Posts

Showing posts from 2017

இன்னொரு 365

புள்ளியில் எது முதலாவது எது இறுதியானது எனும் தேடல் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பெரும் வட்டத்தின் உள்ளேயும் வெளியேயும். தேடலில் விளையும் எல்லாவற்றையும் காலத்தராசு எப்படியும் சமன் செய்து விடும் இருமைகளால். அன்றாடத்தின் நெரிசல்களில் எந்த இடைவெளிக்குள்ளோ ஒளிந்து கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை நம்மால் அணுக முடிந்து விட்டதெனில் இதயத்தினுள் ஆனந்த இசையொன்று இழையோடும். அந்த இசை தன் வாழ்வை இன்னும் இன்னும் நீட்டிக் கொண்டு விட இன்னொரு நரம்பினை அதுவே தேடிக் கொள்ளும். அன்பின் மகரந்தச் சேர்க்கைக்காக நம்மை துாக்கிக் கொண்டுப் பறந்தலையும் பட்டாம்பூச்சியின் கால்களை ஒரு போதும் நழுவ விட வேண்டாம். பயணத்தை காற்றின் தண்டவாளங்கள் தீர்மானித்துக் கொள்ளும். முடிவிலிக்குள் முடிந்து போகும் இந்த மிகச்சிறிய முடிவுக்குத் தான் எத்தனை எத்தனை ஆதாரங்கள். ஒருவேளை ஆதாரங்கள் கூட அர்த்தமற்றுப் போகலாம். இந்த 2018 ம் கூட இன்னொரு 365 ய் ஆகலாம். ஆனால் நாம்?! – 1.1.2018 தினமலர் இதழில் வெளியானது.

உங்களை காணவில்லை

தலை கவிழ்ந்திருக்கிறான் கையில் ஒன்றோ அல்லது இரண்டுமோ மார்புக்கருகில் தாங்கியபடியே இருக்கின்றன அவனை விட கனமான செவ்வக ஒளியொன்றை. அது அவனை கனமிழக்கச் செய்து இழுத்துப் போய்க் கொண்டிருந்தது சரசரவென. இரண்டுக்குமிடையில் நசுங்கி விம்மிக் கொண்டிருந்த கொஞ்சமும் கனமற்ற அவன் வாழ்விற்காக எந்த எச்சரிக்கை குரலாவது வருமென காத்திருக்கும் கணத்திற்குள் சத்தமில்லாது காணாமல் போயிருந்தார்கள் எல்லோரும் ஒரு 'பீப்' ஒலியோடு.

க்ளோரின் வைகை

தென்மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் தூய புல்லிடுக்குகளை சந்திக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு எப்படியாவது சொல்லியனுப்ப வேண்டும், 'குரல் தாழ்த்தி கொஞ்சமும் சொல்லிவிட வேண்டாம் வைகையில் க்ளோரின் வாசமடிப்பதைக் கூட' என்று.

வயிற்றுக்குள் மரம்

'கொட்டையை முழுங்லாமா' விஸ்வா கேட்டான் 'முழுங்க கூடாது, முழுங்குனா வயித்துல மரம் மொளைக்கும்' தர்பூசணி வண்டிக்காரர் சொன்னார் விஸ்வா கீழே துப்பி விட்டான். ஏதோ துளிர்த்து அசைவது போலிருந்தது என் வயிற்றுக்குள்.

நிசப்தத்தின் சப்தம்

Image
பேரிரைச்சல் பரவிப் படிந்த பாலம் நிசப்தமித்துக் கிடந்தது இரவின் மத்திமத்தில். அதன் விரல் கம்பிகளின் மேலிருந்து இறங்கி வந்த மின் மஞ்சளொளியின் சப்தத்தில் விழித்துக் கொண்ட நிசப்தம் புலர்ந்தது பேரிரைச்சலாக.

திருடனின் பரிசு

ஓவியன் வீட்டிற்குள் நுழைந்து விட்ட திருடன் ஆத்திரத்தில் வண்ணத்தை எல்லாம் எட்டி உதைத்துக் கொட்டி கோபம் கழித்துச் சென்றிருந்தான் அவனுக்கே தெரியாமல் ஒரு ஓவியத்தையும் விட்டு விட்டு.

சிரிப்பும் சோகமும் சந்தித்தல்

எந்த சோகத்தையோ எதன் சிரிப்பாலோ மறைக்கும் முயற்சியின் முடிவில் எதுவும் மறைக்கவில்லை எதுவும் மறையவில்லை அப்படியே தான் இருந்தன எல்லாமும், முதல்முறையாக இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கும் வரை.

இன்னொரு முத்தம்

உனக்கு இன்னொரு முத்தம் தர என்னால் முடியுமோ முடியாதோ ஆனால், நீ பெறவிருக்கும் முத்தத்தில் ஏதேனும் ஒன்று உனக்குத் தரலாம் என்னை.

கண்ணீர் சிறகுகள்

Image
காய்ந்து கருகிய ஊரணிக்கரை ஒற்றைப் பனைமரத்தை முதல் முறையாக முழுமையும் தழுவிக் கொண்டே வந்து சரிந்தது அதன் கடைசித் தோகை. நிலத்திடமிருந்து எதையோ பறிப்பதாக நினைத்துக்கொண்டே தோகையை எடுத்த சிகப்பி மெதுவாக தூக்கி நிறுத்தினாள் தலைக்கு மேல். 'உன்னை மறைத்து விட்டேன் பார்' என்பது போல சூரியனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே குதித்தாள். ஆயத்தமானது ஆகாயம் ஆடுகிறது ஒரு மயில்  என நினைத்து. படம் - ஹென்க் ஒச்சப்பன்

பசி விற்பனைக்கு

எப்போதோ விற்கப்பட்டு விட்ட பசிக்காக இப்போது தயாரிக்கப் படுகிறது உணவு.

நெளியும் துளி

வீடு முழுவதும் கிடந்த மழைச் சுவடுகளை அழித்த சகுந்தலா பாட்டி, ஜன்னலுக்குக் கீழ் தேங்கியிருந்த சாரலை மட்டும் மிச்சம் வைத்திருந்தாள் தோணும் போதெல்லாம் போய் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் மெதுவாக போய்ப் பார்த்தேன் அதற்குள் இப்போது என் முகம் அசைந்து கொண்டிருந்தது. சகுந்தலா பாட்டி இறந்து மூன்று வருடத்திற்குப் பின்பு வந்தது அதே மழை அதே ஜன்னலருகில் அதே சாரல் குளமாய் ஆனால் அதே நான் அதில் தெரியவில்லை மங்கலாக நெளிந்து கொண்டிருந்தாள் சகுந்தலா பாட்டி.

இன்று நிர்வாணமாய்

நாளையின் ஆடையை அணிந்து கொண்டு விட நேற்றிலிருந்து போராடி அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறது இன்று நிர்வாணமாய்.

சில நேரத்தில் சில நேரம்

சரியாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தது முள் ஏனோ வேகமாகவோ மெதுவாகவோ நகர்ந்து கொண்டிருக்கிறது நேரம்.

நினைவின் நீட்சி

விஸ்வா வீட்டிற்கு வந்திருந்தான். மொபைல் கேம் கேட்டு நச்சரித்தான் சப்வே சர்ஃப் இன்ஸ்டால் செய்து தந்தேன். விளையாடி அலுத்ததும் கடைக்குப் போலாம் மாமா என்றான். நடந்து போகையில் அவன் வலது கை விரல் மொத்தத்தாலும் இறுக பற்றிக் கொண்டு வந்தான் என் இடது கை சுண்டு விரலை. கிண்டர் ஜாய் வாங்கினான். அவன் தின்றதற்கான அடையாளங்களோடு சென்று விட்டிருந்தான். இப்போது மிக இயல்பாக கிண்டர் ஜாய் குப்பையையும் சப்வே சர்ஃபையும் அழித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அழுத்துவது போலிருந்தது மெதுவாக பார்த்தேன் அப்படியே இருந்தன என் சுண்டு விரலில் அவன் விரல்கள் இன்னமும்.

யாரின் யார்

யாரோ தொலைத்த யாருடைய வார்த்தைகளை யாரோ எடுத்து யாரின் வண்ணமோ தெளித்து யாருக்கோ கொடுத்து யாரோ அளிக்கும் யாரின் வார்த்தைகளில் யார் இருப்போம் யாரை தொலைத்து!?

பேனாவை நம்புகிறவன்

எப்படியும் பூவை எழுத உதவியது தான் அவருக்கு புரட்சியையும் எழுத உதவியிருக்கும். அப்படித்தான் உதவியிருந்தது இப்போதும் கடைசியாக, 'மர்ம நபர்களால் கொல்லப்பட்டார் என்று மட்டும் என் மரணத்தை எழுதி விடாதீர்கள். ஏனெனில் நான் பேனாவை நம்புகிறவன்.'

எல்லாவற்றையும்

'பழகிக்கொள்' 'எதை' 'எல்லாவற்றையும் தான்' 'ஏன்' 'எல்லாம் மாறுதலுக்குரியது அதனால்' 'எதுவுமே மாறாமல் இருக்காதா' 'ஒருவேளை இருந்தால், இப்போது இருக்காது' 'நீ கூடவா' '...' 'என்ன பதில் பேசாமல் போகிறாய்' '...' இப்போது இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் 'பழகிக்கொள்' 'எதை' 'எல்லாவற்றையும்'. 

இன்னொரு மனிதனால் முடியாது

தென்றலோ மழைச்சொட்டோ சிற்றெறும்போ காரணமாயிருக்கலாம் அந்த சினுங்கலுக்கு. விரல் பட்டதால் என நினைக்கும் அறியாமையை ஒரு மனிதனுக்கு உணர்த்த முடியாது இன்னொரு மனிதனால்.

தூண்டில் துளி

முதல் மடக்கு உள்ளே வர அனுமதிக்கவில்லை நான். கடைசி மடக்கு முடிந்தும் என்னை வெளியே வர அனுமதிக்கவில்லை அது.

சரிதல் நிமித்தம்

கால்வாய் பாலத்தின் கடைசியில் இருந்த பேச்சியம்மாவின் இட்லி கடை கூரை நேற்றின் மழையில் சரிந்து விட்டதாக அழுது கொண்டிருந்தாள். வெகுநாளாய் கூரையின் மேல் ஒட்டியிருந்த புங்க இலை ஒன்று மெதுவாக சரிந்து விழுந்தது ஓடிக் கொண்டிருந்த மழை நீரில்.

படுக்கையின் பாதி

பெரும்பாலும் தொந்தரவு செய்வது நீயல்ல உனக்காக நான் ஒதுக்கியிருக்கும் என் படுக்கையின் பாதி தான்.

கண்ணாடி கண்கள்

எப்போதோ எழுதிய கவிதையின் மூன்றாவது வரியை படிக்கையில் நானாக சிரித்தேன். யாரோ என்னை பார்ப்பது போலிருந்தது திரும்பிப் பார்த்தேன் ஜன்னலும் வாசலும் கூட சாத்தியிருந்தன. மேசையின் மேல் விரித்து வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டினேன் பார்த்தேன். இப்போது பார்க்கவில்லை யாரும்.

கூகுளில் கங்கை

'பாவம் கழுவ சிறந்த இடம் எது' கூகுளில் தேடுகிறது கங்கை.

இருள் சிரிக்கிறது

பெரும் வெளிச்சத்தில் நிகழ்கிறது பயம் போக்கும் பயிற்சி.

காதலிக்க விதி

காதலிப்பதற்கு விதி உண்டா? உண்டு காதலிப்பது மட்டும்.

அன்பின் குடைக்குள்

மழையொன்றில் நிகழ்ந்து கொண்டிருந்தது நனைதல். வேப்ப மரத்தடி வாழைப்பழ கிழவி ஓட்டை பிளாஸ்டிக் சாக்கை நீட்டினாள் "நனையாத ராசா" முடியுமா என்ன?!

புத்தன் இப்படியும் வரலாம்

பக்கத்து வீட்டு குழந்தை வந்து போயிருந்ததாம். என் அலமாரி கலைந்து கிடந்தது. பரவிக் கிடந்தன என் ஞாபகத்தின் ஆதாரங்கள். எனக்குள் இப்போது சலனத்தின் சம்பாஷனைகள். பெருஞ்சத்தத்தில் நிகழ்ந்தது ஒரு தியானம். புத்தன் இப்படியும் வரலாம்.

கடவுச்சொல்

உன்னிடம் பேசுவது முதல் தொடுவது வரை நட்பு என்பது கடவுச்சொல். அதற்குமேல் அனுபவித்தலுக்கு காதல். எல்லாமும் கடந்தும் தொடர்வதற்கு ஒரு வேளை கல்யாணம். இல்லையேல் மீண்டும் நட்பு.

வண்ணமயம்

தினம் தினம் வண்ண வண்ண ஆடைகள் வண்ணான் வீட்டுக் கொடியில்.

வளையல் சில்லுகள்

உடைந்து கிடக்கும் வளையல் சில்லுகளுக்கு உரிய கைகள் இப்போது புதிய வளையல் ஒன்றை அணிந்து கொண்டிருக்கலாம் இல்லையேல் மீதமிருக்கும் வளையல்களையும் உடைத்துக் கொண்டிருக்கலாம்.

ரத்த மணம்

இறைச்சி கடைக்குள் நுழைந்ததும் ரத்த நாற்றத்தின் குமட்டல். கழுத்துகளை பூப்பறிப்பது போல் பறித்துக் கொண்டிருந்தன அந்த பூப்படையாத விரல்கள். இந்த சகஜம் சந்தேகக் கறையானது அவன் முண்டா பனியனின் இருந்தவை போல். எல்லாம் வாங்கி முடித்து வெளியே வந்த போது அந்த சந்தேகக் கறையை கரைத்துப் போயிருந்தது ரத்த மணம்.

எல்லா நேரமும்

'எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது.' ஒரே மாதிரி இருந்து விட்டால் அது எப்படி எல்லா நேரமுமாய் ஆகும்.

ஆசுவாச பிரிவு

முதல் முறையாக தழுவிக் கொள்கிறீர்களா அது ஆசுவாசமாக நிகழட்டும். முதல் முறையாக பிரியப் போகிறீர்களா அதுவும் ஆசுவாசமாகவே நிகழட்டும்.

நாயின் மடியில்

அம்பேத்கர் சிலையின் கீழ் பால் குடித்துக் கொண்டிருந்தது வெள்ளை நாயொன்று கருப்பு நாயொன்றின் மடியில்.

வெற்றுப் பக்கங்கள்

எழுதித் தீர்த்த நோட்டுப் புத்தகத்தில் இன்னும் இருக்கின்றன நிறைய வெற்றுப் பக்கங்கள்.

அந்தரங்கத்தின் அடியில்

உங்கள் அந்தரங்க அறையின் அடியில் ஆயிரம் கால் தடங்கள்.

நனையும் தூக்குக்கயிறு

அடை மழையொன்றில் மெதுவாய் நனைந்து கொண்டிருந்தது, இரண்டாம் நாள் காரியத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் விவசாயி வீட்டின் தூக்குக் கயிறு.

வெட்கப்பட்ட வெள்ளைச்சட்டை

வெட்கப்பட்டு வேறாதாவது வண்ணத்தை ஈர்த்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறது நம்மூர் வெள்ளைச் சட்டை.

காதலாக இருக்கலாம்

முற்றும் தீர்ந்த காமத்தின் கோப்பையில் வழிகிறது புதிதாய் ஒரு துளி. அது காதலாக இருக்கலாம்.

நிஜ கொசு மருந்து

டெங்குவால் செத்த குழந்தையின்  உடல் எரியும் புகையில் முதல் முறையாக மூச்சுத் திணறியது 'ஏடிசு'விற்கு.

இசக்கிமுத்து சகிதத்தினர்க்கு

யார் யாருக்கோ என்னென்னவோ கிடைக்காமல் இருக்கும் இந்நாட்டில் இன்று மட்டும் இவர்களுக்கு மண்ணெண்ணெயும் தீப்பெட்டியும் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

செய்வதறியா செயல்

ஏன் இப்படி எனக்கு மட்டுமே தெரிந்த உன் ரகசிய வாசல் கதவினை சட்டென சாத்துகிறாய். வருவது நான் எனத் தெரியாமலா இல்லை வரக்கூடாது நான் எனத் தெரிந்தா. அந்தக் கதவின் தொலைந்து போன சாவியை நீயும் நானும் ஒரே இரவிலெல்லாம் கண்டு பிடித்திடவில்லை. தேடும் போது தெரியவும் இல்லை. நீ தொலைத்தது என்பதைத்தவிர வேறு நினைவும் இல்லை. ம்ம்ம் என்ன செய்ய செய்வதறியா செயலோ நான்.

மீண்டும் யாரோ

யாரோக்கள் தான். எதுவோ இணைக்கிறது எப்படியோ இணைகிறோம் யார்களாகவோ பாவித்துக் கொள்கிறோம். யாவிற்கும் தேடிக் கொள்கிறோம் நியாயங்கள் மட்டும். அதுவே நம்மை நாமாகவும் வைத்துக் கொள்கிறது எதற்காகவோ. எப்படியோ மறுபடியும் நாமாக நாமிருப்பது போலில்லை அவர்களாகவே அவர்கள். மீண்டும் யாரோவாகி விடுகிறார்கள். இந்த சக்கைகளில் மிஞ்சும் சாற்றை வரலாறு சொல்லுமாம் சொல்லட்டும்.. அதற்கு அது மட்டுமே தெரியும்.

எதற்காகவோ நீ

சும்மா எதையாவது பேசலாமென்று  தோன்றியது. பேசப் போவது எதையாவது தான் என்றாலும்  நீ தான் இருக்கிறாய் எதற்காகவோ.

புத்தர் முகத்தில் மாற்றம்

புத்தரின் முகத்தில் இப்போது சில மாற்றங்கள். விரிந்திருந்த உதடுகள் சற்று சுருங்கியிருக்கின்றன. நெற்றியிலும் இதே நிலை தான். சரி. உதட்டை விரித்து விடலாம் எனும் எண்ணத்தில் தொட்டால் மூக்கில் சூடான சுவாசங்கள். மிரண்டு போய் சற்று விலகி நின்று பார்த்தால் எப்படி இருப்பாரோ அப்படியே தான் இருக்கிறார் புத்தர். எனக்குத் தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதா இல்லை இலங்கை பர்மாக்களில் இருப்பவர்களுக்கும் தோன்றுமா. இல்லை அங்கு அரங்கேறுபவற்றின் பாதிப்பில் இப்படியெல்லாம் பாவிக்கிறாரா. பாதித்தவருக்குத் தானே தெரியும்.

அழியா தடங்கள்

வினைத்தொகையில்   கேள்விகள் நிகழ்கின்றன நமக்குள் நிகழ்வனவால். எப்படியோ ஆற்றி விடுகின்றன அவைகளை உடலின் எந்த மையத்திலோ புறப்படும் ஆழிகள். சரி இப்போது பிரச்சனை கேள்விகளா ஆழிகளா இரண்டுமில்லை இரண்டும் அழிக்காமலிருக்கும் தடங்களே. தடத்திற்கென்ன அவ்வளவு பலமா யாருக்குத் தெரியும் நாமா உருவாக்கினோம்

அணையா அனிதா

பேய் அரசாண்டது உரிமைகள் அரசு சொத்தானது மனிதி தலித் ஆனாள் மருத்துவம் வியாபாரம் ஆனது கொலை தற்கொலை ஆனது நீதி என்னவாகும்?!

கைபேசி

உண்மையில் கைக்குள் அடங்கியது உலகம் அல்ல, நாம் தான்! 

எது வரலாறு

எழுதப்படுபவைகளே வரலாறு, நிகழ்ந்ததெல்லாம் இல்லை!

பாலுமகேந்திராவிற்கு

அந்தக் கருந்திரை ஏராளங்காட்டியிருக்கும் அதுவரை வித்தையாயுணர்ந்தேன். அப்பணி உம் பார்வை வழி படர்ந்திட, பரவசங்கொண்டேன்... என் ஞானப்பிதாவாயும்மை பிள்ளையார் பிடித்துக் கொண்டேன் நாம் நேருக்குநேர் பார்த்தேயிருப்பதாயுணர்ந்தேன், யுணர்கிறேனெப்போதும் அந்தவொளிக்குப் பின்னாலிருப்பதும் விழியென்பதால்!!!

புத்தகமும் நானும்

எவ்வளவு குடித்தாலும்  தீரா கோப்பை நீ எவ்வளவு போதையானாலும்  தள்ளாடா  தாகம் நான்!

சுதந்திர பறவை

அழுக்காயிருந்தாலும்  ஆகாயத்தில் பறப்பதில்  வருத்தமில்லை என்பதை விட  தங்க கூண்டை வெறுக்கும்  பக்குவம் பெற்றதே  பெரு மகிழ்ச்சி! 

காக்கை அரசியல்

காக்கைகள்  பசியாறுவதற்காக வைக்கப்படுவதில்லை  சோறு.