுத்துப் போய்க் கொண்டிருந்தது ஆறு. அநேகமாக ஆறு இப்போது அந்தியை தொட்டிருந்தது. ஒளி எனைச் சுட்டிருந்தது. அசைந்தசைந்து கரை ஒதுங்கினேன். நினைவைப் பிடித்து மெல்ல எழுந்தேன். ஆற்றின் வெளியே கால் வைத்தேன். வீட்டு மார்பில் தரை தட்டியது. அதிர்ந்து திறந்தது இமை. உடல் மொத்தத்திலும் துளி ஈரமில்லை. இதமாக சுட்டுக் கொண்டிருந்தது மனம் மட்டும்.

இதற்கு மேல்

இதற்கு மேல் பார்க்க முடியாது அவன் திரும்பிக் கொண்டான். இதற்கு மேல் திரும்பி இருக்க முடியாது அவள் பார்த்து விடுவாள்.

The Shape of water - இரு ஜீவ இசை

Image
ஒரு ஊமை இளம்பெண் (எலிசா), மனித உருவம் கொண்ட நிலநீர் வாழும் (Humanoid Amphibion) உயிரினத்தை பார்த்து, 'You'll never know... just how much... i love you...' என்று சொன்னால் எப்படி இருக்கும்? நேரில் பார்த்தால் மிரண்டு ஓடும் ஒரு உயிரினத்தோடு நெருங்க நினைக்கிறாள் எலிசா. நெருங்குகிறாள். அதுவும், மறுக்கவில்லை. மறக்கவுமில்லை. இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல வார்த்தைகளற்ற ஒரு பெருவெளி படர்கிறது. அதற்கு உணவு கொடுக்கிறாள். உணர்வு கொடுக்கிறாள். உள்ளம் கொடுக்கிறாள். உடல் கொடுக்கிறாள். உயிரையும் கொடுக்கிறாள். அதை, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டு குளியல் தொட்டியில் வைத்து காதல் செய்கையிலும்... தயங்கித் தயங்கி முதல் முறையாக தன்னையே அளிக்கயிலும்... அறை முழுதும் தண்ணீர் நிரப்பி ஒரு காதல் கடல் செய்து, அதனோடு கலந்து கரைகையிலும்... உச்சக்கட்ட பைத்தியக்காரத் தனத்திற்கு புது அத்தியாயம் படைக்கிறாள் எலிசா. எப்படிப் பார்த்தாலும் இது பைத்தியக்காரத் தனம் தான். பைத்தியக்காரத் தனத்தை எப்படிச் சொன்னாலும் அது காதல் தான்.

ஒரு காதல் அக்கப்'போர்'

Image
யாருக்கும் சொல்லாதே நான் யாரென்றும் சொல்லாதே நீ தான் நான் எனில் நான் தான் நீ எனில் முத்தங்களுக்கு முன்பாக முந்நுாறு முறையாவது சொல்லி விடு நான் தொலைந்து வெகு நாளான செய்தியை. வீணாகத் திரிந்த நாளெல்லாம் தானாக விளங்கும் பொழுதினில் நம் மேல் நாம் கிடக்கும் நாடகம் அரங்கேற்றலாம். ஓருடல் மேல் ஓருடல் பரப்பி எல்லையற்று விரிந்து கிடக்கும் உயிருக்குள் ஒரு அனல் நதி பாய்ச்சலாம். பேசாத கதைகள் பேச இப்போது நேரமில்லை நரைத்த மயிர் கோதி குசுகுசுக்க குறை இல்லா நிறை தேடலாம். நடு மார்பில் வழிந்தோடும் வியர்வைத் துளியொன்றை விலையில்லா விதையென விழுங்கி நம் வாசனைச் செடி வளர்க்கலாம். இறுக்கிக் கோர்த்த கைகளிலிருந்து இரண்டாவது சூரியன் படைத்து நம் உடல் உலர்த்தலாம். காது கடிக்கும் பற்களுக்கு இன்னொருமுறை கற்கண்டாகலாம். வெற்று முதுகில் எழுதித் தள்ளிய அர்த்தமில்லாச் சொற்களை இதயத்தில் பிரசுரித்து நம் காதலுக்கே தின்னக் கொடுக்கலாம். உஷ்ஷ்ஷ்... ஒருநொடி மூச்சை நிறுத்து உனக்குள்ளிருக்கும் என்னை என்னிடம் தந்துவிட்டு மீண்டும் தொடங்கு. 

நினைவின் நினைவு

நினைத்தது போலவே இருப்பதில்லை வாழ்வு எப்படி எப்படியோ ஆகிக்கொண்டே இருக்கிறது. அப்படியே ஆகட்டும் என்று இப்படியே இருக்கலாம் தான். என்ன செய்வது இன்றைய இப்படியும் நேற்றிற்கு எப்படியோ அல்லவா. ஆதலால் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் ‘நினைத்தது போலவே இருப்பதில்லை நினைப்பெதுவும்’.

உதட்டை என்ன செய்வாய்

அது சரி, உள்ளத்தை ஏதேனும் செய்து விடுவாய் தான். உதட்டை?! அதில் தோய்ந்து ஞிமிறென இன்புற்று இழைந்த என்னுதட்டின்ச் சூட்டை, குளிரை, இதத்தை? முடிந்தால் அதிலொன்றை தந்து விட்டு எங்கேனும் தொலைந்து போ.

தீரா தீர்தல்

எங்கே நீ விட்டுச் சென்றாயோ அங்கேயே அப்படியே கிடக்கிறது நம் வாழ்வு. என் பார்வையின் விளிம்பில் கிடந்து தத்தளிக்கின்றது. அதற்கெந்த பிரத்யேக சேதமும் ஏற்பட்டுவிட வேண்டாமென்கிற கவனம் ஒருபுறம். அதை வாரி அள்ளி மார்போடு சாய்த்து அதன் படபடப்பை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்கிற அக்கறை மறுபுறம். அகம்புறமாய் இரு நிலைகளும் என் நிலையை நான் தேடும் நிலைக்குள்ளாக்கும் பலமுடையவை. அதுதான் பயம். பேய், பூச்சி என்றால் ஏதேனும் சரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இது சகலமும் சரணமடைதல் அல்லவா. ஆதலால் இப்போது செய்வதறியா நிலை. எந்த நிலையிலும் இந்த நிலை வேண்டாமென்று தான் நினைத்தேன். வேண்டும் வேண்டாமென்பது பற்றி நினைவிற்கென்ன தெரியும். ஆக, அந்த வாழ்வின் மீது உனக்கென்ன கரிசனம் இருக்கும் இருக்காதென்பதை பற்றி எனக்குத் தேவையில்லை. தேவையெல்லாம் தீராக்கணக்கின் தீர்வு மட்டுமே. தீர்வதற்கு இது வெறும் கணக்கல்ல வாழ்வு. அது தீராதது. தீரா தீர்தல் தான் நம் தீர்வு.

எப்படி பிரியலாம்

எப்படித் தொடங்கி எப்படி முடிப்பது? எப்படித் தொடங்கினாலும் எப்படி முடித்தாலும் எழப்போகிற கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை எப்படியும். ஆதலால் ஒரு எழாத கேள்வி, நமக்குள் கேட்டாலும் தர முடியாத தந்தாலும் ஏற்க முடியாத ஏற்றாலும் அனுபவிக்க முடியாத அனுபவித்தாலும் நினைக்க முடியாத நினைத்தாலும் மறக்க முடியாத ஏதோ ஒன்று இனி இருக்கலாம் அல்லவா?! இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருக்கலாம் தான், என்ன செய்வது இருந்து தொலைத்து விட்டோம். இனி நாம் நினைத்தாலும் அது முடியாது. உண்மை என்னவென்றால் நம்மால் நினைக்கவே முடியாது ஏனெனில் நினைக்க நிகழ்ந்ததெல்லாம் நாம் நினைக்காதது தான். ஆதலால் இப்போது கடைசியாக ஒன்றே ஒன்றை நினைக்கிறேன், நாம் எப்படிப் பிரியலாமென்று. இதற்குக் கூட பதில் தெரியாது உனக்கு தெரிந்தாலும் நீ சொல்லப் போவதில்லை. நானே சொல்கிறேன் இன்னொரு முறை பார்ப்போம் இன்னொரு முறை சிரிப்போம் இன்னொரு முறை அழுவோம் இன்னொரு முறை கைகுலுக்குவோம் இன்னொரு முறை திட்டிக் கொள்வோம் இன்னொரு முறை கட்டிக்கொள்வோம் இன்னொரு முறை முத்தமிடுவோம் இன்னொரு ம...

கானலில் காணாமல் போகையில்

பகலின் மத்திமத்தில் கடந்து சென்று கொண்டிருந்தேன் கானல்களை ஒவ்வொன்றாக. எல்லையற்றுக் கிடந்த அதன் விளிம்பினை எட்டிவிடும் முனைப்பில் உணர்வற்று கரைந்து கொண்டிருந்தேன் கானலுக்குள். இப்போது பகல் கரைந்து விட்டிருந்தது காணாமல் போயிருந்த என்னை கடந்து போய்க் கொண்டிருந்தது கானல் ஒன்று.

ஹேப் இ பொங்கல்

ஹேப்பியாய் தொடங்கி ஹேப்பியாய் முடித்து ஹேப்பியாகவே இருக்கலாம் தான் ‘இ’ க்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் போன நூற்றாண்டுகளின் நுரைகள் நமக்கு புலப்படாத வரை. இந்த நூற்றாண்டு தை கை குலுக்கல்களில் பரவும் சூடு காலம் காலமாய் மண் சட்டியின் அடியில் கிடந்து கருகிக் கரைந்த காடுகளினுடையது. சூரியனுக்கு சுவர் எழுப்பி உள்ளே சூரியன் வரைந்து விளையாடும் குழந்தையின் உள்ளங்கையில் உறையும் குளிர் சூரியனையும் சுடலாம். இனித்து இனித்து கசந்து போன அடிக் கரும்பை சர்க்கரை தொட்டு  தின்னப் பழகி விட்டோம். இனி இனிமைகளை சுண்டக் காய்ச்சித் தரக் கூட விறகு அடுப்பிற்கோ கேஸ் அடுப்பிற்கோ  அருகதையில்லாது போயிற்று. பூதங்கள் ஐந்தையும் பூஜித்தலென்பது வாழ்வியல் முறை அல்ல  அது  ஒரு உயிரியல் தொடர்பு. இப்போது ‘தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்’ சென்று விட்டோமென்பதை எப்பால் சொன்னாலும் இன்றைய இரைச்சல்கள்  அதை துண்டித்து விடும்  தகுதியை பெற்று விட்டன. ஒருக்கால் ஒரு காலை ஐ நிலத்தில் வைக்க முடி...

காலத்தின் தாடி

காலத்தின் முகத்தில் கொச கொசவென வளர்ந்திருந்த தாடியை சவரம் செய்ய கத்தியை தேடி கண்டேன் இறுதியாய் என் முதுகின் வலது விலாவில்.                      

தேடித் தொலைவோம்

ஒரேயொரு முறை தொலைந்த உன்னை எத்தனையோ முறை தேடியாயிற்று இப்போது ஒரு முறை என்னை தேடித் தா இன்னொரு முறை உன்னை தேடுவதற்கு.