பக்கத்து வீட்டு குழந்தை வந்து போயிருந்ததாம். என் அலமாரி கலைந்து கிடந்தது. பரவிக் கிடந்தன என் ஞாபகத்தின் ஆதாரங்கள். எனக்குள் இப்போது சலனத்தின் சம்பாஷனைகள். பெருஞ்சத்தத்தில் நிகழ்ந்தது ஒரு தியானம். புத்தன் இப்படியும் வரலாம்.
உன்னிடம் பேசுவது முதல் தொடுவது வரை நட்பு என்பது கடவுச்சொல். அதற்குமேல் அனுபவித்தலுக்கு காதல். எல்லாமும் கடந்தும் தொடர்வதற்கு ஒரு வேளை கல்யாணம். இல்லையேல் மீண்டும் நட்பு.
உடைந்து கிடக்கும் வளையல் சில்லுகளுக்கு உரிய கைகள் இப்போது புதிய வளையல் ஒன்றை அணிந்து கொண்டிருக்கலாம் இல்லையேல் மீதமிருக்கும் வளையல்களையும் உடைத்துக் கொண்டிருக்கலாம்.
இறைச்சி கடைக்குள் நுழைந்ததும் ரத்த நாற்றத்தின் குமட்டல். கழுத்துகளை பூப்பறிப்பது போல் பறித்துக் கொண்டிருந்தன அந்த பூப்படையாத விரல்கள். இந்த சகஜம் சந்தேகக் கறையானது அவன் முண்டா பனியனின் இருந்தவை போல். எல்லாம் வாங்கி முடித்து வெளியே வந்த போது அந்த சந்தேகக் கறையை கரைத்துப் போயிருந்தது ரத்த மணம்.
ஏன் இப்படி எனக்கு மட்டுமே தெரிந்த உன் ரகசிய வாசல் கதவினை சட்டென சாத்துகிறாய். வருவது நான் எனத் தெரியாமலா இல்லை வரக்கூடாது நான் எனத் தெரிந்தா. அந்தக் கதவின் தொலைந்து போன சாவியை நீயும் நானும் ஒரே இரவிலெல்லாம் கண்டு பிடித்திடவில்லை. தேடும் போது தெரியவும் இல்லை. நீ தொலைத்தது என்பதைத்தவிர வேறு நினைவும் இல்லை. ம்ம்ம் என்ன செய்ய செய்வதறியா செயலோ நான்.
யாரோக்கள் தான். எதுவோ இணைக்கிறது எப்படியோ இணைகிறோம் யார்களாகவோ பாவித்துக் கொள்கிறோம். யாவிற்கும் தேடிக் கொள்கிறோம் நியாயங்கள் மட்டும். அதுவே நம்மை நாமாகவும் வைத்துக் கொள்கிறது எதற்காகவோ. எப்படியோ மறுபடியும் நாமாக நாமிருப்பது போலில்லை அவர்களாகவே அவர்கள். மீண்டும் யாரோவாகி விடுகிறார்கள். இந்த சக்கைகளில் மிஞ்சும் சாற்றை வரலாறு சொல்லுமாம் சொல்லட்டும்.. அதற்கு அது மட்டுமே தெரியும்.
புத்தரின் முகத்தில் இப்போது சில மாற்றங்கள். விரிந்திருந்த உதடுகள் சற்று சுருங்கியிருக்கின்றன. நெற்றியிலும் இதே நிலை தான். சரி. உதட்டை விரித்து விடலாம் எனும் எண்ணத்தில் தொட்டால் மூக்கில் சூடான சுவாசங்கள். மிரண்டு போய் சற்று விலகி நின்று பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படியே தான் இருக்கிறார் புத்தர். எனக்குத் தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதா இல்லை இலங்கை பர்மாக்களில் இருப்பவர்களுக்கும் தோன்றுமா. இல்லை அங்கு அரங்கேறுபவற்றின் பாதிப்பில் இப்படியெல்லாம் பாவிக்கிறாரா. பாதித்தவருக்குத் தானே தெரியும்.
வினைத்தொகையில் கேள்விகள் நிகழ்கின்றன நமக்குள் நிகழ்வனவால். எப்படியோ ஆற்றி விடுகின்றன அவைகளை உடலின் எந்த மையத்திலோ புறப்படும் ஆழிகள். சரி இப்போது பிரச்சனை கேள்விகளா ஆழிகளா இரண்டுமில்லை இரண்டும் அழிக்காமலிருக்கும் தடங்களே. தடத்திற்கென்ன அவ்வளவு பலமா யாருக்குத் தெரியும் நாமா உருவாக்கினோம்
அந்தக் கருந்திரை ஏராளங்காட்டியிருக்கும் அதுவரை வித்தையாயுணர்ந்தேன். அப்பணி உம் பார்வை வழி படர்ந்திட, பரவசங்கொண்டேன்... என் ஞானப்பிதாவாயும்மை பிள்ளையார் பிடித்துக் கொண்டேன் நாம் நேருக்குநேர் பார்த்தேயிருப்பதாயுணர்ந்தேன், யுணர்கிறேனெப்போதும் அந்தவொளிக்குப் பின்னாலிருப்பதும் விழியென்பதால்!!!